Published:Updated:

சங்கரன்கோவில்: பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை பெட்ரோல் ஊற்றி எரிப்பு! - அதிர்ச்சி சம்பவம்

குழந்தை
குழந்தை

சங்கரன்கோவிலிலுள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில், பிறந்து நான்கு நாள்களேயான குழந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை எரிக்கப்பட்டதற்கான காரண்ம் குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரெயில்வே பீடர் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் அந்தச் சாலையில் திரையரங்கம் ஒன்று இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கம் செயல்படாமல் மூடிக்கிடக்கிறது.

எரிந்த நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தை
எரிந்த நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தை

ஆனாலும், தியேட்டர் வளாகம் திறந்துகிடப்பதால், பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதுண்டு. இன்று காலையில் அங்கு வாக்கிங் சென்றவர்கள், எரிந்த நிலையில் ஏதோ கிடப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அருகில் சென்று பார்த்தபோது, ஒரு பச்சிளம் குழந்தை பாதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ராமநாதபுரம்: ஒன்றரை வயதுக் குழந்தை எரித்துக் கொலை! - போதையில் தந்தையின் வெறிச்செயல்

குழந்தை எரிந்து கிடப்பதைப் பார்த்தவர்கள், சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் வருவதற்குள் குழந்தை இறந்துகிடக்கும் தகவல் பரவியதால் அந்தப் பகுதியில் மக்கள் கூடினார்கள்.

சங்கரன்கோவில் காவல் நிலையம்
சங்கரன்கோவில் காவல் நிலையம்

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், நகர காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பாதி உடல் கருகிய நிலையில் கிடந்த குழந்தை பிறந்து நான்கு நாள்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது

போலீஸ் விசாரணையில் அருகிலுள்ள தெருவுக்கு சமீபத்தில் குடிவந்த சண்முகவேல் என்பவரின் 20 வயது மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. திருமணம் ஆகாத அவருக்குக் குழந்தை பிறந்ததால், அதை எரித்து விட்டாரா என போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பின்னரே குழந்தையின் மரணம் குறித்துக் கூடுதல் தகவல் தெரியும். அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.
சங்கரன்கோவில் காவல்துறை

இதற்கிடையே, குழந்தை இறந்துவிட்டதால், அதைப் புதைக்க வழி தெரியாமல் எரிக்க முயன்றதால் சர்ச்சையில் சிக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். எரிந்த நிலையில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்திருக்கின்றனர். அதன் முடிவு தெரிந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள போலீஸார் தயாராகிவருகின்றனர்.

பச்சிளம் குழந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பரபரப்பாக விவாதித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு