Published:Updated:

2ஜி சாட்சிகளுக்கு நிர்பந்தம்: சிபிஐக்கு நோட்டீஸ்

Vikatan Correspondent

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாட்சிகளை புலனாய்வு அமைப்பு நிர்பந்திப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சி.பி.ஐ.க்கு விளக்கம் கேட்டு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பு, அவர்களை சந்தேகத்துக்கிடமான முறையில் சிபிஐ அழைக்கிறது. அவர்கள் நீதிமன்றத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லி நிர்பந்தப்படுத்துகிறது. அவர்கள், முன்பு சிபிஐயிடம் அளித்த வாக்குமூலங்களை காண்பித்து சொல்லி கொடுக்கிறது.

இதுபோன்று, சாட்சிகள் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,' என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இம்மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, இந்தப் புகாருக்கு 23-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜித் மேமன், 'நினைவூட்டுவது என்ற பெயரில், சாட்சிகளை சிபிஐ அலுவலகத்துக்கு சிபிஐ அழைத்து செல்வது, சட்டத்தின் பார்வையில் ஏற்புடையது அல்ல,' என்று வாதிட்டார்.

முன்னதாக, சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வாரம் அரசுத் தரப்பு சாட்சியாக ரிலையன்ஸ் குழும தலைவர் ஏ.என்.சேதுராமன் சாட்சி அளித்தார்.

அப்போது அவர், 2 நாட்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான முறையில் சிபிஐ அலுவலகத்துக்கு தன்னை சிபிஐ அழைத்து சென்றதாகவும், தான் முன்பு அளித்த வாக்குமூலத்தை காண்பித்து, அதையே நீதிமன்றத்தில் சொல்லச் சொன்னதாகவும் கூறியிருந்தார்.

அந்தப் பின்னணியில் வினோத் கோயங்காவின் இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.