Published:Updated:

`கொரோனா வார்டில் சடலங்களுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை?’ - மும்பை சியான் மருத்துவமனையின் திகில் காட்சி

சியான் மருத்துவமனை கொரோனா வார்டு
சியான் மருத்துவமனை கொரோனா வார்டு

கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுக்கின்றனர். அதனால்தான் இந்த நிலைமை என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.

மும்பையில் உள்ள சியான் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டிலேயே கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இதனை வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 14000-க்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் சியான் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குத் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான நோயாளிகள் சியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வார்டில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்த வார்டில் கறுப்பு நிற பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வார்டில் 7 சடலங்கள் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கும் அதற்கு அருகில் உள்ள படுக்கையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ட்ரெச்சர் மற்றும் படுக்கையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளைக் கவனிக்க வருபவர்களும் அந்தச் சடலங்களைக் கண்டுகொள்ளாமல் அப்படியே செல்கின்றனர். கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு இந்தச் சடலங்கள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் என்ற உணர்வே இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் இத்தகைய செயலைச் செய்துள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நித்திஷ் ரானே இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ``சியான் மருத்துவமனையில் நோயாளிகள் சடலங்களுக்கு அருகில் உறங்குகிறார்கள். இதுமிகவும் பயங்கரமானது. என்ன வகையான நிர்வாகம் இது. மிகவும் வெட்கக்கேடானது” என நித்திஷ் கூறியுள்ளார்.

``கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களது உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். உடல்களை வாங்க மறுக்கின்றனர். இதன்காரணமாக இங்கு நிறைய உடல்கள் உள்ளன. கொரோனா வார்டில் இருந்த சடலங்களை நாங்கள் அகற்றிவிட்டோம். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்" என சியான் மருத்துவமனை டீன் பிரமோத் இங்காலே கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`கொரோனா வார்டில்தான் உடல்களை வைக்க வேண்டுமா. மருத்துவமனையின் பிணவறையில் உடல்களை வைக்காமல் கொரோனா வார்டில் ஏன் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன?' என்ற கேள்விக்குப் பதிலளித்த டீன் பிரமோத் இங்காலே, “ இங்குள்ள மார்ச்சுவரியில் 15 சடலங்களைத்தான் வைக்க முடியும். ஏற்கெனவே 11 சடலங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களோடு வைப்பது பிரச்னையில் முடியும்” எனக் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தப் பைகளில் வைத்தபின்னர் அதில் இருந்து நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லையென்றாலும் சடலங்களின் அருகில் உறங்குவது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

இதுகுறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ``சியான் மருத்துவமனை சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், இறந்த உடல்களின் அருகில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல். மும்பையைக் கவனிக்க இங்கு யாருமே இல்லையா?அரசாங்கம் இந்த விவகாரத்தைக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு