Published:Updated:

அமைச்சரை தூக்கிச் சென்ற மீனவர்! - தண்ணீரில் கால்வைக்கத் தயங்கினாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தண்ணீரில் கால்வைக்கத் தயங்கினாரா அனிதா ராதாகிருஷ்ணன்?
தண்ணீரில் கால்வைக்கத் தயங்கினாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஏரியிலிருந்து மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச் சுமந்தபடி கரைக்குக் கொண்டு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் ஏரியும் கடலும் சேரும் முகத்துவாரப் பகுதியில் பருவகால மாற்றத்தாலும், கடல் அலை சீற்றத்தாலும் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாகி, தொடர்ச்சியாக அடைப்பு ஏற்படுகிறது. இதனால், பழவேற்காடு மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மீனவ மக்கள் கடலில் சென்று மீன்பிடிக்க இயலாத சூழல் நிலவுகிறது.

மீனவர்கள் தரப்பில் அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இந்தப் பிரச்னையை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார்.

ஏற்கெனவே பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அப்போது பழவேற்காட்டிலிருந்து முகத்துவாரம் பகுதிக்கு ஏழு நபர்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய படகில் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அதனால், அதிக பாரம் தாங்காமல் அமைச்சர் பயணித்த படகு ஒருபுறமாகச் சாயத் தொடங்கியதால் கண நேரத்தில் அனைவரும் பீதியடைந்தனர்.

பின்னர், அமைச்சர் பயணித்த படகிலிருந்து பாதிக்கும் அதிகமானோர் வேறு படகுக்கு மாறினார்கள். அதன் பிறகு, நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் ஏரிப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுவிட்டுத் திரும்பினார். அப்போது உடன்வந்த பொன்னேரி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் தண்ணீரில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கரைக்கு வந்தனர். ஆனால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும் தண்ணீரில் கால்வைக்கத் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.


அதையடுத்து, அங்கிருந்த மீனவர் ஒருவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அலேக்காகத் தூக்கிச் சுமந்தபடி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இதை, அங்கிருந்த செய்தியாளர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர், அமைச்சர் அங்கிருந்து ஆய்வை முடித்துக்கொண்டு கிளம்பிய சில மணி நேரங்களில் மீனவர் சுமந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ-க்கள் என உடன் வந்தவர்கள் அனைவரும் ஏரி நீரில் நடந்து வந்தபோது, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும் தண்ணீரில் கால்வைக்கத் தயங்கியது ஏன் என்றும், தண்ணீரில் கால்வைக்கவே தயங்கும் இவர் எப்படி மீனவ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளுக்குச் செவி சாய்ப்பார் என்றும், பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களில் அந்த நிகழ்வின் போது பதியப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து அமைச்சரின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``பாவம் திமுக அமைச்சருக்குத் தண்ணீரில் கண்டம். கடல் தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக்கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர்... வெட்கக் கேடு...” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு பேசினோம்.``நான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். 15 நிமிடங்களில் நானே உங்களை அழைக்கிறேன்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அதற்குப் பின்னர், பலமுறை அழைத்தும் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். அதில், ``நான் யாரையும் தூக்கிக்கொண்டு செல்லச் சொல்லவில்லை. பாசத்தால் அவர்களே தூக்கிச் சென்றனர்” என்றார்.

அமைச்சரை தூக்கிச் சென்ற மீனவர்! - தண்ணீரில் கால்வைக்கத் தயங்கினாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

இந்தநிலையில், இந்தச் சம்பவத்தை நேரிலிருந்து பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொன்னேரி நிர்வாகி அபுபக்கரிடம் பேசினோம். "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்கள் யாரிடமும் தன்னைத் தூக்கிச் செல்லுமாறு கூறவும் இல்லை, கட்டாயப்படுத்தவும் இல்லை. அங்கு சகதி அதிகமாக இருந்ததால், மீனவர் ஒருவர் தாமாகவே முன்வந்து அமைச்சரைத் தூக்கினார். அந்த நேரத்தில் யதேச்சையாக நடந்த செயல் அது. அமைச்சர் அப்போது தன்னைத் தூக்க வந்த மீனவரைத் தடுத்திருந்தாலும், அதற்கும் சிலர் இங்கு ஒரு கதைகட்டி விமர்சனம் செய்திருப்பார்கள்.

அதேபோல், அமைச்சரைத் தூக்கி வந்த மீனவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி அவதூறு செய்துவருகின்றனர். ஆனால், உண்மையில் அந்த மீனவர் பட்டியலினத்தவர் அல்ல. அவர் வேறு சமூகத்தைச் சார்ந்தவர். ஒருவேளை, நேற்று அமைச்சர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருந்தால், மீனவ மக்களுக்காக விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் சார்பில் நாங்களே கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியிருப்போம். ஆனால், தங்கள் மீனவ கிராமத்துக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் என்ற முறையில் அடிப்படை அக்கறையுடன்தான் அந்த மீனவர் அவரைத் தூக்கிச் சென்றார். மற்றபடி, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார்.

``ஜெயக்குமார் வெறும் 10 மணி பேட்டி அமைச்சர்தான்!" - வெடிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு