Published:Updated:

கூடங்குளம் அணு உலையை குறிவைத்த `சைபர் அட்டாக்?!' - என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு உலை மையத்தில் சைபர் அட்டாக் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

kudankulam nuclear power plant
kudankulam nuclear power plant

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் 17,270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு அணு உலைகள் கட்டப்பட்டன. சுற்றுப்புற மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2013 அக்டோபர் 22-ம் தேதி முதலாவது அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

2016 ஜூலை 10-ம் தேதியிலிருந்து இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த இரு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அணு உலைக்கு எதிரான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டிவருகின்றனர். அதற்கேற்ப இரு அணு உலைகளிலும் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன.

என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..? #DoubtOfCommonMan

கூடங்குளத்தை அணு உலைப்பூங்காவாக மாற்றும் வகையில் 6 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில், சுமார் 39,747 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2016-ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், பாதுகாப்பு மிகுந்த கூடங்குளம் அணு உலையில் `சைபர் அட்டாக்’ நடந்துள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Shashi Tharoor on tweeter
Shashi Tharoor on tweeter

இது தொடர்பாக பங்கஜ் சிங் என்பவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘’எனக்கு நேரடியாக எந்தத் தகவலும் வராதநிலையில், மூன்றாம் நபர் ஒருவர் என்னிடம், ’கூடங்குளத்தில் ஊடுருவல்’ நடந்திருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக நான் தேசிய சைபர் செக்யூரிட்டி கோஆர்டினேட்டரை (என்.சி.எஸ்.சி) தொடர்பு கொண்டு செப்டம்பர் 4-ம் தேதி நடந்த ஊடுருவல் குறித்த தகவலைத் தெரியப்படுத்தினேன். அதன் பின்னர், அந்த நபரே என்.சி.எஸ்.சி-யைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தார்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தகவல் வெளியானதும் ட்வீட் செய்த சசிதரூர் எம்.பி., ‘’இது மிகவும் முக்கியத்துவம் மிகுந்தது. நமது அணுசக்தித் துறை மீது சைபர் அட்டாக் நடத்துவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட எச்சரிக்கை. இது தொடர்பாக அரசு சார்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
சசிதரூர் எம்.பி

சசிதரூரின் கருத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாகக் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கருத்தை அறிந்துகொள்வதற்காக அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, இது பற்றிப் பேசுவதற்கு மறுத்துவிட்டனர்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தின் இணையத்தை முடக்கும் வகையில் நடத்தப்பட்ட முயற்சி தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமாரிடம் கேட்டதற்கு, ` இதுவரை எங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை’ என்று தெரிவித்தார்.

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்
நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் பேசினோம். ‘’அப்படி எந்தவொரு தகவலையும் கூடங்குளம் அணு மின்நிலைய நிர்வாகம் அல்லது காவல்துறை சார்பாக இதுவரை எனக்கு வரவில்லை. இருந்தாலும், அந்தத் தகவலில் உண்மை இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

அணு மின் நிலையம் விளக்கம்!

இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பாக விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ’கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கூடங்குளம் அணு மின்நிலையம் மற்றும் இந்திய அணுசக்தித் திட்டத்துக்கான கண்காணிப்பு மையங்கள் அனைத்தும் தனியாக இணைக்கப்பட்டுள்ளதே தவிர இணையத்தின் மூலமாக இணைக்கப்படவில்லை.

அதனால் எந்த வகையிலும் இணையத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. தற்போது கூடங்குளம் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது அணு உலையில் 600 மெகாவாட் மின்சாரமும் எந்தத் தடையும் இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.