Published:Updated:

தயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

Vikatan Correspondent
தயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்
தயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

புதுடெல்லி, செப்.8,2011

தயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரை குற்றமற்றவர் எனக் கூறவில்லை என்றும், தங்களது நிலை அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. ##~~##

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் நிலை குறித்த அறிக்கை, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்பு கடந்த 2-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் தயாநிதி மாறன் பங்கு குறித்த வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, 2ஜி வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ கண்டும் காணாமல் செயல்படுவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதில், இந்த வழக்கில் தயாநிதி மாறனை குற்றமற்றவர் என தாங்கள் கூறவில்லை என்றும், இந்த முறைகேட்டில் அவரின் பங்கு குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்று சிபிஐ-யை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

துவக்க நிலையில் உள்ள விசாரணையின்படி, சி.சிவசங்கரனிடம் இருந்து வாங்கப்பட்ட மலேசிய நிறுவனத்துடன் தயாநிதி மாறனும், அவருடைய சகோதரரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.

'இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆதாரம் திரட்டப்படவில்லை' என்று மட்டுமே அண்மையில் தாக்கல் செய்த சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்றும், அதற்கு தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்பது பொருளல்ல என்றும் வழக்கறிஞர் வேணுகோபால் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி:

தயாநிதிக்கு எதிராக ஆதாரமில்லை: சிபிஐ தகவல்