Published:Updated:

`உங்களை நம்பித்தானே அம்மாவை விட்டுச் சென்றேன்...’ - தாய் மரணத்தால் கதறிய ராணுவ வீரர்!

பொதுவழிப் பாதையை ஆக்கிரமித்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்
உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் ( எல்.ராஜேந்திரன் )

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிபாரதி. அவர் ராணுவத்தில் சேர்ந்து லடாக் பகுதியில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரின் தாய் லட்சுமி அம்மாள் மைப்பாறை கிராமத்தில் வசித்து வருகிறார். அவருடன் உறவினரான ரெங்காலட்சுமி வசித்து வருகிறார்.

லட்சுமி அம்மாள்
லட்சுமி அம்மாள்

ராணுவ வீரரான மணிபாரதியின் வீட்டுக்குச் செல்லும் பாதையை, அதே ஊரில் ஊராட்சிச் செயலாளராக இருக்கும் செல்வராஜ் என்பவர் ஆக்கிரமித்து வந்ததாகவும் அத்துடன், அந்த வழியாக மணிபாரதியின் தாய் மற்றும் சகோதரியை வீட்டுக்குச் செல்ல விடாமல் தடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் மீறி அந்த வழியாகச் சென்றால் தகாத வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலப் பிரச்னை தொடர்பாக ராணுவ வீரரான மணிபாரதியின் தாய் லட்சுமி அம்மாளுடன் ஊராட்சிச் செயலாளர் செல்வராஜ் என்பவர் கடந்த ஏழு மாத காலமாகத் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக லட்சுமிஅம்மாள், திருவேங்கடம் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

ஊராட்சி செயலாளர் செல்வராஜ்
ஊராட்சி செயலாளர் செல்வராஜ்

தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் தனக்கு மன உளைச்சலை எற்படுத்திவந்த ஊராட்சிச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 12-ம் தேதி மீண்டும் திருவேங்கடம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், போலீஸார் அவரை மிரட்டி அனுப்பியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

வீட்டுக்குச் செல்லும் பாதை மறிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாகக் காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க மறுத்ததால் மனம் உடைந்த லட்சுமி அம்மாள் மறுநாள் (நவம்பர் 13-ம் தேதி) விஷம் அருந்திய நிலையில் கிடந்துள்ளார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமி அம்மாள் காவல்துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
உறவினர்கள் புகார்
Vikatan

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து லட்சுமி அம்மாளின் மகனும் ராணுவ வீரருமான மணிபாரதி கூறுகையில், ``எங்கள் வீட்டுக்குச் செல்லும் பாதையைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். நான் ராணுவத்தில் இருப்பதால், என் தாயார், தனி நபராகக் கடந்த ஏழு மாதமாக பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்து மனுக் கொடுத்திருக்கிறார். மாவட்ட நிர்வாகம், காவல்துறை கண்காணிப்பாளர் எனப் பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரெங்கலட்சுமி - அங்கன்வாடிப் பணியாளர்
ரெங்கலட்சுமி - அங்கன்வாடிப் பணியாளர்

நானும் ராணுவத்தின் மூலமாகப் புகார் அளித்தேன். முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் செய்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு, அங்கன்வாடிப் பணியாளராக இருக்கும் என் தங்கை ரெங்கலட்சுமி மீது பொய்ப் புகார் கொடுத்து அவரை கைது செய்ததால், வேலையிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

நான் என் தாயிடம், இந்தப் பிரச்னையைக் கைவிட்டு என்னோடு வருமாறு கூப்பிட்டேன். அவர் ‘நமக்கு நியாயம் கிடைத்துவிடும். அதன் பிறகு உன்னோடு வருகிறேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரது நம்பிக்கை பொய்த்துப்போனதால் விஷம் குடிக்கும் முடிவை எடுத்துவிட்டார். என் தந்தை இறந்த பிறகு என்னை படிக்க வைத்து வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கிய தாயின் மரணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.

ராணுவ வீரர் மணிபாரதி
ராணுவ வீரர் மணிபாரதி

உங்களை எல்லாம் நம்பித்தானே நான் என் தாயை விட்டுவிட்டு லடாக் பகுதிக்குச் சென்றேன். இப்படி நடக்கும் எனத் தெரிந்திருந்தால் அவரையும் கூட்டிட்டுப் போயிருப்பேனே...’’ என்று கதறினார். இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் பேசியபோது, "சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியிருப்பதால், இந்த விவகாரத்திலும் உள்ளூர் போலீஸார் நேரடியாகத் தலையிடாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், மற்றொரு தரப்பினர் அளித்த புகாரில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்தது எப்படி என்றும் அந்த வழக்கில் உண்மை இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை நியாயமான முறையில் செயல்படும்" என்று முடித்துக் கொண்டார்.