Published:Updated:

பாலஸ்தீனத்தின் நைட்டிங்கேல்: களவாடப்பட்ட ஒரு நாடு - மர்மங்களின் கதை | பகுதி-8

ஒரு நாட்டை இன்னொரு நாடு களவாட முடியுமா... ஒரு வரலாற்றை இன்னொரு வரலாறு அழித்துவிட முடியுமா?

-ஆர்.எஸ்.ஜெ

2018-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தொடங்கிய பாலஸ்தீன பகுதி இளைஞர்களின் போராட்டத்துக்கு பெயர் ‘Great March of Return'. ‘திரும்ப செல்வதற்கான அணிவகுப்பு’ என மொழிபெயர்க்கலாம். இழந்த பூர்விக நிலங்களை நோக்கி செல்வதற்கும், அதற்கு தடையாக இருந்த எல்லைச் சுவரை அகற்ற கோரியும் தொடங்கப்பட்ட போராட்டம். 2018 ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி இஸ்ரேல் கட்டியிருந்த சுவரருகே நின்று பலர் போராட்டம் செய்து கொண்டிருந்தனர். அருகேயே கூடாரங்களில் முதலுதவிக்கு மருத்துவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ரசான் அல் நஜ்ஜார்.

Great March of Return
Great March of Return
Twitter

போராடிக் கொண்டிருந்தவர்களிடமும் பெரிய ஆயுதங்கள் ஏதும் இருக்கவில்லை. அதிகபட்சமாக கையெறி குண்டுகள் எறிந்தார்கள். உண்டி வில் போன்ற கவணில் கல்லை கட்டி சுழற்றி சுவருக்கு மறுபக்கத்தில் இருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது எறிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் காற்றாடிகளின் வால்களில் நெருப்பை பற்ற வைத்து சுவருக்கு அந்த பக்கத்தில் பறக்க விட்டார்கள். சிலர் சுவருக்கு முன் இருந்த முள்வேலியை பிடித்து அறுத்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். டயர்களை எரித்தார்கள். சுவருக்கு அடுத்த பக்கத்தில் நின்று கொண்டிருந்த இஸ்ரேலிடம் எல்லா ஆயுதங்களும் இருந்தன. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். அவ்வப்போது துப்பாக்கி வெடிக்கும். போராடும் கூட்டத்தில் இருப்பவர் எவரேனும் திடீரென ரத்தம் கொப்பளித்து விழும் போதுதான் தோட்டா பாய்ந்தது தெரியும். உடனே மருத்துவர்கள் ஓடிச் சென்று காயம் பட்டவர்களை தூக்கிச் சென்று கூடாரத்துக்குள் வைத்து சிகிச்சை அளிப்பார்கள்.

மருத்துவ பணி புரிபவர்கள் காயம்பட்டு கிடப்பவர்களை கண்டறிய முன்னே சென்று கொண்டிருந்தார்கள். கைகளை தலைக்கு மேலுயர்த்தி, ‘சுடாதீங்க... காயம் பட்டு கிடக்காங்க’ என்று சத்தம் போட்டபடி முன்னே சென்று காயப்பட்டவர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்கும் போராட்டக்குரல். கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது. ‘என்னை காப்பாத்துங்க’ என ஒரு குரல். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரின் முகத்தில் கண்ணீர் குண்டு விழுந்து காயப்பட்டிருந்தார். மருத்துவப் பெண் ஒருவர் அவரிடம் ஓடினார். கூடவே நான்கு மருத்துவர்களும் தூக்கி வர சென்றனர்.

இஸ்ரேல்
இஸ்ரேல்

திடுமென துப்பாக்கிச் சூடு சத்தம். உதவிக் கொண்டிருந்த பெண் திரும்பி பார்த்தார். இரண்டு பேர் சரிந்து விழுந்தனர். தோட்டா உரசிச் சென்றிருந்தது. சரிந்த இருவரையும் பார்த்த ரஜான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நகர நினைத்தார். முடியவில்லை. அவர் நெஞ்சில் தோட்டா பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியிருந்தது. தடுமாறி கீழே விழுந்தார். அருகே இருந்த மருத்துவர்கள் அதிர்ந்து போய், நஜ்ஜாரை நோக்கி ஓடினர். அவரை தூக்கிக் கொண்டு கூடாரத்துக்குள் ஓடினர். மார்ச் 30ம் தேதி தொடங்கிய போராட்டம் மே 15ம் தேதி வரை தொடர்வதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாலஸ்தீனர்களின் ஆதங்கத்துக்கு காலம் கட்டுபடியாகவில்லை. இஸ்ரேலின் தடுப்பிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஐந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போராட்டம் நீடிக்கும் வரை கூடாரங்களும் மருத்துவ உதவியும் நீடிக்கும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 30,000 பேர் வரை திரண்டிருந்தனர். போராட்டம் தொடங்கி ஒன்றரை மாதங்களில் மட்டுமே 110 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இஸ்ரேல் தரப்பில் காயம் ஏதும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூதர்களுக்கு ஒரு நாடு

1897ம் ஆண்டில்தான் முதன்முதலாக யூதர்களுக்கு என தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. வரலாற்றின்படி அதற்கு முன் ஈராயிரம் வருடங்களாக யூதர்கள் தனித்த நாடு என கொண்டிருக்கவில்லை. இன்றைய பாலஸ்தீன பகுதியில் கடைசியாக யூதர்கள் என சிலரேனும் சில காலத்துக்கு வாழ்ந்தது கிமு7ம் நூற்றாண்டில்தான். அப்போதும் யூதர்கள் மட்டுமென வாழ்ந்துவிடவில்லை. பல இனத்தார் பல வித வழிபாடுகளுடன் ஒன்றாகவே வாழ்ந்திருந்தனர். அதற்கு பிறகான காலகட்டங்களில் போர், அரசியல் மற்றும் பிழைப்பு காரணங்களுக்காக பாலஸ்தீன பகுதியிலிருந்து சிதறினர். தொடர்ந்த அரசியல் நிலைகளின் காரணமாக வருவதும் போவதுமென சில காலத்துக்கு இருந்து பிற்பாடு முற்றிலுமாக வெளியேறி உலகம் முழுவதற்கும் பரவி வாழ்ந்தனர்.

பாலஸ்தீன்
பாலஸ்தீன்

கிறித்துவ மதம் தோன்றிய காலத்துக்கு பின் யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் கடுமையான சண்டைகள் நிகழ்ந்தன. பிறகு இஸ்லாமிய மதம் உருவானது. அரபு நாடுகளின் அதிகாரத்துக்குள் இஸ்ரேல் எனப்படும் ஜெருசலேம் சென்றது, அப்பகுதியிலிருந்த யூதர்கள் பிறர் எவரின் ஆதிக்கத்துக்குள்ளும் இருப்பதை விட அரபு நாடுகளின் ஆதிக்கத்துக்குள் இருப்பது பாதுகாப்பானது என்று கருதி அவர்களை ஏற்றனர். அரசியல் சூழல்களின் காரணமாக நாடுகளின் எல்லைகளும் மாற்றம் பெற்றன. ரஷ்யாவிலும் யூதர்களுக்கு ஆதரவு இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பதும் மக்களை சுரண்டும் அதிகாரம் நிரப்புவதுமே வேலைகளாக கொண்டிருந்த யூதர்கள் பெரும்பாலான மக்கள் கூட்டங்களின் எதிர்ப்பை சம்பாதித்தனர். சயனிஸ்ட் என்ற பெயரில் யூதர்கள் ஒன்றிணைந்தனர். தங்களுக்கான தனி நாடு, பாலஸ்தீனம் இருக்கும் பகுதியில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதுவே தங்களின் பூர்விகம் என்றும் குரல் எழுப்பினர். யூதர்கள் கிளம்பி சென்றதற்கு பிறகு அந்த இடத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழவே இல்லை.

ஓட்டோமான் பேரரசு

யூதர்களுக்கான தனி நாடு கேட்கப்பட்ட காலத்தில் பாலஸ்தீனம் ஓட்டோமோன் சாம்ராஜ்யத்தில் இருந்தது. யூதர்களின் திட்டத்துக்கு ஓட்டோமான் சாம்ராஜ்யம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. சில ஆண்டுகளிலேயே முதல் உலகப் போர் வெடித்தது. ஓட்டோமான் சாம்ராஜ்யமும் ஜெர்மனியும் அணி சேர்ந்தன. தோற்கும் நிலையிலிருந்து பிரிட்டன் எல்லா பக்கங்களிலும் இருந்து தனக்கான ஆதரவை திரட்டியது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்த அதே வேலையை பாலஸ்தீனத்துக்கும் பிரிட்டன் அந்த நேரத்தில் செய்தது. யூத ஆதரவு கிடைக்க அவர்களின் விருப்பப்படி தனி நாடு உருவாக்கத்துக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்தது. மறுபக்கத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த பாலஸ்தீனர்களுக்கும் தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவதாக உறுதி அளித்தது.

ஓட்டோமான் பேரரசு
ஓட்டோமான் பேரரசு

முதல் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டனின் அதிகாரத்துக்குள் பாலஸ்தீன பகுதி இருந்தது. அச்சமயத்தில் பாலஸ்தீனத்தில் வெறும் 10% யூதர்கள் மட்டுமே இருந்தார்கள். அதே காலகட்டத்தில் ஜெர்மனியில் பதவியேறிய ஹிட்லரால், யூதர்கள் குறி வைக்கப்பட்டார்கள். ஆதலால் ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் அதிகமாக பாலஸ்தீனத்தில் குடியேறினர். பிரிட்டன் வழக்கம்போல் கை கழுவும் வேலையைத் தொடங்கியது. யூதர்களுக்கு ஏதுவான தனி நாட்டை உருவாக்கும் வேலையை முன்னெடுத்தது. ஜெருசலேம் நகரை சர்வதேச நகருக்கான சிறப்பு அந்தஸ்து கொடுத்தும் மிச்ச பாலஸ்தீன பகுதியை இரண்டாக பிரிப்பதும் என திட்டத்தை அறிவித்தது. சயனிஸ்டுகள் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால் அரபு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விளைவாக இரு தரப்புக்கும் போர் தொடங்கியது.

அகதிகளாக பாலஸ்தீனியர்கள்

1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள். பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது. யூதர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்தனர். வெஸ்ட் பேங்க் பகுதியை ஜோர்டானும் காசா பகுதியை எகிப்தும் வென்றது. மிச்சப் பகுதியை இஸ்ரேல் தன்னுடைய பகுதி என நிர்மானித்துக் கொண்டது. ஏழு லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்த காலத்தில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் ஆதரவு அளித்தது. அமெரிக்கா இஸ்ரேல் பக்கம். 22,000 டன் அளவுக்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்தது. அங்கிருந்துதான் அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பின. தங்களின் எண்ணெய் வளத்தை அமெரிக்காவுக்கு கொடுக்காமல் முடக்கின. அதிலிருந்து அமெரிக்காவும் அரபு நாடுகளுக்கு எதிராக பல போர்களை தொடுக்கத் தொடங்கியது தனிக்கதை. இஸ்ரேல் நாட்டின் கயமையால் தன்னுடைய எதிரியை அமெரிக்காவின் எதிரியாகவும் மாற்றியது. விளைவு இன்னும் கொடூரம். அமெரிக்கா தன்னுடைய எதிரியை உலக மொத்தத்துக்குமான எதிரியாக மாற்றியது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அளவுக்கதிகமாக தூண்டப்பட்டு அப்பாவி உயிர்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்று சேர்ந்து குடித்து திளைத்துக் கொண்டிருக்கின்றன. அவை குடித்த எண்ணற்ற உயிர்களின் வரிசையில் ரசான் அல் நஜ்ஜாரும் சேர்ந்தார்.

இஸ்ரேலின் தடுப்புச்சுவர் அருகே காயப்பட்டு விழுந்த ஒருவரை காப்பாற்ற நஜ்ஜாரும் பிற மருத்துவர்களும் ஓடுகின்றனர். அப்போதே தடுப்புக்கு அப்புறத்தில் இருக்கும் வாகனத்தின் பின்புறத்திலிருந்து ஒரு இஸ்ரேல் ராணுவ வீரன் துப்பாக்கியுடன் வெளிப்படுகிறான். மருத்துவர்கள் உயிருக்கு பயந்து திரும்ப ஓடி வருகிறார்கள். நஜ்ஜார் கடைசியாக ஓடி வருகிறார். துப்பாக்கியுடன் வெளிப்பட்ட வீரன் துப்பாக்கியை இறக்கவில்லை. மறுபக்கத்தில் முள்வேலியை போராட்டக்காரர்கள் இழுத்துக் கொண்டிருந்தனர். டயர்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தடுப்பின் மூன்று பகுதிகளில் போராட்டக்காரர்கள் போராடிக் கொண்டிருந்தனர். கண்ணீர் குண்டு வீசப்பட்டதும் கலைந்து ஓடுகின்றனர். அதில் காயம் பட்டவர்களை தேடி மருத்துவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர். அப்படியொரு தருணத்தில்தான் கண்ணீர் குண்டு முகத்தில் விழுந்த ஒருவரை ஒரு மருத்துவப் பெண் கவனித்து ஓடினார். பிற மருத்துவர்கள் காயம்பட்டவரை தூக்க தொடர்ந்து ஓடினர்.

உண்டி வில் Vs துப்பாக்கி

திடுமென துப்பாக்கிச் சூட்டு சத்தம். உதவிக் கொண்டிருந்த பெண் திரும்பி பார்த்தார். இரண்டு பேர் சரிந்து விழுந்தனர். சரிந்த இருவரையும் பார்த்த நஜ்ஜாரால் அசைய முடியவில்லை. அவர் நெஞ்சில் தோட்டா பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியிருந்தது. நஜ்ஜாருடன் சேர்ந்து குண்டு பதம் பார்த்திருந்தது மூவரை. அந்த மூவரும் ஒரே திசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த திசையிலிருந்து நேராக தடுப்புக்கு அந்த பக்கம் நின்றிருந்தது வேறு யாருமல்ல; தடுப்புக்கு அருகே நஜ்ஜார் சென்றபோது துப்பாக்கியுடன் வெளிப்பட்ட இஸ்ரேல்காரன் தான்.

துப்பாக்கி
துப்பாக்கி

நஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டது விபத்து அல்ல... திட்டப்படி நடந்த கொலை!

போராட்டக்காரர்களுக்கு உதவி கிடைப்பதை இஸ்ரேல் ராணுவம் விரும்பவில்லை. ஆகவே போராட்டக்காரர்களை தாண்டி அவர்களுக்கு உதவும் மருத்துவர்கள் தோட்டாக்களுக்கு இலக்காக்கியது. அந்த தோட்டாக்களில் ஒன்றுதான் இரண்டு பேரை உரசி பதம் பார்த்து பின் குதித்து உயர்ந்து நஜ்ஜாரின் நெஞ்சில் பாய்ந்து உயிரைக் குடித்திருந்தது.

விமானக் கடத்தல்: அமெரிக்க அரசைத் தோற்கடித்த மாயாவி - மர்மங்களின் கதை | பகுதி-7

பந்து போல குதித்து உயர்ந்து பதம் பார்க்கும் தோட்டா!

உண்டி வில்லில் கல்லை எறிந்து போராடும் மக்களுக்கு எதிராக குதித்து உயர்ந்து உயிர் குடிக்கும் துப்பாக்கி தோட்டாக்கள்.

நைட்டிங்கேல்கள் பாலஸ்தீனத்தில் பிறந்தால் உலகம் மதிப்பதில்லை.

உலகில் கடைசி கல் இருக்கும் வரை பாலஸ்தீனத்துக்கான போராட்டங்கள் தொடரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு