Published:Updated:

துப்பாக்கி முனையில் பாலபாரதிக்கு மிரட்டலா?!- கரூர் சுங்கச்சாவடி சர்ச்சை

மணவாசி சுங்கச்சாவடியில் பாலபாரதி
மணவாசி சுங்கச்சாவடியில் பாலபாரதி

முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கரூரில் உள்ள சுங்கச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய ஊழியர்களால் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில், திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கி அவர் செல்லும்போது, கரூர் மணவாசி சுங்க வசூல் மையத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கான அட்டையைக் காண்பித்தபோது, அதை அனுமதிக்காமல் அவரை சுங்க வசூல் மையத்தைச் சேர்ந்தவர்கள் சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், துப்பாக்கியை வைத்துக்கொண்டு, கார் முன்பு நின்று மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியிடம் பேச முயன்றோம். அவரது எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

மணவாசி சுங்க வசூல் மையத்தில் என்ன நடந்தது என்று அங்குள்ள சிலரிடம் பேசினோம். ``பாலபாரதி கார் சுங்க வசூல் மையம் அருகே வந்தபோது, அவர் தனது முன்னாள் எம்.எல்.ஏ என்பதற்காக அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தார். ஆனால், அவரைப் பற்றித் தெரியாத ஊழியர்கள், 'நீங்க யாரா இருந்தா என்ன, பணத்தை எடுங்க'னு கேட்டாங்க. அதுக்கு பதிலுக்கு பாலபாரதி, 'அப்ப இந்த அடையாள அட்டைக்கு என்ன மரியாதை, முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் சுங்க மையங்களில் பணம் செலுத்த வேண்டும் என்கிற விதி இல்லையே'னு சொன்னாங்க.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

ஆனா, ஊழியர்கள் அவரின் முக்கியத்துவம் தெரியாம, வாக்குவாதம் பண்ணினாங்க. அதோடு, துப்பாக்கி ஏந்திய ஊழியர் பாலபாரதி கார் அருகே வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது" என்றார்கள்.

``திராவிட இயக்கங்களால் பெண்களுக்கு துணிச்சலைத் தரமுடியவில்லை" - `பளீர்' பாலபாரதி

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே.பாலபாரதி, தனது காரில் கரூர் அருகேயுள்ள சுங்கச்சாவடியை சனிக்கிழமை கடந்து செல்லும்போது, பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கான அனுமதிச் சீட்டு இருப்பதாகக் கூறி, அதைக் கொடுத்தபோது அங்கிருந்த ஊழியர்கள் ஏற்காமல் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஊழியர்கள் வாக்குவாதம்
ஊழியர்கள் வாக்குவாதம்

மேலும், சுங்கச்சாவடி தலைமை நிர்வாகத்துக்கு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியும் ஏற்காமல், துப்பாக்கி வைத்திருந்த பணியாளருடன் சேர்ந்து மிரட்டும் தொனியில் பேசி வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் அறிந்து செய்தி சேகரிக்க வந்த தொலைக்காட்சி ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக, சுங்கச் சாவடி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மணவாசி சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். "அவர் முன்னாள் எம்.எல்.ஏவாக இருக்கட்டும், முன்னாள் சி.எம் ஆகக்கூட இருக்கட்டும். ஆனால், எங்கள் நிர்வாகம் என்ன சொல்கிறதோ, அதை மட்டுமே செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

அதன்படிதான், அவரிடம் கட்டணம் கேட்டோம். ஆனால், துப்பாக்கியெல்லாம் காட்டி மிரட்டவில்லை. அவர்கள் இதைப் பெரிதாக்கிவிட்டார்கள்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு