Published:Updated:

மக்களின் வளர்ச்சியை பாதிக்கிறது ஊழல்: ராகுல் காந்தி

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.20-2010

சாதாரண மக்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஊழல் தட்டிப் பறித்துவிடுகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.##~~##

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் 83-வது அகில இந்திய மாநாட்டின் முதல் நாளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசுகையில், "ஊழல் விவகாரத்தில் கட்சி தலைவர் கூறிய கருத்துகள் நமக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.

சாதாரண மக்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஊழல் தட்டிப்பறித்துவிடுகிறது. பல்வேறு மந்திரிகளும், மாநில முதலமைச்சர்களும் இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள். கட்சியில் உள்ள தொண்டர்களுக்காக சற்று நேரம் ஒதுக்கும்படி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்களிடம் இருந்து இதுபற்றி புகார்கள் வருகின்றன. மந்திரிசபையை நடத்திச் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதை நான் அறிவேன். என்றாலும் தொண்டர்களுக்காக சிறிது நேரமாவது அவர்கள் செலவிட வேண்டும்.

நமது சொந்த தொண்டர்களிடமே தொடர்பு கொள்ள முடியாத நம்மால், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுடன் எப்படி தொடர்பு கொள்ள முடியும்? மக்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று நாம் பேசுகிறோம். ஆனால், உண்மையில் நமது கட்சிதான் அவர்களுடன் இணைந்து கொள்வது அவசியமாகும்.

வளர்ச்சிக்கும், வாய்ப்புகளை பகிர்ந்தளிப்பதற்கும் உள்ள தொடர்பை நாம் மறந்துவிடக்கூடாது. அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்போதுதான், மக்கள் நமது கட்சியில் இணைந்து கொள்ள முன் வருவார்கள்.

கடந்த காலத்தில் பசுமைப்புரட்சி, வங்கிகள் தேசியமயமாக்கல், கிராமப்புறங்களில் டெலிபோன் வசதி போன்ற திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் மக்களை அரசுடன் தொடர்பு கொள்ள வைத்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தற்போது கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி கற்கும் உரிமை சட்டம், மலைவாழ் மக்களுக்கு வனத்துறை நிலங்களில் உரிமை வழங்கும் சட்டம் போன்றவற்றை அமல்படுத்தி வருகிறது.

தேசிய பலநோக்கு அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதன் மூலம் ஏழை, எளிய மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தை உறுதிப்படுத்த முடியும்," என்றார் ராகுல் காந்தி.