Published:Updated:

பேருந்து நிறுத்தத்தில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலம்! - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

கொரோனா நோயாளியின் சடலம்
கொரோனா நோயாளியின் சடலம்

கொரோனா தொற்று இருப்பது தொடர்பாக மூன்று நாள்களுக்கு முன்பு அவரது மகனுக்கு இமெயில் அனுப்பியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரின் சடலம் இருந்துள்ளது. அந்த நபர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் அவரது சடலத்தைக் குடும்பத்தினர் கண்டெடுத்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாமல் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் எப்படி சடலமாக பேருந்து நிலையத்தில் கிடந்தார் என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அகமதாபாத்தை சேர்ந்த குன்வந்த் மக்வானா (Gunvant Makwana) அங்குள்ள சிவில் மருத்துவமனையில் மே 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கொரோனா தடுப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மக்வானா-வுக்கு கொரோனா தொற்று இருப்பது தொடர்பாக மூன்று நாள்களுக்கு முன்பு அவரது மகனுக்கு இமெயில் அனுப்பியுள்ளனர்.

மே 31...25 மாவட்டங்களுக்குத் தளர்வு! -  தமிழகத்தில் லாக் டௌன் 4.0; வரைமுறைகள் மற்றும் தளர்வுகள்

இதுகுறித்து பேசிய மக்வானாவின் மகன், ``கடந்த 3 நாள்களாக என் அப்பாவின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது. அவர் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் அவரைச் சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை. நாங்கள் மருத்துவமனையில் காத்திருந்தபோது எங்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மே 15-ம் தேதி காலை 10 மணிக்கு போலீஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எஸ்.வி.பி மருத்துவமனையில் எனது அப்பாவின் உடல் இருப்பதாகவும் பிணவறையில் சென்று பெற்றுக்கொள்ளுமாறும் கூறினர்.

மருத்துவமனை
மருத்துவமனை

மே 14-ம் தேதி அதிகாலையில் எனது அப்பாவின் உடலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸார் கண்டுள்ளனர். அவர்கள் எஸ்.வி.பி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். நாங்கள் மருத்துவமனைக்கு சென்றபோது பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், எங்களுக்கு இதுவரை அந்த ரிப்போர்ட் கிடைக்கவில்லை. எனது அப்பா கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டதாக கூறினார். ஆனால், எங்கே எப்போது இறந்தார் என எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு யாரும் எந்த பதிலும் கூறவில்லை. எங்களை சந்திப்பதற்கு கூட யாரும் தயாராக இல்லை” என வருத்ததுடன் கூறினார்.

இதுகுறித்து பேசியுள்ள சிவில் மருத்துவமனை நிர்வாகம், ``அந்த நபர் மே 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவரது உடல்நலம் நன்றாக இருந்தது. கொரோனா நோயாளியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தால் அவரை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்துவோம். மேலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் அவரது விவரங்களை தெரியப்படுத்துவோம்.

கொரோனா
கொரோனா

நோயாளிக்கு அவரது வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் உள்ளதா என்பதை மாநகராட்சி நிர்வாகம்தான் சரிபார்க்க வேண்டும். நோயாளியின் சம்மதத்தை பெற்றுதான் அவரை வெளியேற்றினோம். அடுத்த நாள் பேருந்து நிறுத்தத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. இதுகுறித்து விசாரிக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்த மாட்டீர்களா அல்லது உறவினர்களின் துணையின்றி கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்துவிடுவீர்களா என்ற கேள்விக்கு, ``இதெல்லாம் மாநகராட்சிதான் பார்த்துக்கொள்ளும்” என மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு