நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுக்கறி என்ற வார்த்தையுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அந்த ட்வீட்டுக்குக் கீழே, சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து `இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது' என்றும், `தேவையற்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும்' என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

காவல்துறையின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக, திமுக-வைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அந்தப் பதிவில் என்ன தப்பு... என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய்ப் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை" என்று காட்டமாகப் பதிவுசெய்திருந்தார்.
மேலும் பலர் `எது தேவையற்ற பதிவு?’ என பதில் கேள்வி எழுப்பினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காவல்துறையின் ட்வீட்டால் கடும் சர்ச்சை கிளம்பிய நிலையில், முதலில் பதிவுசெய்யப்பட்ட பதிவு நீக்கப்பட்டது. மேலும், ``தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல்துறையின் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்யப்பட்டதால், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக இந்தப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத் தேர்வைக் குறித்ததல்ல" என்று புதிதாக விளக்கம் கூறி ஒரு பதிவு போடப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணித் திருவிழாவில் மாட்டிறைச்சி அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறையின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.