Published:Updated:

நாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வி - தி.மு.க நிர்வாகிகளைக் குறிவைத்து சர்ச்சை போஸ்டர்!

சர்ச்சைக்குரிய போஸ்டர்
சர்ச்சைக்குரிய போஸ்டர்

நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், அதற்குக் காரணமாக இருந்ததாக தி.மு.க நிர்வாகிகள் மீது விமர்சனம் வைக்கும் சர்ச்சை போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட ரூபி மனோகரன் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ
ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ

அ.தி.மு.க சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த வாரத்தில் பிரமாண்டமான நன்றி அறிவிப்புக் கூட்டத்தையும் நடத்தி முடித்து விட்டார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குப் பத்திரிகைகளின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க நிர்வாகிகள் சரிவரத் தேர்தல் பணியைச் செய்யாததும் தோல்விக்குக் காரணம் என்கிற பேச்சும் அடிபடுகிறது. அத்துடன், தேர்தல் செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைக் கட்சி நிர்வாகிகள் சிலர் கொண்டு சென்று விட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

அ.தி.மு.க நன்றி அறிவிப்புக் கூட்டம்
அ.தி.மு.க நன்றி அறிவிப்புக் கூட்டம்

இந்த நிலையில், நாங்குநேரி தொகுதிக்குள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்தப் போஸ்டரில், ’நாங்குநேரி இடைத்தேர்தலில் களக்காடு பேரூராட்சியில் அ.தி.மு.க-வுக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்த தி.மு.க பிரமுகர்கள் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், சிவபத்மநாபன், வஹாப் ஆகியோருக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க-வின் நெல்லை மாநகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் ஆகியோர் இடைத்தேர்தலின்போது களக்காடு பேரூராட்சிக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது தி.மு.க-வினரிடம் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.

60 பேர் போட்டி;ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஜாக்பாட்!-நாங்குநேரி அ.தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி
களக்காடு யூனியனில் அ.தி.மு.க சார்பாக தாரளமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. பரிசுப் பொருட்களும் ஏராளமாக விநியோகிக்கப்பட்டன. அதன் மூலம் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
தி.மு.க நிர்வாகிகள்

இது குறித்து தி.மு.க-வினரிடம் பேசியபோது, ’’இடைத்தேர்தலின் போது தி.மு.க-வினர் சிறப்பாகவே பணியாற்றினார்கள். களக்காடு பேரூராட்சிப் பகுதியில் அ.தி.மு.க சார்பாகப் பொறுப்பாளராக இருந்த அமைச்சர் பணத்தைக் கொட்டிச் செலவு செய்தார். வாக்காளர்களுக்குப் பணம், பட்டுச்சேலை, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை வழங்கியதால் சுமார் 10,500 வாக்குகள் பின் தங்கும் நிலை உருவானது. இந்த விவரங்கள் கட்சி மேலிடத்துக்கும் தெரியும், ஆளுங்கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி பண விநியோகம் செய்து வெற்றியைக் கைப்பற்றி விட்டார்கள்.

காங்கிரஸ் வேட்பாளரின் தோல்விக்கு ஆளுங்கட்சியின் அத்துமீறல் தான் காரணமே தவிர, தனிப்பட்ட முறையில் கட்சியின் நிர்வாகிகள் யாரையும் குறை சொல்ல முடியாது. அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் அச்சிட்டவர்களின் பெயர் எதுவும் இல்லை. அதை பிரிண்ட் செய்த அச்சகத்தின் பெயரைக் கூடப் போடவில்லை.

சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

இது போன்ற சுவரொட்டிகளை அ.தி.மு.க-வினரே திட்டமிட்டு ஒட்டியிருப்பதாகத் தெரிகிறது. இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தி.மு.க-வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என அ.தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். அதன் மூலம் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் லாபம் அடைய முடியும் என நினைத்து இத்தகைய மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் நினைப்பது நடக்காது’’ என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு