Published:Updated:

ஊரடங்கில் உல்லாசம்... தடையை மீறி ஏரியில் மீன்பிடித்த விமல், சூரி!

கொடைக்கானல்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடைக்கானல்

பற்றியெரியும் கொடைக்கானல் வனத்துறை விவகாரம்

ஊரடங்கு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துவருகிறார்கள் கொடைக்கானல் மக்கள். இந்த நிலையில்தான், ஜூலை 17-ம் தேதி கொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலுள்ள பேரிஜம் ஏரிக்குச் சென்ற நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் ஏரியில் மீன் பிடித்து ஜாலியாகப் பொழுதைக் கழித்துள்ளார்கள். அப்போது அங்கு பணியிலிருந்த வனத்துறை ஊழியர் பிரபு என்பவர் நடிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதைப் பெருமையோடு ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததுதான், விஷயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டது.

ஊரடங்கு காலத்தில், கொடைக்கானலுக்குள் வெளி மாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை. ஊரடங்கு அமலில் இல்லாத இயல்புநிலை காலகட்டங்களிலும்கூட கொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் அனுமதி பெற்று, பலத்த பரிசோதனைகளுக்குப் பிறகே சுற்றுலாப் பயணிகள் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படிச் செல்பவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

விமல்
விமல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில மாதங்களுக்கு முன்னர் கொடைக்கானல் வனப் பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதற்காக அந்தக் குடும்பத்தினரை அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் அமர வைத்து, அபராதம் வாங்கிக்கொண்டு அனுப்பியது வனத்துறை. சில நாள்களுக்கு முன்னர் உள்ளூரைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கும் பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததற்காக, 40,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், ஊரடங்கு காலத்தில் பேரிஜம் பகுதிக்கு அத்துமீறிச் சென்று, மீன் பிடித்த நடிகர்களுக்கு வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளது வனத்துறை. பிரச்னை பெரிதானதும், தற்காலிகப் பணியாளர்களான சூழல் காவலர்கள் மூன்று பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது வனத்துறை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது தொடர்பாகப் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “கொடைக்கானல் மலையைப் பாதுகாப்பதுதான் வனத்துறையின் பணி. ஆனால், வனத்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறுநில மன்னர்கள்போலச் செயல்படுகின்றனர். உள்ளூர் மக்கள் அடுப்பெரிக்கச் சுள்ளி பொறுக்கினால்கூட கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்கள். அதேநேரம் வி.ஐ.பி-க்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதித்து, பாதுகாப்பும் தருகிறார்கள்.

ஊரடங்கில் உல்லாசம்... தடையை மீறி ஏரியில் மீன்பிடித்த விமல், சூரி!

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவரின் வாரிசுகள், பேரிஜம் பகுதியில் தங்கள் நண்பர்களுடன் மான் வேட்டையாடினார்கள். அப்போதைய ரேஞ்சர் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தார். ஆனால், அவர்களைக் காப்பாற்ற உயரதிகாரிகள், உள்ளூர் இளைஞர்கள் நான்கு பேரைக் குற்றவாளிகளாகச் சித்திரிக்க முயன்றார்கள். அப்போது அந்த நான்கு பேரையும் செய்தியாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்.

அப்போதுதான், அந்த நான்கு பேருக்கும் தாங்கள் மான் வேட்டைக்காகக் கைது செய்யப்படவிருக்கிறோம் என்ற விவரமே தெரிய வந்திருக்கிறது. பயந்துபோனவர்கள், `எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார்கள். இறுதியில் வேறு வழியில்லாமல், காட்டுக்கோழிகளை வேட்டை யாடியதாக அந்த வாரிசுகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விமல், சூரி
விமல், சூரி

தற்போது நடிகர்கள் பிரச்னை யிலும் அதுதான் நடந்துள்ளது. இப்போதும் அதே எம்.பி-யின் வாரிசுகள் உதவியுடன்தான் நடிகர்கள் விமலும் சூரியும் இ-பாஸ், சோதனைச் சாவடிப் பரிசோதனைகள் எதுவுமில்லாமல் கொடைக்கானலுக்கு வந்திருக் கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான பேரிஜம் ஏரிப் பகுதிக்குச் செல்ல மூன்று வன சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். அவற்றையெல்லாம் தாண்டித்தான் நடிகர்கள் ஏரிக்குச் சென்றுள்ளனர். அங்கு காலையில் சென்ற நடிகர்கள் மாலை வரை ஏரியில் மீன்பிடித்து விளையாடி, பொழுதைக் கழித்திருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் மானை வேட்டையாடினாலும் சட்ட விரோதம்தான்... மீனை வேட்டையாடினாலும் சட்ட விரோதம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கு பணியிலிருந்த கடைநிலை ஊழியர் ஒருவர் நடிகர்களுடன் செல்ஃபி எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்த பிறகே விவகாரம் வெளியே தெரிந்துள்ளது. உடனே அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள 2,000 ரூபாய் அபராதம் விதித்து பிரச்னையை அமுக்க நினைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னையில் பெரும் தொகை கைமாறியிருக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த அத்துமீறல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள் தப்பிப்பதற்காக அப்பாவி தற்காலிக கடைநிலை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இந்தப் பிரச்னையில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் கோபமாக.

கொடைக்கானலில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான வினோத், “நடிகர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நடிகர்கள் இ-பாஸ் வாங்கித்தான் கொடைக்கானலுக்குள் நுழைந்தார்களா, அவர்கள் கிளம்பிய இடத்திலிருந்து எந்தெந்த மாவட்டங்களில் இ-பாஸ் அனுமதிக்கப்பட்டது என்பதெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும். வனத்துறை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் ஒருவர்மீதுகூட நடவடிக்கை இல்லை.

சுள்ளி பொறுக்கப்போகும் பழங்குடிகளைக் குற்றவாளிகளைப் போல நாள் முழுவதும் அலுவலக வாசலில் அமரவைத்து, அவர்களிட மிருந்து அரிவாள் முதல் சிறு வன மகசூல் பொருள்கள் (தேன், பட்டை, கடுக்காய், இலந்தை உள்ளிட்ட பொருள்கள்) வரை அத்தனையையும் பிடுங்கிக்கொள்ளும் வனத்துறையினர், விலையுயர்ந்த கார்களில் வனத்துறைக்குள் அத்துமீறிய நடிகர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

இவர்கள் மட்டுமல்ல... இந்த ஊரடங்கு நாள்களில் வி.ஐ.பி-கள் பலரும் கொடைக்கானலுக்கு அனுமதியில்லாமல் வந்து சென்றதாகத் தகவல்கள் வருகின்றன. கொடைக்கானல் நகரின் நுழைவுவாயிலான சில்வர்ஃபால்ஸ் அருகிலுள்ள சோதனைச் சாவடியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினால் மொத்த விவரங்களும் தெரியவரும். தற்போது அந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை கைப்பற்ற பேரம் நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, ‘ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல் கொடைக்கானலுக்கு வந்த நடிகர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள்மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவகுமார், கொடைக்கானல் டி.எஸ்.பி ஆத்மநாதனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். எனவே, எந்த நேரத்திலும் இவர்கள்மீது வழக்கு பதிவாக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது பற்றிப் பேசிய கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வனி, “நடிகர்கள் பேரிஜம் ஏரி பகுதிக்குச் சென்றது ஊடகத்தினர் சொல்லித் தான் எனக்குத் தெரியவந்தது. அன்று களை எடுக்கப் போன வனத்துறையினரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து நடிகர்கள் போயிருக்கிறார்கள். தேவைப்பட்டால் நடிகர்களை விசாரணைக்கு அழைப்போம்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் பேசினோம். “தற்போது வனத்துறை அபராதம் விதித்துள்ளது. விரிவான விசாரணை நடந்துவருகிறது. விதிகளை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என்றார்.

நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோரின் செல்போன்கள் அணைத்து வைக்கப் பட்டிருக்கின்றன. சூரியின் நெருங்கிய நண்பர் ஒருவர் நம்மிடம், “நடிகர் விமலுடன் சேர்ந்து சூரி தேவையில்லாத பிரச்னையில் சிக்கிக்கொண்டுள்ளார். இத்தனைக்கும் இந்த ட்ரிப்புக்கு வருவதற்கு சூரி மறுத்துள்ளார். அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். குடி, புகை என எந்தப் பழக்கமும் இல்லாதவரை, கூடா நட்பு இப்படியொரு பிரச்னையில் சிக்க வைத்திருக்கிறது” என்றார்.

நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் எந்த வகையிலும் தங்கள் செயலை நியாயப்படுத்த முடியாது. இருவரையும் தொடர்புகொள்ள முயன்றும் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் ஏதேனும் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதையும் வெளியிடுகிறோம்.

எதுவுமே தப்பில்ல... உதயநிதியா, ரஜினியா, விமலா, சூரியா இருந்து செஞ்சா... இங்க எதுவுமே தப்பில்ல!