Published:Updated:

`உதவி செய்யக்கூட ஆள் இல்லை.. சாக வேண்டியதிருக்கும்!' -இரானில் சிக்கித் தவிக்கும் 940 தமிழக மீனவர்கள்

இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள்
இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள்

இரான் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. அதனால் அந்நாட்டு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய நகரங்களின் விமான சேவைகளை நிறுத்தி வைத்திருக்கிறது.

சீனாவை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதல், பிற நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 40 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த நோயின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில் பிற நாடுகளில் இதன் பாதிப்பு அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் குறைகிறது... கவலை அளிக்கும் மற்ற நாடுகளின் நிலவரம்!

குறிப்பாக, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக இருக்கிறது. இரான் நாட்டில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த நேரடியாகக் களத்தில் இறங்கிப் பாடுபட்ட இரான் நாட்டின் சுகாதாரத் துறை துணை அமைச்சரான ராஜ்ஹரீர்ஸி மற்றும் குடும்ப நலத்துறைக்கான துணை அதிபரான மசவுமி இப்திகார், அந்த நாட்டுக்கான துணைத் தூதர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

அச்சத்தில் தமிழக மீனவர்கள்
அச்சத்தில் தமிழக மீனவர்கள்

அதனால் இரான் அரசு சில நகரங்களில் இருந்து விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், இரானில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள் 940 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்குதல், மறுபக்கம் உணவுக்குக் கூட வழியில்லாத நிலை என அவர்கள் தவித்து வருகிறார்கள்.

இரான் நாட்டின் கீஷ் தீவில் 340 தமிழக மீனவர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதி இன்றி தவிப்பில் உள்ளனர். அதேபோல அந்தத் தீவுக்கு அருகில், சுமார் ஒரு மணி நேரப் பயண தூரத்தில் கடற்கரையோரம் 600 தமிழக மீனவர்கள் தத்தளித்து வருகிறார்கள். 

வீடியோவில் பேசிய படகு கேப்டன் ஆரோக்கியம்
வீடியோவில் பேசிய படகு கேப்டன் ஆரோக்கியம்

இதுவரை அவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்ற போதிலும், ``தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்குக் கூட ஆள் இல்லாமல் சாக வேண்டியதிருக்கும். அதனால் தங்களை இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும்" என வீடியோ மூலம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று கீஷ் தீவில் சிக்கியுள்ள படகின் கேப்டன் ஆரோக்கியம் என்பவர் உருக்கமாகப் பேசும் வீடியோ கிடைத்ததும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி உடனடியாக இது குறித்து மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியுள்ளார். 

ஜஸ்டின் ஆன்றணி
ஜஸ்டின் ஆன்றணி

மத்திய அரசு, தூதரக அதிகாரிகள் மூலம் மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பட்டி பழனிசாமி ஆகியோரின் கவனத்துக்கும் இந்த விவகாரத்தை ஜஸ்டின் ஆண்டனி எடுத்துச் சென்றுள்ளார். அவர்களை விரைவில் மீட்டுவர வேண்டும் என உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு