அலசல்
Published:Updated:

சிவன் கோயில் யாருக்கு சொந்தம்? - சர்ச்சையில் சிக்கிய ஆயிரமாண்டு கோயில்...

சிவன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன் கோயில்

1925-1937 பதிவேடுகளில் 5.82 ஏக்கர் நிலம், கோயிலுக்குச் சொந்தமான சுடலை புலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில்... `கருணாலீஸ்வரர் கோயிலா?’ இல்லை `கனகபுரீஸ்வரர் கோயிலா?’ என்று பெயரிலேயே குழப்பத்தைச் சுமந்து நிற்கிறது. தவிர, கோயில் அமைந்திருக்கும் நிலம் தனியாரின் பெயரில் இருப்பதாலும் கோயிலைச் சுற்றிச் சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அருகே முகையூரில் இருக்கிறது இந்த சிவன் கோயில். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா தரப்பே இந்தக் கோயிலின் பெரும்பாலான கட்டுமானங்களைச் செய்தது. இந்தக் கோயிலின் தீவிர பக்தரான ரஜினியும் அடிக்கடி இங்கு வழிபட்டுச் சென்றார். இங்குள்ள சிவன் மீதான பக்தியால்தான் தனது படத்துக்கும் பேரனுக்கும் ‘லிங்கா’ என்று பெயர் சூட்டினார் எனக் கூறப்படுகிறது.

சிவன் கோயில் யாருக்கு சொந்தம்? - சர்ச்சையில் சிக்கிய ஆயிரமாண்டு கோயில்...

கடந்த 2017-ல் இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ‘இந்தக் கோயில் நிலம் கண்ணன் என்பவரின் பெயரில் உள்ளது; அந்த நிலத்தைக் கோயிலின் சொத்தாக மாற்றித் தர வேண்டும். மேலும், ஆயிரம் ஆண்டுகளாக இருந்த கோயிலின் பெயரை மாற்றிவிட்டார்கள். கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பழனிராஜா என்பவர் மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கருணாலீஸ்வரர் கோயில் என்கிற பழைய பெயரையே உறுதிசெய்த நீதிமன்றம், ‘கண்ணன் இந்தக் கும்பாபிஷேகத்தை நடத்தக் கூடாது, பொதுமக்கள் இணைந்து கும்பாபிஷேகத்தை நடத்தலாம்’ என்று உத்தரவிட்டது. ஆனாலும், தனியாரின் பிடியிலிருந்து கோயில் மீளவில்லை என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று பழனிராஜாவிடம் கேட்டோம்... “1925-1937 பதிவேடுகளில் 5.82 ஏக்கர் நிலம், கோயிலுக்குச் சொந்தமான சுடலை புலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சுடலை புலம்’ என்றால் சிவனுக்குச் சொந்தமான நிலம் என்று அர்த்தம். 1960-ல் கண்ணனின் அப்பாவும் பெரியப்பாவும், அரசாங்கத்தின் ஏ-ரிஜிஸ்டரில் மணியக்காரர் உதவியோடு கோயில் நிலத்தைத் தங்கள் பெயருக்குப் பதிவு செய்துவிட்டார்கள். கடந்த 2003-ல் இந்தச் சொத்துகளை விற்பதற்காக அங்குள்ள சிலையை வேறு இடத்துக்கு மாற்ற முயன்றபோது காவல்துறையில் புகார் அளித்து, சிலையை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்தினோம். இதையடுத்து, கண்ணன் அந்தக் கோயிலுக்குள் நாங்கள் நுழையக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். 2007-ம் ஆண்டு இது பொதுக் கோயில்தான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பிறகு, 2017-ல் கும்பாபிஷேகம் செய்யும்போது கருணாலீஸ்வரர் என்ற கோயிலின் பெயரை ‘கனகபுரீஸ்வரர் ஆலயம்’ என்று பெயர் மாற்றினார்கள். அதற்கும் நீதிமன்றம் சென்று தடை வாங்கினோம். கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னால், நடராஜர் சிலை ஒன்று பூமிக்கடியிலிருந்து கிடைத்தது. கோயில் கட்டும் வேலைகள் முடிந்த பிறகு கோயிலில் வைக்கிறோம் என்று அதை கண்ணன் தரப்பில் எடுத்துச் சென்றனர். இதுவரை சிலை, கோயிலில் ஒப்படைக்கப்படவில்லை. பொதுக் கோயில்தான் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கோயில் நிலம் அவர்களின் பெயரில்தான் இருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோயிலை அரசு கையிலெடுக்க வேண்டும்” என்றார் விரிவாக.

சிவன் கோயில் யாருக்கு சொந்தம்? - சர்ச்சையில் சிக்கிய ஆயிரமாண்டு கோயில்...

இது குறித்தெல்லாம் கண்ணனிடம் விளக்கம் கேட்டோம். “1927-ல் இந்த இடத்தை எங்கள் முன்னோர் வாங்கினார்கள். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. பொதுநிலம் என்பதற்கான ஆவணங்கள் எதுவுமே இல்லை. 1996-ல் இந்து அறநிலையத்துறையும் ‘இது அரசு கோயில் இல்லை’ என்று கூறியுள்ளது. இந்த இடம் ‘சுடலை புலம்’ என்றோ, ‘புறம்போக்கு நிலம்’ என்றோ அரசு ஆவணத்தில் இல்லை என்று ஆர்.டி.ஓ கடிதம் கொடுத்துள்ளார். நிலம் தொடர்பாக அவர்கள் தொடர்ந்த வழக்கிலும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக யாருடைய உதவியும் இன்றி கோயில் நிர்வாகத்தை நடத்திவருகிறேன். கடந்த மே மாதம், கோயிலில் அம்மனின் தாலிச்சரடு, வெள்ளி மாலை உள்ளிட்ட பொருள்கள் திருடு போய்விட்டன. அதனாலேயே பூமிக்கடியிலிருந்து கிடைத்த நடராஜர் சிலையை வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். விரைவில் அதைக் கோயிலில் வைத்துவிடுவோம்” என்றவரிடம், “சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயிலின் நிலம், எப்படி தனியார் சொத்தாக இருக்க முடியும்?” என்று கேட்டோம்.

சிவன் கோயில் யாருக்கு சொந்தம்? - சர்ச்சையில் சிக்கிய ஆயிரமாண்டு கோயில்...

“அது ஜமீன் சொத்தாக இருந்தது. ஜமீன் ஒழிப்புக்குப் பிறகு அந்தச் சொத்துகள் ஏலத்துக்கு வந்தபோது பங்காரு நாயுடு என்பவர் அதை வாங்கினார். ‘ரயத்வாரி’ சட்டத்தின்படி இந்த நிலத்துக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பங்காரு நாயுடுவிடமிருந்து எங்கள் முன்னோர் இதை வாங்கினார்கள்” என்றார் விளக்கமாக.

செங்கல்பட்டு மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்... “பொதுமக்கள் இந்தக் கோயில் தொடர்பாக மனு கொடுத்து இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கேட்டால் மட்டுமே அரசு இதில் தலையிட முடியும். அப்படி எந்த மனுவும் வரவில்லை. வந்தால் அது குறித்து பரிசீலனை செய்வோம்” என்றார்கள்.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் என்றால், அரசுத் தரப்பில் ஆய்வுகள் நடத்தி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அதுவரை இந்தச் சர்ச்சைகள் ஓயாது!