Published:Updated:

அணை பிரச்சினை: பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும்: திருமாவளவன்

Vikatan Correspondent
அணை பிரச்சினை:  பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும்: திருமாவளவன்
அணை பிரச்சினை: பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும்: திருமாவளவன்

தேனி, ஜன.8:  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து பிரதமரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

அணை பிரச்சினை:  பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும்: திருமாவளவன்

இது குறித்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் வல்லுனர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் தொழில் நுட்ப அறிக்கையில் பூகம்பம் போன்ற பாதிப்புகளால் அணை பாதிக்கப்படவாய்ப்பு இல்லை என்றும், அணை பலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தால் தமிழ்நாட்டிற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதால், அந்த அறிக்கையை திசை திருப்பும் வகையில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள மாநில முதல்-மந்திரியும், முன்னாள் முதல் மந்திரியும் பேசி வருகிறார்கள். அவர்கள் புதிய அணைக் கட்டுவோம் என்பது இந்திய இறையாண்மைக்கு சவால் விடுவதாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மாநிலத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பிரதமரை சந்திக்கிறார்கள். இந்த விஷயத்தில் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். மேலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன். முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக நாம் போராட வேண்டும், மாறாக இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்று இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.