Election bannerElection banner
Published:Updated:

“இந்து சர்க்கார்” - ஒரு எமர்ஜென்சி விளையாட்டு

“இந்து சர்க்கார்” - ஒரு எமர்ஜென்சி விளையாட்டு
“இந்து சர்க்கார்” - ஒரு எமர்ஜென்சி விளையாட்டு

“இந்து சர்க்கார்” - ஒரு எமர்ஜென்சி விளையாட்டு

ல எதிர்ப்புகளைத் தாண்டி இன்று ரிலீஸாகியிருக்கிறது “இந்து சர்க்கார்” திரைப்படம். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டில், அவர் கொண்டுவந்த எமெர்ஜென்சி காலத்துக் கதை என்பதால் பரபரத்தது காங்கிரஸ் வட்டாரம். படத்தின் டிரெய்லரில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி சாயல்கள் வெளிப்படையாகவே தெரிந்ததால் காங்கிரஸ் வட்டாரம் மேலும் அதிர்ந்தது. இதற்கெல்லாம் ஹைலைட்டாக 14 காட்சிகளை அதிரடியாக நீக்கச்சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சென்சார் போர்டு. ஆடிப்போன இயக்குநர் மதுர் பண்டார்கர், சமூக வலைதளங்களில் கதறிவிட்டார். படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இத்தனை சச்சரவு மேகங்கள் சூழ்ந்த நிலையில்தான் படம் இன்று வெளியாகியுள்ளது. 

யார் இந்த மதுர் பண்டார்கர்?

பாலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவர் மதுர் பண்டார்கர். தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பலமுகங்கள் இவருக்கு உண்டு. ‘ரங்கீலா’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு இவரை நன்றாகத் தெரிந்திருக்கும். இவர் இயக்கத்தில் உருவான “டிராஃபிக் சிக்னல்”, “பேஜ்-3”, “சாந்தினி பார்” திரைப்படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. இந்திய அளவிலும் முக்கிய இயக்குநராகக் கவனிக்கப்பட்டவர் இவர். 'பண்டார்கரின் படங்கள் சமூகத்தின் அவலங்களைப் பேசுகிறது' என பாசிட்டிவ் பார்வையையும் பெற்றிருந்தார். அதே நேரத்தில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வந்தவர் இவர். “ஹீரோயின்” என்ற மெகா பட்ஜெட் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இவருக்கு பிரச்னை வெடித்தது. "கர்ப்பமாக இருந்ததை மறைத்து விட்டார் ஐஸ்வர்யா ராய்", எனக்கூறி படத்தையே டிராப் செய்யும் அளவுக்குப் போனது விவகாரம்.

"படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி என்னைப் பலமுறை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கினார்" என மதுர் பண்டார்கர் மீது குற்றம் சுமத்தினார் ப்ரீத்தி ஜெயின் என்ற நடிகை. 2011-ல் இவ்வழக்கின் மீது விசாரணை நடத்தப்பட்டு, மதுர் பண்டார்கருக்கு எதிராகக் கைது நடவடிக்கைவரை சென்றது. பின்னர் மதுர் பண்டார்கர் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. பிறகு, பண்டார்கரை கொலைசெய்யத் திட்டம் போட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ப்ரீத்தி ஜெயின் சிறைத் தண்டனை பெற்றார். இதுபோன்ற பின்னணியைக் கொண்டிருந்தாலும் திரையுலகில் மதுர், கவனிக்கப்படுபவராகவே இருந்து வந்தார். 

“இந்து சர்க்கார்” எனும் அஸ்திரம்!

இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீஸர், ட்ரெய்லர் என ஒவ்வொன்றாக வெளிவரும்போதும், கூடவே பல பிரச்னைகளையும் தோள்மேல் கைபோட்டு அழைத்துவந்து இயக்குநர் மதுர் பண்டார்கருக்கு அருகில் உட்கார வைத்துவிடும். இப்படத்தில் சஞ்சய் காந்தியாக நீல் நிதின் முகேஷ்-ம் (‘கத்தி’ பட வில்லன்), இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் சுப்ரியா வினோத்தும் நடித்துள்ளனர். படத்தின் முக்கியக் கதாபாத்திரமான இந்து சர்க்கார், கதாபாத்திரத்தில் கீர்த்தி குல்கர்னி நடித்துள்ளார். 'இவரைச் சுற்றித்தான் கதை நகரும்' என முன்னரே கூறியிருந்தார் மதுர் பண்டார்கர். இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளவர் குஜராத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷேல். பிரபல மூத்த நடிகர் அனுபம் கேரும் படத்தில் இருக்கிறார். 

இப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே காங்கிரஸ் மட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி “இந்து சர்க்கார்” படத்தின் ப்ரமோஷனுக்காக புனே சென்றிருந்தனர் படக்குழுவினர். அங்கிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் நிகழ்ச்சி நடைபெற இருந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள் ஓட்டலை முற்றுகையிட்டனர். " 'இந்து சர்க்கார்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மீறினால் தியேட்டர்களில் இப்படத்தை ஓட விடமாட்டோம்", என அவர்கள் கோஷமிட்டனர். உடனடியாக, இயக்குநர் மதுர் மற்றும் உடன் இருந்த நடிகர்கள் ஓட்டலில் இருந்த ஒரு அறைக்குள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து இயக்குநர், நடிகர்களை மீட்டனர். இந்த நிகழ்வு நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “இந்து சர்க்கார்” படம் மீதான சர்ச்சைகளும் முற்றியது. ஒருகட்டத்தில், “இப்படம் சிலரது நேரடி நிதி உதவியால் உருவாக்கப்பட்டது”, எனக் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பி.ஜே.பி. மீது மறைமுகமாகக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதில் அளித்த இயக்குநர் மதுர், “நாங்கள் பி.ஜே.பி-யிடம் ஸ்பான்சர் பெறவில்லை. இது உண்மை சம்பவங்களும், கற்பனைகளும் கலந்த ஒரு திரைப்படம்.. அவ்வளவுதான்”, என பதிலடி தந்தார். 

இந்தச் சிக்கலை மேலும் வலுவாக்கும்விதமாக உள்ளே நுழைந்தார் பிரியா சிங் பால் என்ற பெண். 48 வயதான இவர், தன்னை சஞ்சய்காந்தியின் மகள் எனக் கூறிக்கொண்டார். "என் தந்தையைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கும் இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அதிரடி கிளப்பினார் பிரியா. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "படம் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கக்கோரும் அளவிற்கு படத்தில் ஒன்றும் தவறான விஷயங்கள் இல்லை" எனக்கூறி “இந்து சர்க்கார்” படத்திற்கு தடைவிதிக்க மறுத்ததுடன், பிரியா சிங்கின் மனுவையும் தள்ளுபடி செய்து பிரச்னையை முடித்து வைத்தது. 

எது எப்படியோ... தனக்கு முன்னால் இருந்த சிக்கல்களை எல்லாம் உடைத்து இன்று நாடு முழுவதும் வெற்றிகரமாகத் திரைக்கு வந்துள்ளது, “இந்து சர்க்கார்”. மதுர் பண்டார்கர், நீல் நிதின் முகேஷின் ரசிகர்களைவிட, இப்படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்த "சிலருக்கு" அது விருந்து அளித்ததா என்பதுதான் நமது கேள்வி?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு