Published:Updated:

'தமிழகத்தில் 52% வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை'

'தமிழகத்தில் 52% வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை'
'தமிழகத்தில் 52% வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை'
'தமிழகத்தில் 52% வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை'

சென்னை: தமிழகத்தில் 51.7 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை என்பதும், 87 சதவீத வீடுகளில் டி.வி. பெட்டி உள்ளன என்பதும் 2011-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் ஆகும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டு கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது. 2011-ம் ஆண்டுக்கான வீட்டு கணக்கெடுப்புப் பட்டியல் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதனை மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் வெளியிட, தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ண பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் வீட்டு கணக்கெடுப்பில் உள்ள விவரங்கள்:

* தமிழகத்தில் கூரை வீடுகளின் எண்ணிக்கை 26 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேபோல், மண் சுவர் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை 33 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேவேளையில், காங்கிரீட் வீடுகளின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிமெண்ட் தளம் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை 58 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

* வீடுகளில் அறைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதன் மூலம் கூட்டுக்குடும்பங்கள் குறைந்து தனிக்குடும்பங்கள் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

* சராசரியாக, ஒரு குடும்பத்தில் 4 அல்லது 5 பேர் தான் உள்ளனர். தனிக்குடும்பங்களின் எண்ணிக்கை 68 சதவீதத்தில் இருந்து 78 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

* தமிழ்நாட்டில் 74 சதவீத வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் வசிக்கிறார்கள். சென்னையில் 48 சதவீத வீடுகளில் மட்டுமே உரிமையாளர்கள் உள்ளனர். எஞ்சிய 52 சதவீத வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.

* மாநிலத்தில் 93 சதவீத வீடுகளில் மின்சாரம் உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்துகிறார்கள்.

* ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளது.

* 64 சதவீத வீடுகளில் வீட்டின் உள்ளேயே குளியலறை வசதி இருக்கிறது.

* தமிழகத்தில் 48.3 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதிள்ளது. இது, இந்தியாவின் சராசரியான 46.9 சதவீதத்தை விட அதிகம்.

கடந்த 2001-ம் ஆண்டு 64 சதவீதமாக இருந்த கழிப்பறை வசதிகள் இல்லாத வீடுகள் எண்ணிக்கை இப்போது 51.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் சென்னை (95%) மற்றும் கன்னியாகுமரி (87%) மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

கழிப்பறை வசதி இல்லாத மக்கள் பொதுக்கழிப்பறையிலும், திறந்தவெளியிலும் மலம் கழிக்கிறார்கள். அதிகபட்சமாக, அரியலூரில் 80 சதவீதம் பேரும், தருமபுரியில் 79 சதவீதம்பேரும் மலம் கழிக்க திறந்தவெளியைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.

* சமையலுக்கு 48 சதவீதம் பேர் கேஸ் பயன்படுத்துகின்றனர். 44 சதவீதம் பேர் விறகு மற்றும் வரட்டியை எரிபொருளாளாக எடுத்துக்கொள்கின்றனர். 7 சதவீதம்பேர் மண்ணெண்ணெயை பயன்படுத்துகிறார்கள். சென்னையில் 82 சதவீத வீடுகளில் சமையல் கேஸ் உள்ளது. குறைந்த அளவாக, அரியலூரில் 22 சதவீத வீடுகளில் மட்டுமே கேஸ் இருக்கிறது.

* தமிழகத்தில் வங்கிச்சேவையை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை 52.5 சதவீதம் ஆகும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வங்கிச்சேவை பயன்பாடு 70 சதவீதம் வரை உள்ளது.

* வீடுகளில் ரேடியோ (செல்போன் எப்.எம். ரேடியோ தவிர) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 44 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

* தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி. பெட்டி உள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இந்த எண்ணிக்கை வெறும் 23 சதவீதம்தான். டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக டி.வி. உள்ள மாநிலம் தமிழகம்தான். டெல்லியில் 92 சதவீத வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி உள்ளது.

* 5 சதவீத வீடுகளில் மட்டுமே கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் இருக்கிறது.

* 2001-ம் ஆண்டு 27 சதவீத வீடுகளில்தான் லேண்ட்லைன் டெலிபோன், செல்போன் இருந்தன. ஆனால், இப்போது 75 சதவீத வீடுகளில் செல்போன்கள் இருக்கின்றன. அகில இந்திய அளவில் 63 சதவீதம் வீடுகளில் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளன.

* 32 சதவீத வீடுகளில் இரு சக்கர வாகனங்களும், 4 சதவீத வீடுகளில் 4 சக்கர வாகனங்களும், 45 சதவீத வீடுகளில் சைக்கிள்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 85 லட்சமாக அதிகரித்துள்ளது.

* குடியிருக்க வீடு இல்லாமல் தெருவில் வாழ்க்கை நடத்துவோர் பற்றிய கணக்கெடுப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.

தமிழக வீட்டுவசதி பட்டியல் குறித்து முழு விவரங்களை தெரிந்துகொள்ள - http://www.census.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தை நாடலாம்.