Published:Updated:

நீதி வழங்கத்தானே நீதிமன்றங்கள்?

நீதி
பிரீமியம் ஸ்டோரி
நீதி

என மூத்த பெண் அரசியல்வாதியான பிருந்தா காரத் கடுமையான கடிதம் ஒன்றை பாப்டேவுக்கு எழுதியுள்ளார்.

நீதி வழங்கத்தானே நீதிமன்றங்கள்?

என மூத்த பெண் அரசியல்வாதியான பிருந்தா காரத் கடுமையான கடிதம் ஒன்றை பாப்டேவுக்கு எழுதியுள்ளார்.

Published:Updated:
நீதி
பிரீமியம் ஸ்டோரி
நீதி
``இங்க பாரு... நீ அந்தப் பொண்ணை ஏமாத்திக் கெடுத்திருக்கே! ஒழுங்கு மரியாதையா அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, நாங்க உனக்கு உதவி செய்வோம். இல்லேன்னா ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். அரசாங்க வேலையில இருக்கே! அந்த வேலை போயிடும். கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கா, சொல்லு! அப்புறம் வெளியில போய், நாங்க உன்னைக் கட்டாயப்படுத்தினதா பேசக்கூடாது.''

- இது ஏதோ ஆலமரத்தடிப் பஞ்சாயத்தில், பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து, கையில் சொம்பு வைத்துக்கொண்டு ஒரு நாட்டாமை சொன்ன தீர்ப்பு இல்லை. நம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கேட்ட வார்த்தைகள்தான் இவை. பெண்கள் தினத்தை உலகம் கொண்டாடும் நேரத்தில், இரண்டு வழக்குகளில் சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கிறார் பாப்டே.மோகித் சுபாஷ் சவான் என்பவர், 23 வயதுள்ள மகாராஷ்டிரா அரசு ஊழியர். இவர் தன் தூரத்து உறவினரான 16 வயது பள்ளிச்சிறுமியை மிரட்டி, பாலியல் வன்முறை செய்தார். `இதை வெளியில் சொன்னால் உன்னை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிடுவேன். உன் சகோதரனைக் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டியே பலமுறை இப்படிச் செய்திருக்கிறார். வேதனை தாங்காமல் அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்றபோதுதான் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்துள்ளது. மோகித் சுபாஷின் அம்மா அதன்பின் சமாதானம் பேசி, `பெண்ணுக்கு 18 வயதானதும் என் பையனுக்குத் திருமணம் செய்துவைக்கிறேன்' என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அந்தப் பெண் இதற்கு சம்மதிக்காவிட்டாலும், தங்கள் பெண்ணின் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் சம்மதித்தனர்.

எஸ்.ஏ.பாப்டே
எஸ்.ஏ.பாப்டே

ஆனால், மோகித் சுபாஷ் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண் புகார் தர, போலீஸ் வழக்கு பதிவு செய்கிறது. உடனே மோகித் சுபாஷ் நீதிமன்றத்துக்குப் போய், 'என்னைக் கைது செய்தால் வேலை போய்விடும்' என்று காரணம் கூறி, முன்ஜாமீன் பெறுகிறார். ஆனால், பம்பாய் உயர் நீதிமன்றம் இதைக் கண்டித்து, அவரின் முன்ஜாமீனை ரத்து செய்கிறது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தை நாடினார் மோகித் சுபாஷ். அந்த வழக்கு விசாரணையில்தான் இப்படிக் கேட்டார் நீதிபதி பாப்டே. இன்னும் தீர்ப்பு சொல்லாவிட்டாலும், மோகித்தைக் கைது செய்வதற்கு ஒரு மாதம் தடை விதித்திருக்கிறது, பாப்டே தலைமையிலான பெஞ்ச்.

பாலியல் வன்முறையே பெருங்குற்றம். அதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டுவதும் குற்றம். பள்ளிச்சிறுமிமீது இந்த வன்முறையை நிகழ்த்துவது போக்சோ சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால், இந்தக் குற்றங்களுக்கான தண்டனையை அளிப்பதற்குப் பதிலாக `திருமணம்' என்ற லைசென்ஸை அளிக்க நினைக்கிறது நீதிமன்றம். பாப்டே சர்ச்சைக்குரிய கேள்வி கேட்ட இன்னொரு வழக்கும் அதே நாளில்தான் விசாரணைக்கு வந்தது.

கணவன் - மனைவி போல வாழ்ந்த ஒரு தம்பதி. `திருமணத்துக்கு முன்பு தாம்பத்ய உறவு தவறு என நான் மறுத்தேன். உடனே ஒரு கோயிலில் வைத்து என்னைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகள் நாங்கள் தம்பதியராக வாழ்ந்தோம். ஆனால், இப்போது அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவே இல்லை என்று பொய் சொல்கிறார். திருமணம் என்ற பெயரால் என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார்' என்று அந்தப் பெண் வழக்கு போட்டிருக்கிறார். `அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் எங்களுக்குள் தாம்பத்ய உறவு இருந்தது' என்கிறார் அந்த ஆண்.இந்த வழக்கை விசாரித்தபோது நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ``ஒன்றாக வாழும் கணவன் - மனைவி... அவர்களில் அந்தக் கணவன் கொடுமைக்காரனாகவே இருந்தாலும், அவர்களுக்கிடையே நிகழும் கட்டாய தாம்பத்ய உறவைப் பாலியல் வன்கொடுமை எனக் குறிப்பிட முடியுமா? சட்டத்தின் பார்வையில் அவர்கள் கணவன், மனைவி அல்லவா?'' என்று கேட்டு அதிர்ச்சி கிளப்பினார். பாதிப்பைச் சந்தித்த அந்தப் பெண், நீதிபதியின் கூற்றுப்படி குற்றம் சாட்டப்பட்ட ஆணின் 'சட்டபூர்வமான' மனைவி என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் பெண் கொடூரமாக நடத்தப்பட்டிருக்கிறார். தன் அந்தரங்கமான இடங்களில் பலமான காயங்கள் ஏற்பட்டு, அதற்காக சிகிச்சையும் எடுத்துள்ளார். மற்றொரு சந்தர்ப்பத்தில், அந்தப் பெண்ணின் காலையும் உடைத்துள்ளார் அந்தக் கணவன்.இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி பாப்டே, ``இது ஒருவரை வலிந்து தாக்குதல் மற்றும் குடும்ப வன்முறையின் கீழ்தானே வரவேண்டும்? திருமண பந்தத்துக்குள் ஒரு கணவன் மனைவிக்கிடையே நிகழும் தனிப்பட்ட உறவு தொடர்பான அத்துமீறல்களை பாலியல் வன்முறை என்று சொல்ல முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி வழங்கத்தானே நீதிமன்றங்கள்?

``பொய்யாகத் திருமணம் என்ற பந்தத்துக்குள் ஒருவரை இழுப்பது தவறுதான். அப்படி ஏமாற்றுபவர்கள் தண்டனைக்கு உரியவர்களே. ஆனால், கணவன் - மனைவி இடையிலான தாம்பத்ய உறவை பாலியல் வன்கொடுமை என அடையாளப்படுத்துவது இந்தப் பிரச்னையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று'' என்றும் நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.நீதிமன்றங்கள் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கின்றன. ஆனால், இப்போது விசித்திரமான வாதங்கள், தீர்ப்புகள் அங்கே கேட்கின்றன. இந்த இரண்டு வழக்குகளிலும் இன்னமும் தீர்ப்பு எழுதப்படவில்லை. ஆனால், விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளே இங்கே விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.2012 டிசம்பர் மாதம், தலைநகர் டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரமும், அதன் விளைவாக நேர்ந்த அவர் மரணமும் நாடு முழுக்கக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பாலியல் வன்கொடுமைக் குற்றங் களுக்கான தண்டனைகள் கடுமையாகியுள்ளன. நீதிமன்றங்களும் இந்த வழக்குகளை மிகுந்த அக்கறையுடன் கையாள ஆரம்பித்துள்ளன என்றாலும், இதுபோன்ற குற்றங்கள் குறைந்துவிடவில்லை என்பதைத் தினமும் செய்தித்தாள்களைப் படித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

இந்த சர்ச்சைகள் விவாதிக்கப்பட்டு வரும் இதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் மீரட் அருகே ஒரு சம்பவம்... வயலில் வேலை பார்த்துவிட்டு வந்து, தாகமாக இருக்கிறது என பக்கத்து வீட்டில் தண்ணீர் குடிக்கப் போன 14 வயதுச் சிறுமி, அந்த வீட்டில் இருந்த இளைஞரால் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்டி ருக்கிறார். அலிகாரில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளான் 17 வயதுச் சிறுவன் ஒருவன். மறுத்த அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான். செய்தித்தாள்களின் தேசியப் பக்கங்கள் ஆரம்பித்து உள்ளூர்ப் பக்கங்கள் வரை இப்படிப்பட்ட செய்திகளால் பதற வைக்கின்றன.

இதுபோன்ற சூழலில் நீதிபதிகளே இப்படிப் பேசுவது, பாதிக்கப்படும் பெண்களுக்கு `எங்கே போய் நீதி கேட்பது' என்ற விரக்தியை ஏற்படுத்திவிடும். `தன்மீது வன்முறை நிகழ்த்திய ஆணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நீதிமன்றமே சமரசம் பேசுவது ஆபத்தானது' என மூத்த பெண் அரசியல்வாதியான பிருந்தா காரத் கடுமையான கடிதம் ஒன்றை பாப்டேவுக்கு எழுதியுள்ளார். பெண்ணுரிமை அமைப்பினர், அக்கறையுள்ள குடிமக்கள் என சுமார் 4,000 பேர் இணைந்து, `பாப்டே பதவி விலக வேண்டும்' எனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். `உங்களின் கருத்துகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இனிவரும் பல வழக்குகளில் இதை முன்னுதாரணமாக எல்லோரும் எடுத்துக்கொள்ளும் ஆபத்து உள்ளது. திருமணத்தின் பெயரால் சில ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகளுக்கு உங்கள் கருத்துகள் சட்டபூர்வ அங்கீகாரம் தந்துவிடுகின்றன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற உயர்ந்த பீடத்தில் இருந்துகொண்டு கீழ்நிலை நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும், சட்ட பரிபாலன அமைப்புகளுக்கும் நீங்கள் ஒரு தவறான செய்தியை அனுப்பியுள்ளீர்கள்' என்று இந்தக் கடிதத்தில் கண்டித்துள்ளனர்.

பெண்ணுரிமை தொடர்பான கருத்துகளில் சமூகநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்ணை உடைமையாகப் பார்க்கும் நிலை மாறி பாலுறவுச் சுதந்திரம், தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவை பெண்களின் அடிப்படை உரிமைகள் என்று வலியுறுத்தப்படுகின்றன. ஒரு பெண் மீதான பாலியல் வன்முறைக்கு அவளது நடத்தையையோ உடைகளையோ காரணமாகச் சொல்லும் பழைமைவாதக் கருத்துகளை வலிமையாக மறுக்கிறார்கள் முற்போக்காளர்கள். இன்று திரைப்படங்கள், இலக்கியங்கள், வெப் சீரிஸ் எனப் பலவற்றிலும் இந்த முற்போக்குச் சிந்தனையின் தாக்கம் எதிரொலிக்கிறது.

நீண்டகாலமாகவே ‘கற்பழிப்பு’ என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. ஆனால், ‘பெண்களின் கற்பு மட்டுமா அழிகிறது, ஆண்களின் கற்பு என்ன ஆனது’ என்ற கேள்விகளின் அடிப்படையில் ‘பாலியல் வன்முறை’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘மணமான பெண்ணாக இருந்தாலும் அவரின் சம்மதமில்லாத பாலுறவு என்பது பாலியல் வன்முறைதான். நோ மீன்ஸ் நோ’ என்று முன்னணி நடிகர் திரைப்படத்தில் வசனம் பேசும் சூழல் உருவாகியுள்ளது.

சமூகத்தில் எல்லாமும் மாறிவரும் சூழலில் நீதிபதிகளின் மனநிலை மட்டும் மாறாமல் தேங்கியிருப்பது ஏன்?

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம்.

நீதி வழங்கத்தானே நீதிமன்றங்கள்?

``நீதிபதிகளின் தனிப்பட்ட சித்தாந்தங்கள், அவர்களின் கோட்பாடுகள் வேறு வகையில் இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் அவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து மட்டுமே கருத்துகளைப் பகிரவேண்டும். சாமானியர்களின் கருத்தை அவர்கள் பிரதிபலிக்கக் கூடாது. ஏனென்றால், அங்கே பேசுவது தனிநபர் அல்ல, மக்களுக்காக இயங்கும் நீதித்துறை என்பதை அவர்கள் உணரவேண்டும். நீதிபதிகளின் நியமனத்தின்போதே, பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவர்களின் பார்வை என்ன, சட்டத்தின் பார்வையுடன் அவர்களின் பார்வை ஒத்துப்போகிறதா என்பதைக் கட்டாயம் பார்க்கவேண்டும். நீதிபதிகளின் சொந்தக் கருத்தும் சட்டத்தின் பார்வையும் இங்கே வெவ்வேறாக இருக்கிறது என்பதே ஓர் அவலநிலைதான். இதை எப்படி மாற்றப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள சவால்! அதிலும் தற்போதுள்ள காலகட்டத்தில், ஆளும் அரசுகள் அல்லது அரசியல் கட்சிகளின் அழுத்தம் நீதித்துறையின் மீது இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. ஒரு நீதிபதியின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு அரசு எந்தப் புதிய பதவியையும் வழங்கக்கூடாது என்பதைச் சட்டமாக்க வேண்டும். பல்வேறு வாரியங்கள், அரசு அமைப்புகளில் தரப்படும் பதவிகள், உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற பதவிகளின் ஊதியத்துக்கு நிகராக உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சட்டத்தின் பார்வையிலிருந்து விலகி, அரசியல் ரீதியாக வலுவானவர்களின் பார்வையோடும் சித்தாந்தத்தினோடும் ஒத்துப்போகிற கருத்துகளைச் சில நீதிபதிகள் பிரதிபலிக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்படி ஆளும் தரப்பின் சித்தாந்தங்களைத் தாங்களும் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என இவர்கள் காட்ட முற்படுவது, பணிக்காலம் முடிந்த பின்னர், தங்களுக்கான பதவியை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்பாகவே தோன்றுகிறது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான அருண் மிஸ்ரா, தன் பதவிக்காலம் முடியும்போது, நம் நாட்டின் பிரதமரை `விஷனரி ப்ரைம் மினிஸ்டர்' எனப் பாராட்டினார். இது தேவையில்லாத ஒன்று. ஒரு நீதிபதி இப்படிப் பேசும் தேவை இங்கே ஏன் எழுகிறது? பதவி கூடாது எனச் சட்டம் கொண்டு வருவதன் மூலம் இத்தகைய பேச்சுகளையும், இப்படியான சம்பவங்களையும் நாம் தவிர்க்கலாம். இதனால் நீதிமன்றங்களில் இனி நீதி மட்டுமே பேசும்!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism