Published:Updated:

கட்சிக்கொடியை அவமதித்த ஆய்வாளர்?! - தலைவாழை இலையில் `போராட்ட மனு’வை வைத்த கம்னியூஸ்ட்டுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டேஷன் முன்பு இலையில் கடிதம்
ஸ்டேஷன் முன்பு இலையில் கடிதம்

காவல் நிலையத்தின் வாசலில் தலைவாழை இலையில் வாழைப் பழங்களுடன் ஆர்ப்பாட்ட தகவல் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றனர். காவல் நிலையத்தில் அனுமதி தரப்படாத நிலையில், 1-ம் தேதி மாலை திட்டமிட்டப்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள்.

கம்னியூஸ்ட் கட்சிக்கொடியை அவமதித்த இன்ஸ்பெக்டரைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் நடத்தவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட மனுவை வாங்க மறுத்ததால், காவல் நிலையம் வாசலில் தலைவாழை இலையில் வாழைப்பழங்களுடன் கண்டன ஆர்ப்பாட்ட மனுவைவைத்த நிகழ்வு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பதாகையைப் பிடுங்கும் ஆய்வாளர்
பதாகையைப் பிடுங்கும் ஆய்வாளர்
`தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்!

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, விவசாய சங்கம் சார்பில் நாடு தழுவிய பாரத் பந்த் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கடந்த 27-ம் தேதி காலை 10 மணி அளவில் அறவழிப்போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பாதுகாப்புப் பணியில் இருந்த ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், கம்னியூஸ்ட் கட்சியினரை கலைந்துபோகச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், யாரும் கலைந்து செல்லாததால், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகையைப் பிடித்து எறிந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதோடு, அமைதியான வழியில் போராடிய தங்களை, ஆய்வாளர் சரவணன் கண்ணியக் குறைவாக நடத்தியதாக, இந்திய கம்னியூஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதனால், இந்திய கம்னியூஸ்ட் கட்சியினரை அவமதித்த, ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 1-ம் தேதி மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசித்து, முறையாகத் தகவல் தெரிவிப்பதற்காக, ராசிபுரம் காவல் நிலையத்துக்கு அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர் பிரதிநிதிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கே ஆய்வாளர் சரவணன் இல்லாததால், அங்கே பணியிலிருந்த உதவி ஆய்வாளரிடம் மனுவைக் கொடுத்தனர். ஆனால், முதலில் அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர், மேற்படி செய்தியை காவல் ஆய்வாளருக்கு அவர் தொடர்புகொண்டு தெரிவித்தாராம். அதற்கு ஆய்வாளர், `புகார் மனுவைப் பெற வேண்டாம். திருப்பித் தந்துவிடுங்கள்' என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

 ஸ்டேஷன் முன்பு இலையில் கடிதம்
ஸ்டேஷன் முன்பு இலையில் கடிதம்

அதனடிப்படையில், உதவி ஆய்வாளர் மனுவைத் திருப்பித் தந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளாக நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மணிமாறன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட துணைச் செயலாளர் செங்கோட்டுவேல், திராவிடர் விடுதலை கழக நகர செயலாளர் சேகுவேரா, மனிதநேய மக்கள் கட்சி நகர பொறுப்பாளர் சாதிக் பாஷா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் நீலவானத்து நிலவன், தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் ஆகியோர் அங்கேயே ஒரு முடிவெடுத்தனர். அந்தப் புகார் மனுவைத் திரும்ப அளித்ததை ஏற்காமல், காவல் நிலையத்தின் வாசலில் தலைவாழை இலையில் வாழைப்பழங்களுடன் ஆர்ப்பாட்ட தகவல் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றனர். காவல் நிலையத்தில் அனுமதி தரப்படாத நிலையில், 1-ம் தேதி (இன்று) மாலை திட்டமிட்டப்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் புகைப்படத் தொகுப்பு!

இது குறித்து, நம்மிடம் பேசிய, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுனத் தலைவர் நல்வினை செல்வன், ``ஆய்வாளர் கம்னியூஸ்ட் கட்சித் தோழர்களை அநாகரிகமாகப் பேசியிருக்கிறார். அதோடு, அவர்கள் வைத்திருந்த பதாகைகளைப் பிடுங்கி எறிந்திருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறோம். ஆய்வாளர் அதற்காக அனுமதிக் கடிதத்தை வாங்காததால், வேறு வழியில்லாமல் அதை ஸ்டேஷன் முன்பு, தலைவாழை இலையில் பழங்களோடு சேர்த்து வைத்துவிட்டு வந்தோம். திட்டமிட்டப்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு