Published:Updated:

2 மாதத்துக்கு முன் நியமனம்; 2 நாள்களுக்கு முன் எதிர்ப்பு?! -இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மர்ம மரணம்

சீனத் தூதர் டு வெய்
சீனத் தூதர் டு வெய் ( Reuters )

கொரோனா பரவல் சமயத்தில் இஸ்ரேலுக்கு வந்ததால் 14 நாள்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சில சம்பவங்கள் சர்ச்சையாகி வருகின்றன. இதற்கிடையே, இஸ்ரேலுக்கான சீனத் தூதர் டு வெய், அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகரத்தின் வடக்கே உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக இஸ்ரேல் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 57 வயதான டு வெய், இதற்கு முன் உக்ரைன் நாட்டிற்குத் தூதராக வேலைபார்த்துவந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த சமயத்தில்தான் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார்.

சீனத் தூதர் டு வெய்
சீனத் தூதர் டு வெய்

இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இஸ்ரேலில் வசிக்கவில்லை. கொரோனா பரவல் சமயத்தில் இஸ்ரேலுக்கு வந்ததால் 14 நாள்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். தனிமையில் இருந்தவர் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல், சீனாவுடன் நெருக்கமாக உள்ள ஒரு நாடு. அந்நாட்டில் சீனா தனது முதலீடுகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதற்கு, அமெரிக்கா, தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் சீனா முதலீடுகள் செய்துவருவதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார் டு வெய். இதனால்தான் அவரது மரணம் சந்தேகத்துக்குரியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றனர். ஆனால், டு வெய் மரணம் அடைந்த செய்தி கேட்டதும் அவரது வீட்டுக்கு விரைந்த தடயவியல் துறை அங்கு சோதனை நடத்தியது.

சீனத் தூதர் டு வெய்
சீனத் தூதர் டு வெய்

சோதனையில், சந்தேகப்படும்படியான இறப்புக்கு உண்டான அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கார்டியாக் அரெஸ்ட்டால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சீன அதிகாரிகளும், ``உடல்நலக் காரணங்களால் தூதர் டு வீ எதிர்பாராத விதமாக இறந்தார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன" எனக் கூறியுள்ளனர். எனினும் இஸ்ரேல் மருத்துவ அதிகாரிகள் உறுதியான ரிப்போர்ட் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் முழுமையான தெளிவு கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு