Published:Updated:

விதிகளை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ?! -கிரிமினல் வழக்கு பதிவுசெய்த புதுச்சேரி போலீஸ்

கொரோனா
கொரோனா

”கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது” என்று கூறி சர்ச்சையில் சிக்கிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் மீது ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதனடிப்படையில், மார்ச் 31-ம் தேதி வரை 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் எப்போதும்போல தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டதால், மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகக் கடந்த 23-ம் தேதி அறிவித்த முதல்வர் நாராயணசாமி, அதை மீறுபவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், 1 வருட சிறைத்தண்டனையும் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அன்றைய தினம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாள்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக அறிவித்தார். அந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் அச்சட்டத்தை மீறியவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜான்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காமராஜர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜான்குமார், முதல்வர் நாராயணசாமி எம்.எல்.ஏ-வாக இருக்கும் நெல்லித்தோப்பு தொகுதியில் வசித்துவருபவர்.

எம்.எல்.ஏ ஜான்குமாரின் வீட்டில் பிரிக்கப்படும் காய்கறிகள்
எம்.எல்.ஏ ஜான்குமாரின் வீட்டில் பிரிக்கப்படும் காய்கறிகள்

நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், முதல்வர் நாராயணசாமிக்காகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமாசெய்தவர். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், மின் விசிறி, கேஸ் அடுப்பு, அரிசி, சர்க்கரை, புடவை, ஜீன்ஸ் என நெல்லித்தொப்பு தொகுதி வாக்காளர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து அவர்களை வசப்படுத்தி வைத்திருப்பவர் என்று கூறப்படுகிறது. இந்தத் தொகுதியில் இவர் வெற்றிபெற்றதற்கான காரணமும் இவர் விநியோகித்துவரும் இலவசங்கள்தான் என்று இப்போதும்கூறப்படுவதுண்டு.

இந்நிலையில், நேற்று இரவு தனது தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக காய்கறிகள் அடங்கிய பை ஒன்றை விநியோகித்திருக்கிறார் எம்.எல்.ஏ ஜான்குமார். அதைப் பெறுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் அவரது வீட்டு வாசலில் முண்டியடித்து நின்றனர்.

கொரோனா தீவிரமடைந்துவரும் நேரத்தில் சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திவரும் நிலையில், மக்கள் பிரதிநிதி ஒருவரே அதை மீறலாமா என்று சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஜான்குமார்.

இலவச காய்கறிகளை வாங்க கூடிய மக்கள்
இலவச காய்கறிகளை வாங்க கூடிய மக்கள்

அதையடுத்து அங்கு சென்ற உருளையன்பேட்டை போலீஸார், அங்கு கூடிய மக்களை கலைந்துசெல்லும்படி அறிவுறுத்தினர். மேலும், ஊரடங்கு சட்டத்திற்கு எதிராக கூட்டத்தைக் கூட்டிய எம்.எல்.ஏ ஜான்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரவுதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கைப் பதிவுசெய்தனர்.

அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) நகலை வாட்ஸ்-அப் மூலம் செய்தியாளர்களுக்கு அனுப்பிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “சட்டத்தைப் பின்பற்றாமல் அதை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அனைவருக்குமான செய்தி. சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்ட விதிகளைக் கடைப்பிடிப்பதென்பது, அதனை உருவாக்குபவர்களின் மிகப்பெரிய பொறுப்பு. சட்டத்தை மீறுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. அவரின் செயல், தொற்றுநோய் பரவுதல் சட்டத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு