Published:Updated:

2ஜி: பிரணாப், சிதம்பரத்துக்கு பவார் அறிவுரை

Vikatan Correspondent
2ஜி: பிரணாப், சிதம்பரத்துக்கு பவார் அறிவுரை
2ஜி: பிரணாப், சிதம்பரத்துக்கு பவார் அறிவுரை

தானே, அக்.1,2011
 

2ஜி: பிரணாப், சிதம்பரத்துக்கு பவார் அறிவுரை

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எழுந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் அனைத்து விவரங்களையும் மக்களிடம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, ப.சிதம்பரமும் பிரணாப் முகர்ஜியும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"சிறந்த நிர்வாகத்தின் நலனை கருதி, இருவரும் இதைச் செய்ய வேண்டும் என்ற அவர், எத்தகைய சர்ச்சையாக இருந்தாலும், அது ஊடகத்தால் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது நமது நண்பர்களால் கிளறிவிடப்பட்டதாக இருந்தாலும் சரி, இது பொதுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த உண்மைகளை எடுத்துரைப்பதுதான் நல்லது," என்றார் சரத்பவார்.

மேலும், "அந்தக் குறிப்பில் பிரணாப் முகர்ஜி என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. அவரது குறிப்பை நான் பார்க்கவில்லை. அது, நீதிபதியின் கையில் உள்ளது. எப்போது ஒருவர் தவறு செய்ய வில்லையோ, தவறான எண்ணம் உருவாகுமானால் அதை விளக்குவது அரசின் கடமை," என்றார் மூத்த அமைச்சரான சரத்பவார்.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சர் ப.சிதம்பரத்தின் அணுகுமுறையை குறைகூறும் விதமாக, பிரதமர் அலுவலகத்துக்கு நிதியமைச்சகம் அனுப்பிய ஒரு கடிதக் குறிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்தப் பிரச்னையை சமசரசம் ஏற்பட்டுவிட்டதாக கூறும் வகையில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.