Published:Updated:

`பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவரின் கையால் விருதைப் பெற மாட்டேன்' - சட்டக்கல்லூரி மாணவி அதிரடி!

Supreme Court Chief Justice Ranjan Gogoi
News
Supreme Court Chief Justice Ranjan Gogoi

``ரஞ்சன் கோகாய் எந்தத் துறையில் தலைமை வகிக்கிறாரோ, அதே துறையில் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லையே!''

`பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கையால் என்னுடைய விருதை வாங்க மாட்டேன்' என்று டெல்லி தேசிய சட்டக் கல்லூரி மாணவி சுரபி கர்வா, விருது வழங்கும் விழாவைப் புறக்கணித்திருப்பதன் மூலம், இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

Delhi National Law University Convocation
Delhi National Law University Convocation
https://www.livelaw.in

கடந்த சனிக்கிழமையன்று, டெல்லியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். இதே பட்டமளிப்பு விழாவில், சட்டப்படிப்பில் முதலிடம் பிடித்ததற்காக ரஞ்சன் கோகாய் கையால் தங்க மெடல் வாங்கவிருந்தவர்தான் மாணவி சுரபி கர்வா. தலைமை நீதிபதி கையால் தன்னுடைய விருதைப் பெற விரும்பாமல், பட்டமளிப்பு விழாவுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார் சுரபி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து சுரபி கர்வா, ``அவர் கையால் நான் விருது வாங்கக் கூடாது; அதற்காக பட்டமளிப்பு விழாவுக்குச் செல்லக் கூடாது என்கிற முடிவை இதுநாள் வரை நான் கற்றுவந்த நீதியின் அடிப்படையில்தான் எடுத்தேன். ரஞ்சன் கோகாய் எந்தத் துறையில் தலைமை வகிக்கிறாரோ, அதே துறையில் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. புகார் தொடர்பான அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் அவரை விடுவித்து, உச்ச நீதிமன்ற விசாரணைக் கமிட்டி அறிவித்தது. புகார் தெரிவித்த 14 நாள்களுக்குள் அவசர அவசரமாக அந்த விசாரணை முடிக்கப்பட்டது. புகார் கொடுத்த பெண்ணுக்காக வாதாடவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. அதனால்தான், அவர் கையால் என்னுடைய விருதைப் பெறுவதை அசெளகரியமாக உணர்ந்தேன்; விழாவுக்கு வருவதையும் தவிர்த்தேன். என் கல்விக்கான தங்கப்பதக்கத்தைப் பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், அதை யாரிடம் இருந்து பெறுகிறோம் என்பது அதைவிட முக்கியமானது'' என்று கூறியிருக்கிறார்.

சுரபி கர்வாவின் பட்டமும் விருதும் `வருகை புரியாதவர்' என்ற அடிப்படையில் எங்களிடம் இருக்கிறது. அவர் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.''
டெல்லி தேசிய சட்டக்கல்லூரியின் துணைவேந்தர்

இதுபற்றி டெல்லி தேசிய சட்டக்கல்லூரியின் துணைவேந்தர், ``எங்கள் பல்கலைக்கழகத்தில் இறுதிசெய்யப்பட்ட தீர்மானத்தின்படி சட்டத்தில் முதுகலை முடித்த மாணவர்களுக்குத் தலைமை நீதிபதி கையால் விருது வழங்குவதாக முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக சுரபி உள்ளிட்ட எந்த முதுகலை மாணவர்களிடமும் பல்கலைக்கழகம் பேசவும் இல்லை. சனிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் இளநிலையில் சட்டம் முடித்த இரண்டு மாணவர்களுக்கு மட்டும்தான் தலைமை நீதிபதி விருது வழங்கினார். ஆகஸ்ட் 16-ம் தேதி பட்டமளிப்பு விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சியிலும் சுரபி கலந்துகொள்ளவில்லை. அவருடைய பட்டமும் விருதும் `வருகை புரியாதவர்' என்ற அடிப்படையில் எங்களிடம் இருக்கிறது. அவர் அதைப் பெற்றுக்கொள்ளலாம். மாண்புமிகு தலைமை நீதிபதிக்கு இந்த நிகழ்வால் தேவையற்ற சங்கடம் நிகழ்ந்ததற்குப் பல்கலைக்கழகம் வருத்தம் கொள்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார்.