`ஜோக்கர்' திரைப்படத்தில் தன் அசாத்திய நடிப்பால் உலக மக்களை மிரட்டியவர் வாக்கின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix). ஆஸ்கர் விருதும் இவருடைய தனிப்பட்ட ஸ்டைலுக்கு ரசிகன் ஆனது. தற்போதைய டாப் ஹாலிவுட் ஸ்டாரான ஃபீனிக்ஸ், திங்களன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது ஏற்பு உரையில், விலங்கு உரிமைகளின் முக்கியத்துவம் பற்றியும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் வழக்கத்துக்கு எதிராகவும் பேசினார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் பிரபல பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் வெளியிட்டுள்ள விளம்பரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
``நாம் இயற்கை உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். நம்மில் பலர் உலக மையப் பார்வையில் தன்முனைப்புள்ள குற்றவாளிகள். ஆனால், நாம்தான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்புகிறோம். இயற்கையின் உலகத்துக்குச் சென்று நம் நலனுக்காக அதைக் கொள்ளையடிக்கிறோம்.

பசுவை செயற்கையாகக் கருவூட்டவைக்கிறோம். அதன் வேதனையின் அழுகை நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அதன் குழந்தையைத் திருட நமக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறோம். பிறகு, தன் கன்றுக்குட்டிக்கென்று சுரக்கும் அதன் பாலை எடுத்து, அன்றாடம் காபி மற்றும் தானியங்களோடு கலந்து பயன்படுத்துகிறோம்" என்று தன் ஆஸ்கர் உரையில் கூறியிருந்தார் ஃபீனிக்ஸ்.
இதைத் தொடர்ந்து அமுல் நிறுவனம் வித்தியாச விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. `அட்டர்லி பட்டர்லி டெலிஷியஸ்' என்று தன் லோ பிட்ச் குரலால் பாடி ஐகானிக் உருவம் பெற்ற அமுல் சிறுமி, பால் பொருள்கள் சேர்க்காத உணவு முறையான வீகன் டயட்டில் இருக்கும் நடிகரான ஃபீனிக்ஸுக்கு வெண்ணெய் ஊட்டிவிடுவதுபோல் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விளம்பரம்தான், தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட விளம்பரத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பீட்டா (PETA) அமைப்பு, `பால் கொடுமைக்கு எதிராகத்தான் ஃபீனிக்ஸ் ஆஸ்கரில் பேசினார். மாடுகளுக்கு உதவி செய்து சோயா, பாதாம், ஓட்ஸ் அல்லது பிற தாவர பால் தயாரிப்பதற்கு மாறுங்கள்' என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறது. மேலும், பால் மற்றும் பால் பொருள்கள் சேர்க்காத வீகன் உணவு முறையில் இருக்கும் ஃபீனிக்ஸுக்கு வெண்ணெய் ஊட்டிவிடும் உங்கள் கார்ட்டூன் நகைப்புக்கு உரியது' என்று அமுலை சாடியிருக்கிறது பீட்டா.