Published:Updated:

சாத்தான்குளம்: `வெளிய சொல்லிடாதே மக்கா..' -வைரலாகும் அதிர்ச்சி ஆடியோ

மர்ம மரணம் குறித்த சர்ச்சைக்குரிய காவல்நிலையம்
மர்ம மரணம் குறித்த சர்ச்சைக்குரிய காவல்நிலையம்

ஆடியோவில் `போலீஸ் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த இருவர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி விவாதிக்கிறார்கள். அந்த ஆடியோ வைரலாகப் பரவி வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் காவல்துறையினர் அடித்ததில் உயிரிழந்ததாகச் சர்ச்சை எழுந்தது. 

மர்மமாக உயிரிழந்த ஜெயராஜ்
மர்மமாக உயிரிழந்த ஜெயராஜ்

இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அத்துடன், அந்த காவல்நிலையத்தின் அனைத்துக் காவலர்களும் மாற்றப்பட்டனர்.

சாத்தான்குளம்: `நடந்தது கொலை... நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம்! -கொதிக்கும் தங்கை

தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்படத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வருகிறார்கள். 

உயிரிழந்த பென்னிக்ஸ்
உயிரிழந்த பென்னிக்ஸ்

நடந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அரசு சார்பாக மட்டுமல்லாமல் முக்கிய கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு உதவித் தொகைகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளியான ஆடியோ?!

இந்த விவகாரத்தைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். இத்தகைய கொந்தளிப்பான சூழலில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகப் பணியாற்றும் ஒருவருடன் அவரின் நண்பர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. 

சாத்தான்குளம்: `உடற்கூறாய்வுக்கு முன்னரே எப்படி முதல்வர் காரணம் சொன்னார்?’ - கனிமொழி

ஆடியோவில் பேசும் நபர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் அனைவரும் குற்றச்சாட்டு தொடர்பாகக் காவல்நிலையத்துக்கு அழைத்து வருபவர்களை அடித்து உதைப்பார்கள் எனத் தெரிவிக்கிறார்.

ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸாக தற்காலிக ஊழியர்களாக காவல்துறைக்கு உதவுவதற்காகப் பணியாற்றுபவர்களையும் அழைத்து சிலரை அடிக்க அனுமதிப்பதாகவும் அந்த நபர் பேசுகிறார். ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்து வந்த அன்றுதான் பணிக்குச் செல்லவில்லை என்றும் அந்த நபர் தெரிவிக்கிறார். 

சகோதரிகளுடன் பென்னிக்ஸ்
சகோதரிகளுடன் பென்னிக்ஸ்

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வந்த நபர் சரமாரியாக அடிக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பத்து நாள்களுக்குப் பின்னரே அந்த நபர் மர்ம மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கிறார்.

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக அழைத்து வரப்பட்டு போலீஸாரால் அடிக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றியும் பேசுகிறார். 

நான் சொன்ன விஷயங்களை மனசுல வச்சுக்கோ. யாரிடமும் நான் சொன்னதாகச் சொல்லி விடாதே.
ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் (ஆடியோவில்)

ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போன்று பேசும் நபர் அடிக்கடி, `நான் சொன்னதாக எதையும் வெளியே சொல்லி விடாதே மக்கா..’ என நண்பரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருவதால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இந்த ஆடியோ உண்மையானதுதானா என்பது தொடர்பாகவும் அதில் பேசும் நபர்கள் யார் என்பது பற்றியும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். ஒருவேளை இதில் தெரிவிக்கும் கருத்துகள் உண்மையாக இருக்குமானால் சாத்தான்குளம் போலீஸார் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமாக அமையக்கூடும்.

உடற்கூறு ஆய்வு நடந்தபோது பாதுகாப்பு பணி
உடற்கூறு ஆய்வு நடந்தபோது பாதுகாப்பு பணி

எனவே, போலீஸார் இந்த ஆடியோ குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாத்தான்குளம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு