Published:Updated:

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற பெண்கள்... பிடதியில் சிக்கிய கன்டெய்னர்கள்!

- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நித்தி!

பிரீமியம் ஸ்டோரி

நித்தியானந்தா என்றாலே நித்தமும் சர்ச்சையாகிவிட்டது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர், `கைலாசா’ என்கிற தனி நாட்டின் அதிபராகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்டு உலகையே அதிரவைத்தார். சில மாதங்களாக நித்தியானந்தாவின் ‘அதிரடி’ பேச்சுகள் ஓய்ந்திருந்த நிலையில், இப்போது புதிய விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் நித்தியானந்தா. இந்தியாவிலுள்ள தன் சிஷ்யர்களை வெளிநாட்டுக்குக் கொண்டுவர போலி முகவரியில் பாஸ்போர்ட் தயார்செய்திருக்கிறது நித்தி தரப்பு என்பதே அந்த விவகாரம்!

2019-ல், குஜராத்திலுள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சில பெண் குழந்தைகளை அடைத்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரமத்துக்குள் புகுந்த அந்த மாநிலக் காவல்துறை, அங்கிருந்த சிலரை மீட்டது. இந்த விவகாரத்தில் நித்தியானந்தாவின் பெண் சீடரான பிராணப்பிரியா என்பவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறையில் இருந்தவர் ஜாமீன் பெற்று வெளியேவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிராணப்பிரியா வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயல்வதாக குஜராத் காவல்துறைக்குத் தகவல் கிடைக்கவே, அவரை அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறது காவல்துறை. அப்போது உத்தரப்பிரதேசத்தில், ஒரு குக்கிராமத்தின் முகவரியில் போலி பாஸ்போர்ட் எடுத்து அதன் மூலம் அவர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது. அவரிடம் தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணையில், கடந்த ஐந்து மாதங்களுக்குள் இதேபோன்று போலியான முகவரியைக் கொடுத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விவகாரம் தெரியவந்திருக்கிறது.

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற பெண்கள்... பிடதியில் சிக்கிய கன்டெய்னர்கள்!

“போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் நித்தியானந்தாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர்தான் உதவி செய்கிறார்” என்றபடி இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விவரித்தார்கள் நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர்... “நித்தியானந்தா ஏற்கெனவே `வனாடூ’ என்கிற தீவில் இருந்தார். இப்போது கரீபியன் கடற்பகுதியிலுள்ள ஒரு தீவில் இருக்கிறார். நிரந்தரமாக அவர் ஓரிடத்தில் தங்குவது இல்லை. அவருடன் இப்போது 30-க்கும் அதிகமான பெண்களுடன், நான்கைந்து ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நித்தியானந்தாவுக்குச் சேவை செய்வதற்காக சுழற்சி முறையில் அவரது இருப்பிடத்துக்கு வந்து செல்கிறார்கள்.

அதேசமயம், இந்தியாவில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் பலருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால் அவரது இருப்பிடத்துக்கு வர முடியவில்லை. இந்த நிலையில்தான் கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு, போலி பாஸ்போர்ட் எடுக்க உதவிகள் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பிவருகிறார். ராணுவத்தில் பணிபுரிந்தபோது நித்தியானந்தாவுடன் தொடர்பு ஏற்பட்டதால், ராணுவப் பணியிலிருந்து தப்பி வந்து நித்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார் அந்த அதிகாரி. ஒருகட்டத்தில் ராணுவ காவல்துறை அவரைக் கண்டறிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்தவர், ராணுவப் பணியை உதறிவிட்டு, மீண்டும் பிடதிக்கு வந்து அங்கிருந்தே நித்திக்கு தேவையான வேலைகளைச் செய்துவருகிறார். இவரது சொந்த மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பதால், அந்த மாநிலத்தில் உள்ளவர்களின் ஐ.டி-களை முறைகேடாகப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டுகளை எடுத்துத்தருகிறார்” என்றார்கள்.

இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தாவின் பெண் சீடர் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். தங்கள் மகள் பிடதி ஆசிரமத்தில்தான் இருக்கிறார் என்று நினைத்திருந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இதையறிந்து அதிர்ந்து போய்விட்டார்கள். தொடர்ந்து அவர்கள், பிடதிக்குச் சென்று, “என் மகளின் பாஸ்போர்ட் எங்களிடம் இருக்கும்போது, அவர் எப்படி வெளிநாடு செல்ல முடியும்?” என்று கேட்க, அவர்களைச் சமாளித்து அனுப்பியிருக்கிறது பிடதி ஆசிரமத் தரப்பு. தற்போது நித்தியுடன் தங்கியுள்ள பலருடைய பாஸ்போர்ட்டுகளும் காலாவதியாகிவிட்டன. இனி அவர்கள் வெளிநாட்டில் இருப்பதே சட்டவிரோதம் என்கிற தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் நித்தி தொடர்புடையவர்கள்.

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற பெண்கள்... பிடதியில் சிக்கிய கன்டெய்னர்கள்!


நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தைவிட்டுச் சென்று மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது பிடதி ஆசிரமத்தில் 50 பேர் வரை இருக்கிறார்கள். இந்த ஆசிரமம் சுமார் ஏழு கோடி ரூபாய் கடனில் உள்ளது. நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியாததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை வாங்க முடியாமல் தவித்துவருகிறார்கள். பிடதி ஆசிரமத்திலும் அன்றாடச் செலவுகளுக்கே நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், நித்தியானந்தாவுக்குப் பரிசாக வந்த ஏராளமான வெள்ளிப் பொருள்களையும், சில விலையுயர்ந்த பொருள்களையும் விற்பனை செய்ய முயன்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் மாதம் பிடதி ஆசிரமத்திலிருந்து இரண்டு கன்டெய்னர்கள் வெளியே வந்துள்ளன. அவற்றில் என்ன இருந்தன என்று தெரியவில்லை. ஆனால், தகவலறிந்த கடன் கொடுத்த தரப்பினர் கன்டெய்னர்களை மறித்து, “எங்களுக்கு வரவேண்டிய கடனை செட்டில் செய்யாமல் கன்டெய்னர்கள் இங்கிருந்து வெளியே செல்லக் கூடாது” என்று முற்றுகையிடவே... அவை ஆசிரமத்துக்குள் திரும்பிவிட்டன. இப்போது போலி பாஸ்போர்ட் விவகாரம் வேறு வெடித்திருப்பதால் விரைவில் பிடதிக்குள் காவல்துறை நுழையப்போகிறது என்று எச்சரிக்கிறார்கள் நித்தியின் முன்னாள் சீடர்கள்.

வெளிநாடுகளுக்குத் தப்பிய பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கும் இந்திய உளவுத்துறைக்கு நித்தியானந்தாவை மட்டும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவதில் அப்படி என்னதான் சிக்கல்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு