Published:Updated:

''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காண்டம் விநியோகம்...'' திருமாவளவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன் ( விகடன் )

மெரினா புரட்சி நடந்துகொண்டிருந்தபோது அதில் கலந்துகொண்ட தம்பிகள் என்னிடம் வந்து அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாக, 'மெரினா புரட்சி' என்ற தலைப்பில் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். நீண்டபோராட்டத்துக்குப் பிறகு, நீதிமன்ற படியேறி சென்சார் சான்றிதழைப் படத்துக்கு வாங்கியிருக்கிறார்கள்.

மெரினா புரட்சி
மெரினா புரட்சி

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு 10 லட்சம் பேரைத் திரட்டியவர்களுக்குப் பாராட்டு விழா நேற்று சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர்கள் பொன்வண்ணன், வசந்தபாலன், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில், தொல்.திருமாவளவன் பேச்சுதான் ஹைலைட். அப்போது பேசிய அவர், ''மெரினா புரட்சி எப்படி நடந்தது என்பது இன்றுவரையில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வரும் திரைப்படம்தான் `மெரினா புரட்சி.' அரிய முயற்சியை மேற்கொண்ட அனைவரையும் பாராட்டுகிறேன். காவல் துறை அனுமதியில்லாமல் எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. தலைமைச் செயலகம் நோக்கி அரசியல் தலைவர்கள் பயணிக்கும் கடற்கரைச் சாலையில் இளைஞர்கள் கூடினார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்
விகடன்

நூறு பேர் ஆயிரம் பேர், லட்சம் பேர் ஆனார்கள். அவர்களை அகற்ற முடியாத அளவுக்கு அரசு வலிமை குன்றியதாக அன்றைக்கு இருந்ததா? உலகில் நடக்கிற எல்லாப் புரட்சிக்கும் பின்னால் ஏதோ ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் கை இருக்கிறது. அது ஆள்கிறவர்களுக்கு வேண்டிய புரட்சியாகவோ, எதிரான புரட்சியாகக்கூடவோ இருக்கலாம். ஏதோ ஒருவகையில் அரசின் துணை இருக்கலாம். மெரினா புரட்சி நாம் பெருமைப்பட வேண்டிய புரட்சி. எந்தப் பின்னணியில் இது நிகழ்ந்தது எனப் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அன்னா ஹசாரேவால் எப்படி டெல்லியில் லட்சக்கணக்கானவர்களைத் திரட்ட முடிந்தது. மீண்டும் அப்படியான ஒரு போராட்டத்தை அவரால் தொடங்க முடியுமா, தொடர முடியுமா? சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினரோடு சண்டை சச்சரவு ஏற்பட்டால், தடியடி, துப்பாக்கிச் சூடு என ரத்தக் களறியாகிறது. கடப்பாரை வைத்து பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, எந்த இடத்திலாவது துப்பாக்கிச்சூடு கேட்டதா, அன்றைக்கு ஆட்சியாளர்களிடம் துப்பாக்கி இல்லையா?

மெரினா புரட்சி நம்முடைய புரட்சிதான். ஆனால், இதில் அரசியல் ஏதோ இழையோடுகிறது. போராடியவர்களை எந்த வகையிலும் நான் குறைசொல்லவில்லை. மெரினா புரட்சி நடந்த முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரையில் அரசு என்ன செய்தது என்பதை நாம் புலனாய்வு செய்யத் தேவை இருக்கிறது.

மெரினா புரட்சி படத்தில் ஒரு காட்சி...
மெரினா புரட்சி படத்தில் ஒரு காட்சி...

மெரினா புரட்சி நடந்துகொண்டிருந்தபோது அதில் கலந்துகொண்ட தம்பிகள் என்னிடம் வந்து அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னார்கள். 'நாங்கள் யாருக்கும் கோரிக்கை விடவில்லை. ஆனால், தினம்தோறும் எங்களுக்கு உணவு பொட்டலங்கள் வந்துகொண்டே இருந்தன. எந்த கார்ப்பரேட் நிறுவனம் அனுப்பியது என எங்களுக்குத் தெரியாது. 'போராடுகிறவர்களுக்குச் செய்யப்படும் உதவி' என அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தோம். எங்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஒவ்வோர் உணவுப் பொட்டலத்துக்குள்ளும் ஒரு காண்டம் (நிரோத்) இருந்தது. 'இது எதற்காக? எங்களைக் கொச்சைப்படுத்துவதற்காகவா அல்லது வேறு என்ன காரணத்துக்காக என்று எங்களுக்குத் தெரியவில்லை' எனச் சொன்னார்கள். இந்த விஷயம், இந்தப் படத்தை ஆய்வுசெய்த தோழர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என எனக்குத் தெரியாது. இந்தப் பின்னணியில் எதுவும் இருக்கட்டும். ஆனால், இதை ஆய்வுசெய்ய வேண்டியது இளைய தலைமுறையின் கடமை.

எந்தப் புரட்சியும் அமைப்புசார்ந்த பின்னணியில்தான் வெற்றிபெற முடிகிறது. தொடங்கிய பிறகு முடிக்கத் தெரியாமல் திணறுவது மிகப் பெரிய பாதிப்பை உண்டுபண்ணும். 'அரசியல்வாதிகள் வேண்டாம்' என்பது நியாயமானது. ஆனால், அரசியல் தலைமை இல்லாமல் எந்தப் போராட்டமும் புரட்சியும் உலக சரித்திரத்தில் வென்றதில்லை. அது உதிரிப் போராட்டங்களாக வன்முறையோடு முடிந்ததாகத்தான் வரலாறு இருக்கிறது. மெரினா புரட்சி உள்ளபடியே நல்ல தொடக்கம். வேதனையான முடிவு. போராட்ட நோக்கம் வெற்றிபெற்றது. மக்கள் எவ்வளவு கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். குறிப்பாக, மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம்
ஜல்லிக்கட்டுப் போராட்டம்

அறிவுசார்ந்த சிலருக்கு அரசியல் மீது விரக்தி, வெறுப்பு இருக்கலாம். அமைப்புசார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பதுதான் சரியான திசை வழி. மெரினாவுக்குப் பிறகு இப்படியான போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. பல தரப்பு மக்களும் கூடிவிட்டார்கள். ஒற்றை முழக்கம். ஆனால், முடிவெடுப்பதில் சிக்கல். அந்த நேரத்தில்தான் அரசு அடக்குமுறையை ஏவியது. அமைப்பு சாராமல் இயங்குவதுதான் இதற்குக் காரணம். அரசியல் விரக்தி தரக்கூடியதாக இருக்கலாம். அதற்காக அரசியல் வேண்டாம் என்றால் அது அநாதை ஆகிவிடும். அரசியல் கிரிமினல்மயம் ஆகும்'' என்றார் திருமாவளவன்.

அடுத்த கட்டுரைக்கு