Published:Updated:

சீனிவாசன் பதவியில் நீடிக்கக் கூடாது... முதல்வர் வீட்டை முற்றுகையிட மலைவாழ் மக்கள் சங்கம் முடிவு!

``அமைச்சர் பதவியில் இருந்தால் போலீஸார் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதனால், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கோரி வரும் 10-ம் தேதி முதல்வர் வீட்டை முற்றுகையிடப் போகிறோம்.’’

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

இடித்துரைக்கும் பெரியவர்கள் துணை கொண்டு நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்பது இந்தக் குறளின் பொருள்.

சுற்றிக் கற்றவர்களும் மெத்த படித்தவர்கள் இருந்தாலும் இடித்துரைக்கும் ஒருவர்கூட இல்லாத காரணத்தால்தான் அரசியல்வாதிகள் நிறையவே தவறுகளைச் செய்கின்றனர். முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமைத் தொடங்கி வைக்கச் சென்ற திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவன் ஒருவரை 'வாடா போடா' என்று ஆணவத்துடன் அழைத்து தன் செருப்பை கழற்றச் சொன்ன சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதைவிட, சுற்றிலும் இருந்த அதிகாரிகளும் இதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்ததுதான், இப்போது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

ஒரு நிமிடத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால், திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் பேசுபொருளாகிவிட்டார். இத்தனைக்கும் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைக்கும்போது அருகில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உடன் இருக்கிறார். முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் உள்ளார். மெத்தப் படித்த வனத்துறை அதிகாரிகள் சுற்றிலும் இருந்தனர். அமைச்சரின் பி.ஏ.க்கள் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். இருந்தும், 'இது தவறானது. மனித உரிமையை மீறுவது. பிரச்னையை ஏற்படுத்திவிடும்' என்று எடுத்துரைக்கும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லாமல்போனதுதான் ஆச்சர்யமாகவுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிக்கொண்டிருக்கும்போது அருகிலுள்ள அதிகாரிகள் யாருக்கும் அது தவறாகவே தோன்றவில்லை. சுற்றியிருந்த அனைத்து அதிகாரிகளும் குறிப்பாக வனத்துறையினரும் புகைப்படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில், சிறுவன் செருப்பை கழற்றும்போது மறைத்து நின்றார்களே தவிர, விபரீதத்தை உணரவில்லை.

அமைச்சர் சீனிவாசன்
அமைச்சர் சீனிவாசன்

கண் எதிரே மனித உரிமை மீறல் சம்பவம் நடப்பதை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள் என்ற அவப்பெயர்தான் அனைத்து அதிகாரிகளுக்கும் கிடைத்திருக்கிறது. உண்மையில் அந்தக் கணத்தில் அமைச்சரைத் தடுக்கும் எண்ணம் அவர்களுக்கு உதிக்கவில்லையா, அது தவறு என்றே அவர்கள் உணரவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகத்திடம் பேசியபோது, ''முதலில் அமைச்சர் பதவியில் இருந்தால் போலீஸார் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதனால், அவரை பதவி நீக்கம் செய்ய கோரி வரும் 10-ம் தேதி முதல்வர் வீட்டை முற்றுகையிடப் போகிறோம்.

சண்முகம்
சண்முகம்

மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கண் எதிரே மனித உரிமை மீறலான விஷயம் நடக்கும்போது , அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அதிகாரிகளும் இதற்கு பொறுப்பு. பேரப் பிள்ளை மாதிரி அவர் நினைச்சிருந்தாலும் அந்த மொழி நடையே அவரின் ஆணவத்தைக் காட்டுகிறது. 'ஏம்பா... இங்க வாப்பா என்னால குனிய முடியாது கொஞ்சம் உதவி பண்ணுனு' கேட்டுருந்தா பரவாயில்லை. ஆனால், அவரோட மொழி நடையைப் பார்த்தா யாருக்கும் கோபம் வரும். திண்டுக்கல் சினிவாசன் பதவியில் நீடிக்கக் கூடாது'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், 'வனத்துறை பழங்குடியின மக்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அமைச்சர் நினைத்து விட்டாரா? இவர் வெறும் வனத்துறை அமைச்சர்தான் பழங்குடியினர்தான் வனத்துக்கே ராஜா' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பழங்குடியின மக்களுக்கென்று ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி பாரம்பர்யங்கள், சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் நிச்சயம் அமைச்சருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது, சாமி குற்றம் ஏற்பட்டுவிட்டதாக, சிறுவனின் ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கூறியுள்ளனர்.

சீனிவாசன் பதவியில் நீடிக்கக் கூடாது... முதல்வர் வீட்டை முற்றுகையிட மலைவாழ் மக்கள் சங்கம் முடிவு!

இதற்கிடையே , மசினகுடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விஷயம் விஸ்வரூபம் எடுப்பதையடுத்து, சிறுவனின் குடும்பத்தினரை ஊட்டியில் தமிழகம் மாளிகைக்கு அழைத்து, இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர்.

பேச்சுவார்த்தை முடிந்தபின் அமைச்சர், `எல்லாம் முடிந்தது, வருத்தம் தெரிவித்தாகிவிட்டது. நாங்கள் சமாதானமாகிவிட்டோம்' எனப் பேட்டி கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனின் தாயார் காளியம்மாள், ``எங்க கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டிருக்கோம். வேலை வாய்ப்பும் கேட்டோம். எல்லாமே ஏற்பாடு பன்றேன்னு சொன்னாங்க. இனிமேல் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்தப் பகையும் இல்ல. பிரச்னை தீர்ந்துடுச்சு. இனிமே, என் பையன் இது விஷயமா பேச மாட்டான்" எனக் கூறி தன் மகனை அழைத்துக்கொண்டு வனத்துறை வாகனத்தில் கிளம்பிவிட்டார்.

ஆனால், `வனத்துறை அதிகாரிகளின் நிர்பந்தத்தின்பேரில், அந்தக் குடும்பத்தினர் சமாதானமாகியுள்ளனர். திட்டமிட்டபடி அமைச்சருக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார் சண்முகம்.

ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு