Published:Updated:

`நெஞ்சுவலியால் துடித்தபோதும் கண்டுகொள்ளவில்லை!'- பேருந்து டிரைவரால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

நெல்லை மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஆவுடையாள்புரத்தில் வசித்துவந்தவர், நாகராஜன். குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக கூலி வேலைகளைச் செய்துவந்தார். இவர் கடந்த சில தினங்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். 

3 கி.மீ கியூ; 2 மணி நேர காத்திருப்பு; 25 ரூபாய் வெங்காயம்! -ஆந்திராவை அதிரவைத்த முதியவர் மரணம்

இதற்காக, கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நோயின் தீவிரம் அதிகமானதால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் நாகர்கோவில் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றிருக்கிறார்.

பேருந்தில் ஏறியதும் அவருக்கு நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. அதனால் மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்ட நிலையில் பேருந்தில் இருந்தவர்களோ, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரோ உதவி செய்ய முன்வரவில்லை எனத் தெரிகிறது. ஒருகட்டத்தில் வலியால் துடித்த அவர், இடிந்தகரை அருகே பேருந்து வந்தபோது பஸ்ஸிலேயே இறந்துவிட்டார். 

பேருந்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட முதியவர் உடல்
பேருந்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட முதியவர் உடல்

இதனால், உடனடியாகப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் விஜயும் நடத்துநர் பிச்சையும் நெஞ்சுவலியால் இறந்த நாகராஜனின் உடலைப் பேருந்திலிருந்து இறக்கி இடிந்தகரை பேருந்து நிறுத்தத்தில் வைத்துவிட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இறந்தவரின் உடலைத் தங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் வைத்ததைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவருக்கு உதவி செய்ய ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை அறிந்ததும், கூடங்குளம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். 

` சமையலோடு கலந்த மனிதாபிமானம்!' - `யூடியூப் தாத்தா' மறைவால் கலங்கும் நெட்டிசன்கள்

உடனடியாக விரைந்து வந்த போலீஸார், நாகராஜன் உடலை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்தை வழிமறித்த போலீஸார், ஓட்டுநர் விஜய், நடத்துநர் பிச்சை ஆகியோரைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய இடிந்தகரை பொதுமக்கள், ``பேருந்தில் ஏறிய நபருக்கு அதன் ஓட்டுநரும் நடத்துநருமே பொறுப்பு. ஆனால், நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நபருக்கு முதலுதவிகூட அளிக்காததுடன் அவர் மரணம் அடைந்ததை அறிந்ததும் பஸ்ஸிலிருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றிருப்பது வேதனைக்குரியது. 

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

கூடங்குளம் காவல்நிலையத்தைக் கடந்துதான் அந்தப் பேருந்து செல்ல வேண்டும். அவர்களே காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தைத் தெரிவித்து ஆம்புலன்ஸில் உடலை ஏற்றிவிட்டிருக்க வேண்டும். ஆனால், மனிதாபிமானமற்ற வகையில் ஓட்டுநரும் நடத்துநரும் செயல்பட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இனியாவது இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்’’ என்கின்றனர் வேதனையான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு