Published:Updated:

உயர்நிலைக் கமிட்டி கலைக்கப்படாது: அண்ணா குழு

காஸியாபாத், அக்.29,2011

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உயர் நிலைக் கமிட்டி கலைக்கப்பட மாட்டாது என்று அண்ணா ஹஜாரே குழு இன்று திட்டவட்டமாக தெரிவித்தது.

அண்ணா ஹஜாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கேஜரிவால் மற்றும் கிரண் பேடி ஆகியோர் சமீபகாலமாக பல்வேறு நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவருகின்றனர்.

இதன் எதிரொலியாக, ஹஜாரேவின் உயர் மட்டக் குழு விரிவுபடுத்தப்படக்கூடும் அல்லது மாற்றி அமைக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அண்ணா ஹஜாரே கலந்துகொள்ளாத இக்கூட்டத்தில், தங்கள் குழுவினர் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உயர் நிலைக்குழு விவாதித்தது.

இக்கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், உயர் நிலைக்குழுவை கலைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தங்கள் குழுவின் மீது வீண் பழி சுமத்தி, மத்திய அரசு தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும், மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.