Election bannerElection banner
Published:Updated:

`இனி அனைத்து தரப்பினருக்குமான வீடாக இருக்கும்!' - சர்ச்சை விளம்பரத்துக்கு ஸ்ரீரங்கம் பில்டரின் பதில்

சமூக ஆர்வலர்கள்
சமூக ஆர்வலர்கள்

ஸ்ரீரங்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு குறித்த விளம்பரத்தில், `பிராமணர்களுக்கு மட்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் லட்சுமிநகர் பகுதியில், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் நிறுவனம், ஸ்ரீசக்தி ரெங்கா எனும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தக் குடியிருப்புகளின் விற்பனை குறித்த விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. அதில், `பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு உள்ளது. லிப்ட் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள இந்தக் குடியிருப்பு, பிராமணர்களுக்கு மட்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது.

சர்ச்சை விளம்பரம்
சர்ச்சை விளம்பரம்

இப்படியொரு விளம்பரத்தைக் கவனித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் வினோத் மணி தலைமையில் திரண்ட சமூக ஆர்வலர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வினோத்மணி, “ புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பிராமணர்களுக்கு மட்டும் விற்கப்படும் என அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அங்கு பிராமணர்கள் மட்டும் குடியிருப்பார்கள் என்றால், அந்தக் குடியிருப்பில் இதரப் பணிகளைச் செய்வதற்கு மட்டும் பிற சமூகத்தினர் வேண்டுமா?

கண்டன போஸ்டர்
கண்டன போஸ்டர்

பிராமணர்களுக்கு மட்டும் வீடு என்றால், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம். இப்படியிருந்தால், எப்படி சாதியற்ற சமத்துவ சமுதாயம் உருவாகும்?

குறைந்தபட்ச சமூக அக்கறைகூட இல்லாமல், அந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றவர்,

சமூக ஆர்வலர்கள்
சமூக ஆர்வலர்கள்

இதுதொடர்பாக ஶ்ரீரங்கம் காவல்நிலையத்தில் நடந்த விசாரணையில், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் அன்பழகன் ஆஜரானார். அப்போது அவர், பாரம்பர்ய திராவிட குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் என்றும் கூறினார். தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். சமூக அக்கறையுள்ள ஒருவரின் இந்தச் செயல் வருத்தமளிக்கிறது" என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க பொறியாளர் அன்பழகனை தொடர்புகொண்டோம். தொடர்ந்து அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவரின் வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

வினோத்மணி
வினோத்மணி

“அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த விளம்பரத்தில், வீடுகள் பிராமணர்களுக்கு மட்டும் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விளம்பரம் அல்ல. ஸ்ரீரங்கம் ஆன்மிக பூமி என்பதால், சைவ உணவு அருந்துபவர்களுக்கு மட்டும் வீடு என்கிற அர்த்தத்தில் குறிப்பிடப் போய்த் தவறுதலாகிவிட்டது.

அதற்கான வருத்தத்தைத் தெரிவித்த அன்பழகன், அந்தக் குடியிருப்புகளை அனைத்துச் சாதியினரும் விலை கொடுத்து வாங்கலாம் என நாளிதழ்களில் மறுப்புச் செய்தி வெளியிட்டுள்ளார்” என்றார்.

வழக்கறிஞர் ராஜேந்திரன்
வழக்கறிஞர் ராஜேந்திரன்

இந்த விளம்பரம் குறித்துப் பேசிய ஶ்ரீரங்கம் பகுதி மக்கள் சிலர், "அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டுவதற்கான பணி இன்னும் தொடங்கவே இல்லை. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில், விளம்பரம் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்கள்" என்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு