Published:Updated:

ஊழலில் முதலிடம்..! இந்தியாவின் வல்லரசு கனவு... கானல் நீரா?! #VikatanData

ஊழலில் முதலிடம்..! இந்தியாவின் வல்லரசு கனவு... கானல் நீரா?!  #VikatanData
ஊழலில் முதலிடம்..! இந்தியாவின் வல்லரசு கனவு... கானல் நீரா?! #VikatanData

ந்தியா எந்தத் துறையில் முதலிடத்துக்குச் செல்கிறதோ இல்லையோ, ஊழலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கான ஆதாரத்தை 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல்' என்றும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"கவர்ல அமெளன்ட் வச்சுக் கொடுக்குறதுக்குதான் கவர்மென்டுன்னு சொன்னாங்க" என்று 'இந்தியன்' படத்தில் கவுண்டமணி நகைச்சுவைக்காக சொல்வார். ஆனால், தற்போது அதை சற்று உரக்கச் சொல்லி இருப்பதுடன், இந்தியாவில் அதுவே நடைமுறையாக உள்ளது என 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம்' தெரிவித்துள்ளது. 'குளோபல் கரப்ஷன் பாராமீட்டர்' என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசிய நாடுகளில் வசிக்கும் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 


"ஊழலில் எந்த நாடு முதலிடத்தில் இருக்கிறது?", "எங்கெல்லாம் லஞ்சம் தலை விரித்தாடுகிறது?", "லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த இந்திய மக்களின் பார்வை எப்படி இருக்கிறது?", "எந்தப் பதவியில் உள்ளவர்கள் எந்த மாதிரியான ஊழல்களைச் செய்வதாகக் கருதுகிறீர்கள்?" என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் வெளியாகியுள்ள தகவல்கள் அறிக்கையாக வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை சொல்லும் செய்தி, இந்திய மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கருத்துக் கணிப்பில் இந்தியா தொடர்பான விவரங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் ஊழல் அதிகரித்து விட்டதாக 41 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் சீனா 71 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நன்றாக இருக்கிறது என 53 சதவிகித மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்தியாவைப் பொறுத்தவரை ஊழலில் 69 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.  65 சதவிகிதத்துடன் வியட்நாம் இரண்டாம் இடத்திலும், 40 சதவிகிதத்துடன் தாய்லாந்து மூன்றாமிடத்திலும் உள்ளன. ஊழல் மிகவும் குறைந்த நாடாக, ஏறக்குறைய இல்லாத நிலை, 0.2 சதவிகிதத்துடன் ஜப்பான் திகழ்கிறது. அதனால்தான் பொருளாதாரத்தில் ஜப்பான் முன்னேறி உள்ளது. ஹாங்காங், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகளில் எல்லாம் ஊழல் குறைந்த சதவிகிதத்திலேயே உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அடையாள அட்டைகள் வழங்குவதற்கும், அரசு மருத்துவமனைகளிலும்தான் அதிகபட்சமாக 59 சதவிகிதம் அளவுக்கு மக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாகத் தெரிய வந்துள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கு லஞ்சம் பெறுவது 53 சதவிகிதமும், காவல்துறையினர் லஞ்சம் பெறுகிறார்கள் என்று 55 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். இதில் வேடிக்கையான விந்தை என்னவென்றால், நீதி கிடைக்கும் என்று மக்கள் நாடிச் செல்லும் இந்திய நீதிமன்றங்களில்கூட லஞ்சம் வழங்க வேண்டியுள்ளதாக 45 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் லஞ்சம் பெறப்படுவதாக 58 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற பதவிகளில் இருப்போரில் சிலர் மட்டும் ஊழல் செய்வதாக 36 சதவிகிதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். எம்.பி, எம்.எல்.ஏக்களில் 43 சதவிகிதத்தினரும், அரசு அதிகாரிகளில் 40 சதவிகிதத்தினரும், உள்ளாட்சிப் பதவிகளில் 38 சதவிகிதத்தினரும் ஊழல் செய்வதாக தெரிவித்துள்ளனர். வேடிக்கையான விஷயம் என்னவெனில், பெரும் செல்வந்தர்களாக இருப்போரில் 41 சதவிகிதத்தினர் ஊழலில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள தகவல் பேரதிர்ச்சியாக உள்ளது.

"இளைஞர்களே, கனவு காணுங்கள். அந்தக் கனவை நனவாக்க தினமும் அயராது பாடுபடுங்கள். இந்தியாவை 2020-ல் வல்லரசாக உருவாக்க இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்" என்று மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவுரை வழங்கிச் சென்றார். இந்தியாவில் கலாமின் கூற்று பலிக்க வேண்டுமானால், ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும். தெற்காசிய அளவிலான நாடுகள் பட்டியலில் ஊழலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் எப்படி வல்லரசாக உருவாக்க முடியும் என நம் நாட்டு இளைஞர்கள் சோர்வடைந்து உள்ளனர். இளைஞர்கள் தன்னெழுச்சியாக பொங்கியெழுந்தால் மட்டுமே வல்லரசு கனவு சாத்தியம் என்பதே நிதர்சனம்!

- சி.வெங்கட சேது,
தகவல்: கௌதம் தத்தா
இன்ஃபோகிராபிக்ஸ்: ராஜூ முருகேசன்