Published:Updated:

எனக்கு ஞாபக மறதி உண்டு: சிதம்பரம் சமாளிப்பு

Vikatan Correspondent
எனக்கு ஞாபக மறதி உண்டு: சிதம்பரம் சமாளிப்பு
எனக்கு ஞாபக மறதி உண்டு: சிதம்பரம் சமாளிப்பு

புதுடெல்லி, அக்.01,2011

எனக்கு ஞாபக மறதி உண்டு: சிதம்பரம் சமாளிப்பு

2ஜி குறிப்பு மற்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், "எனக்கு ஞாபக மறதி உள்ளது. கணக்கிலும் பலவீனம் உள்ளது," என்று சமாளித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர செய்தியாளர் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் 2ஜி விவகாரம் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது.

2ஜி தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் மழுப்பலாகவும், நகைச்சுவையுடனும் பதிலளித்து தவிர்த்துவிட்டார், ப.சிதம்பரம்.

பிரணாப் முகர்ஜி உடன் உரசலுக்கு பின்பு ஏற்பட்ட சமரசம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, "நீங்கள் சொல்வதுபோல் எந்த ஒரு சம்பவமும் உள்துறை அமைச்சகத்தில் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கு ஞாபக மறதி உள்ளது.
எனது உள்துறை அமைச்சகத்தில் என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை," என்றார்.

 2ஜி விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால் நீங்கள் எத்தனை தடவை ராஜினாமா செய்ய முன்வந்திருப்பீர்கள்? என்றதற்கு, "நினைவாற்றல் குறைவாக இருப்பதால், நான் எண்ணிக்கையிலும் பலவீனமாக இருக்கிறேன். இப்போது நான் எண்ணுவதற்கு கற்று வருகிறேன். உங்களது பல கேள்விகள் உள்துறை அமைச்சகத்துக்கு சம்பந்தமானவை அல்ல,'' என்றார் ப.சிதம்பரம்.

மாவோயிஸ்ட் பிரச்னை...

தொடர்ந்து 2ஜி குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு உள்துறை அமைச்சகம் தொடர்பாக அவர் கூறுகையில், "மாவோயிஸ்டுகளள ஒடுக்குவதற்கு தற்போது 9 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 6 எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் அல்லது அதற்கு இணையான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அதேபோல், தற்போது 71 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கூடுதலாக 5 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட இருக்கிறார்கள்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் போலீஸ் நிலையங்கள் கட்டவும், போலீஸ் நிலையங்களை வலுப்படுத்தவும், போலீஸ் படையை வலுப்படுத்தவும் மத்திய அரசு ரூ.100 கோடி அனுமதித்து உள்ளது.

பாக். மீது சாடால்...

ஹக்கானி இயக்கம் உள்பட பல பயங்கரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக இந்தியா ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறது. ஆனால், இப்போதுதான் தாமதமாக அமெரிக்கா இதை கண்டுபிடித்துள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நாம் தேடி வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர் அங்கு இல்லை என்று பொய் சொல்லி வருகிறது," என்றார்.

அத்வானியின் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என்றதற்கு, "அத்வானியின் ரத யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனால், பிஜேபியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்தால் நிச்சயம் பரிசீலிக்கப்படும்," என்றார்.

அப்சல் குரு கருணை மனு நிலை...

மேலும், "நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு மீது ஜனாதிபதி இன்னும் முடிவு எடுக்க வில்லை.

ஆகவே அதுபற்றி இப்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட வில்லை என்று கருதுகிறேன்," என்றார் ப.சிதம்பரம்.