Published:Updated:

`சர்ச்சைக் கருத்து’ - மருத்துவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த சி.எஸ்.கே!

சி.எஸ்.கே கிரிக்கெட் அணி
சி.எஸ்.கே கிரிக்கெட் அணி

இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் நடந்து வரும் நிலையில் சி.எஸ்.கே கிரிக்கெட் அணியின் மருத்துவர் மது தொட்டப்பிள்ளி, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`கொரோனா அச்சம்; எல்லையில் பதற்றம்!’ - இந்தியாவிலிருந்து தங்கள் மக்களை திரும்ப அழைக்கும் சீனா

நாட்டின் எல்லையைக் காக்கும் மோதலில், உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் திறமையை அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பெருமையுடன் நினைவுகூர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

Vikatan

ஒரு பக்கம் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக நாடு இக்கட்டான சூழலைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் ஊடுருவல் காரணமாக எல்லைப் பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

மது தொட்டப்பிள்ளி
மது தொட்டப்பிள்ளி

இத்தகைய நிலையில், சி.எஸ்.கே அணியின் மருத்துவராக உள்ள டாக்டர். மது தொட்டப்பிள்ளி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக் கருத்தைப் பதிவிட்டார். அது பல்வேறு தரப்பினரிடமும் பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது.

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவதற்காகத் திரட்டப்படும் `பி.எம்.கேர்ஸ்’ நலநிதி குறித்தும் மோடி பற்றியும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சி.எஸ்.கே அணியின் டாக்டரான தொட்டப்பிள்ளி, ``உயிரிழந்த ராணுவ வீரர்களைச் சுமந்துவரும் பெட்டியின் மீது பி.எம்.கேர்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதை அறிய ஆர்வமாயிருக்கிறேன்” என ட்வீட் செய்திருந்தார். 

சி.எஸ்.கே அணி நிர்வாகத்தின் நடவடிக்கை
சி.எஸ்.கே அணி நிர்வாகத்தின் நடவடிக்கை

இந்த விவகாரம் சர்ச்சையானதும், சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது. அணி நிர்வாகத்துக்குத் தெரியாமல் இந்தக் கருத்தைப் பதிவிட்டபோதிலும், அதற்குக் காரணமான அணியின் டாக்டர் மது தொட்டப்பிள்ளியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது சி.எஸ்.கே. அதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு