Published:Updated:

17 பேரின் உயிரைப் பறித்த ஒற்றைச் சுவர்... மேட்டுப்பாளையம் நடூரில் நடந்தது என்ன? முழு விவரம்!

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

உயிரிழந்தவர்களுக்குப் பணம் வழங்குவதோ எல்லாம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதோ சிறந்த அரசு நிர்வாகம் இல்லை. அந்த 17 பேரின் உயிர் போகாமல் தடுத்திருந்தால்தான் சிறந்த அரசு நிர்வாகம்.

"இன்னும் இந்தச் செவுரு எத்தனை பேர பலி வாங்கப் போகுதோ?" என்ற மெட்ராஸ் பட வசனம், மேட்டுப்பாளையத்தில் நிஜமாகிவிட்டது. ஊருக்குள் மழை வராதா என்று ஏங்குபவர்களுக்கு மத்தியில், பழங்குடி மக்களும், பட்டியலின மக்களும் எப்போது என்ன நடக்குமோ... என்ற அச்சத்திலேயேதான் மழை நாள்களைக் கடப்பார்கள்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்
`வேலை இருக்குன்னு எங்களை விட்டுட்டுப் போனார்!’ -மேட்டுப்பாளையம் சம்பவத்தால் நிர்கதியான குடும்பம்

இயற்கைச் சீற்றம் மட்டுமல்ல, செயற்கையாக உருவாக்கப்படும் இதுபோன்ற செயல்களும் அவர்களுக்கு ஆபத்தை உருவாக்கும். அதற்கான மற்றுமொரு உதாரணம்தான், மேட்டுப்பாளையம் நடூர் சம்பவம்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில் இருக்கிறது கண்ணப்பன் லே அவுட். மேட்டுப்பாளையம் தொழில் அதிபர்களின் ஓங்கி உயர்ந்த வீடுகளை எல்லாம் கடந்து இருக்கிறது அந்தக் காலனி. அந்தத் தாழ்வான பகுதியில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

கடந்த சில நாள்களாகவே, மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவும் மற்ற இரவுகளைப் போலத்தான் தொடங்கியது.

அந்தப் பகுதி மக்கள் நிம்மதியாகத் தூங்கினர். ஆனால், திங்கள்கிழமை விடியல் சாதாரணமாக விடியவில்லை. அதிகாலை 4 மணி அளவில் 17 பேரின் மூச்சு நிரந்தரமாக அடங்கிவிட்டது. விபத்து நடந்த இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்ராசை முற்றுகையிட்ட மக்கள்,

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்
`15 பேர் மரணத்துக்குக் காரணமான 80 அடிநீள சுற்றுச் சுவர்!’- அதிர்ச்சி விலகாத மேட்டுப்பாளையம்

'இப்ப மட்டும் ஏன் இங்க வர்றீங்க? என்று கேள்வியெழுப்பினர். அவரை உள்ளே வர விடாமல் தடுத்தனர். கலெக்டர் தொடங்கி அனைத்து அதிகாரிகளுக்கும் இதே நிலைதான்.

அந்தப் பகுதி மக்களிடம் கேட்டதற்கு, "வீடு இடிஞ்சு விபத்து நடக்கல. அந்த செவுரு விழுந்துதான் விபத்து நடந்துருக்கு" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தனர். "நாங்கள் கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேல இங்க இருக்கோம். சக்ரவர்த்தி துகில் மாளிகை துணிக்கடை ஓனர் சிவசுப்பிரமணியம் வீடு இந்த மேட்டுல இருக்கு.

சிவசுப்பிரமணியம் வீடு
சிவசுப்பிரமணியம் வீடு

எப்பவாச்சும் அவங்க வீட்டு வழியா மெயின் ரோட்டுக்குப் போவோம். அது பிடிக்கலையோ என்னவோ தெரியல, இங்க காம்பவுண்டு செவுரு கட்டினாங்க. நாங்க தாழ்வான பகுதில இருக்கறதால செவுரு கட்டக் கூடாதுனு எதிர்ப்பு தெரிவிச்சோம். அதை அவங்க கண்டுக்கல. அந்த வழியாதான், அங்களோட கழிவுத் தண்ணியெல்லாம் இங்க கொட்டும்.

அந்தச் செவுரும் தூண் வெச்சுக் கட்டல. பராமரிப்பும் இல்ல. அதனால, க்ராக் விட்ருச்சு. சரி பண்ணுங்கன்னு சொன்னோம். அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுனு அவங்க சொன்னங்க. காலைல இடி விழுந்த மாதிரி சத்தம் கேட்டுச்சு.

சுற்றுச்சுவர்
சுற்றுச்சுவர்
`வேலை இருக்குன்னு எங்களை விட்டுட்டுப் போனார்!’ -மேட்டுப்பாளையம் சம்பவத்தால் நிர்கதியான குடும்பம்

மழை வேற நல்லா வந்துட்டு இருந்தனால நாங்களும் கண்டுக்கல. கொஞ்ச நேரத்துலதான், இடி விழுகல... விழுந்தது துணிக்கடைக்காரங்க செவுருனு தெரிஞ்சுது.

நாங்க போய் பார்த்தப்ப மூணு வீடும் தரைமட்டம் ஆகிடுச்சு. எல்லாம் பெரிய சைஸ் கரும்பாறைங்க. அதனால, அலறல் சத்தம் கூட இல்லாம, 17 உசுரும் அடங்கிடுச்சு.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

'அந்தச் செவுர சரி பண்ணுங்க... இல்லாட்டி எங்களுக்கு ஆபத்துதான்'னு அந்த வீட்டுக்காரங்க சொல்லிட்டு இருந்தாங்க. அது இப்ப நிஜமாகிடுச்சு.

குழந்தைங்க, வயசானவங்கன்னு மூணு குடும்பமே முழுசா அழிஞ்சுடுச்சு. இந்தப் பிரச்னைக்காக இத்தனை வருஷமா அலைஞ்சப்ப எல்லாம் எந்த அதிகாரியோ, அரசியல்வாதியோ கண்டுக்கல. இப்ப 17 உசுரு போனப்பறம் வந்து பார்த்து என்ன பிரயோஜனம்?

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

உசுரு திரும்பி வந்துடுமா? மழை பெஞ்சாலே, எங்க உசுர கைல பிடிச்சு வெச்சுட்டு இருக்கோம். இதற்கு நிரந்தரத் தீர்வு வேணும் சாமி" என்றனர் உறுதியான குரலில்.

ஆனந்தகுமார் மற்றும் நதியா என்ற தம்பதி, அவர்களின் வாரிசுகளான அக்ஷயா, லோகுராம் ஆகிய நான்கு பேரும் உயிரிழந்துவிட்டனர். ஆனந்தகுமாரின் அண்ணன் பன்னாரியின் மனைவி அருக்காணி, அவரது மகள்கள் ஹரிசுதா, மகாலட்சுமி, அருக்காணியின் தாய் சின்னம்மாள் ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர்.

17 பேரின் உயிரைப் பறித்த ஒற்றைச் சுவர்... மேட்டுப்பாளையம் நடூரில் நடந்தது என்ன? முழு விவரம்!

அதேபோல, பழனிச்சாமி என்பவரின் மனைவி சிவகாமி, அவரின் மகள் வைதேகி, பழனிச்சாமி அண்ணன் செல்வராஜ் மகன் ராமநாதன், மகள் நித்யா ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர்.

உறவினர் வீட்டுக்கு வந்திருந்த ருக்குமணி, கணவருடன் சண்டையால் பக்கத்து வீட்டில் தூங்கிய திலகவதி என்று அந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லாதவர்களும் உயிரிழந்துள்ளனர்.

சிவகாமி, வைதேகி
சிவகாமி, வைதேகி

இதுதவிர, ஊருக்குச் சென்று வேலைக்காகத் திரும்பியிருந்த குருசாமி, ஓபியம்மாள், மங்கம்மாள் என்று மொத்தம் 11 பெண்கள், 3 குழந்தைகள், 3 ஆண்களின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது அந்த ஒற்றைச் சுவர்.

சிவகாமி குடும்பத்தில் அவரது கணவர் பழனிச்சாமி, அவரது மகன் பிரதாப் ஆகியோரும், ஆனந்தகுமார் வீட்டில் அவரது தாய் கமலம்மாள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். "17 பேரின் உயிரைப் பறித்து, எங்களது நிம்மதியையும் பறித்துவிட்டனர்.

பழனிச்சாமி, பிரதாப்
பழனிச்சாமி, பிரதாப்

அரசாங்கம் அறிவித்துள்ள காசை வாங்குவதற்குக்கூட ஆள் இல்லை" என்று வேதனை தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

இவ்வளவு பெரிய கோரத்துக்குக் காரணமான சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியம், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீடு, கடை அனைத்தும் பூட்டிய நிலையில் இருக்கின்றன. களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக, தனது ஊழியர்கள் சிலரை ஸ்லீப்பர் செல்களாக இறக்கியுள்ளார்.

சக்ரவர்த்தி துகில் மாளிகை
சக்ரவர்த்தி துகில் மாளிகை

துணிக்கடை, லாட்ஜ், ஏலச்சீட்டு என்று ஏகப்பட்ட தொழில்களைச் செய்துவருகின்றார் சிவசுப்பிரமணியம்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, கருங்கல் சுவர் கட்ட மக்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது பணபலத்தால் அதை தவிடுபொடியாக்கிவிட்டார். அந்தப் பகுதியைச் சுற்றி இடத்தை வாங்கிப்போட்டு, மக்கள் செல்லும் வழித்தடத்தை மறைத்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறது. இவர்கள் மீது மோசடி வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவசுப்பிரமணியம்
சிவசுப்பிரமணியம்

ஆனால், இந்த முறை விஷயம் சீரியசாகிவிட்டதால், போலீஸார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளனர்.

இதனிடையே, சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட இதற்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும். ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், வீடு கட்டித் தரவேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்க வேலை வாங்கித் தரவேண்டும்

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

என்று அந்தப் பகுதி மக்கள், தலித் அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரேதப் பரிசோதனை முடிந்தும் உடல்கள் வாங்கப்படவில்லை.

நேரம் ஆக ஆக மேலிடத்திலிருந்து அழுத்தம் அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில், போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கிவிட்டனர். வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் அந்த தடியடிக்குத் தப்பிக்கவில்லை.

போலீஸ் தடியடி
போலீஸ் தடியடி

கூட்டம் ஓரளவு கலைந்த பிறகு, உறவினர்களிடம் வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கி, உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. 17 உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியத்தைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு முன்பே, இதற்காகப் போராட்டம் நடத்திய 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. குற்றவாளியைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடியவர்களை விரைந்து சிறையில் அடைப்பதற்கான காரணம் என்ன?

எல்லாம் அமைதியாகி மயானத்துக்கு வந்த பிறகு, அமைச்சர் வேலுமணி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தினார். சிவசுப்பிரமணியம் வீட்டில் எஞ்சியிருக்கும் சுவர் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

உயிரிழந்தவர்களுக்குப் பணம் வழங்குவதோ எல்லாம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதோ சிறந்த அரசு நிர்வாகம் இல்லை. அந்த 17 பேரின் உயிர் போகாமல் தடுத்திருந்தால்தான் அது சிறந்த அரசு நிர்வாகம்.

அந்த மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், பிரச்னையைச் சரிசெய்யவில்லை என்றால், சிவசுப்பிரமணியத்தையும் இந்த அரசு நிர்வாகத்தையும் தராசில் வைத்தால் ஒரே அளவில்தான் இருப்பார்கள். இருவருமே குற்றவாளிகள்தாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர்.

சடலங்கள்
சடலங்கள்

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதைப் போல, இதுவும் காலம் கடந்த சம்பிரதாய விசிட்தான்.

அடுத்த கட்டுரைக்கு