Published:Updated:

கொரோனா மருந்து என விஷமாத்திரையைக் கொடுத்து 4 பேரைக் கொன்ற வழக்கு: `35 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றம்

கல்யாணசுந்தரம்

மொத்தம் 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த சபரி என்கிற போத்தீஸ் குமாருக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபதாரமும் விதிக்கப்பட்டது.

கொரோனா மருந்து என விஷமாத்திரையைக் கொடுத்து 4 பேரைக் கொன்ற வழக்கு: `35 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றம்

மொத்தம் 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த சபரி என்கிற போத்தீஸ் குமாருக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபதாரமும் விதிக்கப்பட்டது.

Published:Updated:
கல்யாணசுந்தரம்

சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பெருமாள்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (75). இவரின் மனைவி மல்லிகா (58). மகள் தீபா (30), இவர்களின் தோட்டத்தில் வேலை செய்துவந்தவர் குப்பம்மாள் (65). அதேபகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) வீடுகளுக்கு நேரில் சென்று பால் விற்பனை செய்துவந்தார். இவர், குத்தகைக்கு காடு கிடைக்குமா என்று தேடி வந்தபோது கருப்பண்ண கவுண்டருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கத்தின் அடிப்படையில் அவ்வப்போது பணத்தை வாங்குவதும், அதைத் திருப்பித் தருவதும் என கல்யாணசுந்தரத்துக்கும், கருப்பண்ண கவுண்டருக்குமிடையே நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான காட்டை குத்தைக்கு எடுத்து விவசாயம் செய்ய முடிவுசெய்த கல்யாணசுந்தரம், கருப்பண்ண கவுண்டரிடமிருந்து ரூ.14 லட்சத்தை கடனாகப் பெற்றார். இந்தத் தொகைக்கு மாதந்தோறும் வட்டியும் செலுத்திவிடுவதாகக் கூறி கல்யாணசுந்தரம் பணம் வாங்கியிருந்தார். இந்த நிலையில், வட்டிப்பணத்தைச் சரியாகத் திருப்பித் தராததால் தீபாவின் கணவரான வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு, கருப்பண்ண கவுண்டர் மற்றும் அவரின் உறவினர்கள் முன்னிலையில் கல்யாணசுந்தரத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது `அதிக வட்டி வசூலிப்பதால் தன்னால் வட்டி செலுத்த முடியவில்லை’ என்றும், அசல் தொகையான ரூ.14 லட்சத்தை விரைவில் திருப்பிச் செலுத்திவிடுவதாகவும் பஞ்சாயத்தில் கல்யாணசுந்தரம் கூறியிருக்கிறார்.

சபரி  என்கிற போத்தீஸ்குமார்.
சபரி என்கிற போத்தீஸ்குமார்.

இந்தப் பஞ்சாயத்தின்போது கருப்பண்ண கவுண்டர், பணத்தைத் தராத கோபத்தில் கல்யாணசுந்தரத்தைத் தவறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அந்தக் குடும்பத்தையே பழிவாங்கும் எண்ணத்துடன் கல்யாணசுந்தரம் இருந்ததாகத் தெரிகிறது. குடும்பத்தில் உள்ளவர்களைக் கொன்றுவிட்டால் தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் கருப்பண்ண கவுண்டர் குடும்பத்தையே கொலைசெய்ய கல்யாணசுந்தரம் திட்டமிட்டார்.

இந்த நிலையில் கல்யாணசுந்தரத்திடம், சென்னிமலை எம்.பி.என். காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் தன் மகன் சபரி (21) என்கிற போத்தீஸ் குமாருக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு கல்யாணசுந்தரம், அரசு வேலை வாங்கித் தருகிறேன். அதற்கு பிரதிபலனாக கொரோனா தடுப்பு மாத்திரை எனக் கூறி கருப்பண்ண கவுண்டர் குடும்பத்திலுள்ள நான்கு பேருக்கும் விஷமாத்திரையை 22-6-2021 அன்று சபரியிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார்.

இந்த விஷ மாத்திரைகளை எடுத்துச் சென்ற சபரி, கருப்பண்ண கவுண்டர் வீட்டுக்குச் சென்று தான் கொரோனா பரிசோதனை முகாமிலிருந்து வருவதாகவும், புதிதாக வந்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்படாது என்று கூறியிருக்கிறார். இதை நம்பி கருப்பண்ண கவுண்டரும், அவரின் மனைவி மல்லிகா, தீபா ஆகிய மூவரும் விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டனர்.  
அப்போது வீட்டுப் பணியாள் குப்பம்மாளும் இருந்தார். அவர் சாட்சியாக மாறிவிடக்கூடும் என்று கருதி அவருக்கும் விஷமாத்திரையைக் கொடுத்திருக்கிறார் சபரி.

கடந்த ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது.
கடந்த ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது.

இதைத் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக தீபா தவிர மற்ற மூவரும் உயிரிழந்துவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபா நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் வாக்குமூலமாகத் தெரிவித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துவிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சென்னிமலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி கல்யாணசுந்தரத்தையும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட சபரியையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, திங்கள்கிழமை தனது தீர்ப்பில், ``கொலைக் குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால் கல்யாணசுந்தரத்துக்கு இ.த.ச.படி 449ஆவது பிரிவின்கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையும், 302 மற்றும் 114 ஆகிய பிரிவுகளின்கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25,000 அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை என மொத்தம் 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த சபரி என்கிற போத்தீஸ் குமாருக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 விதித்து தீர்ப்பளித்தார்.