Published:Updated:

அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை! - டார்கெட் ஆளுநரா... துணைவேந்தரா?

சூரப்பா
பிரீமியம் ஸ்டோரி
சூரப்பா

தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களைச் செய்துவருகிறார் சூரப்பா. எனவே, அவர்மீது தமிழக அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை! - டார்கெட் ஆளுநரா... துணைவேந்தரா?

தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களைச் செய்துவருகிறார் சூரப்பா. எனவே, அவர்மீது தமிழக அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Published:Updated:
சூரப்பா
பிரீமியம் ஸ்டோரி
சூரப்பா
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாசம், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் அரவணைப்பு என அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையே தனது இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்த துணைவேந்தர் சூரப்பாவுக்கு, `விசாரணை கமிஷன்’ என்ற பெயரில் அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்துவைத்திருக்கிறது தமிழக அரசு.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், `அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் அண்ணா பல்கலைக் கழக துணை இயக்குநர் சக்திநாதன் ஆகியோர் தற்காலிக பேராசிரியர் நியமனத்தில் ஒவ்வொரு நபரிடமிருந்தும் 13 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் இருவரும் 80 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்திருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து 200 கோடி ரூபாய் அளவுக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல் செய்துள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக 
சர்ச்சை! - டார்கெட் ஆளுநரா... துணைவேந்தரா?

அதேபோல், வரதராஜன் என்பவர் உயர் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள புகாரில், தேர்வுத்துறையின் அலுவலக உதவியாளருக்குப் பதவி உயர்வு அளிப்பதில் முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர, ஐ.ஐ.டி-யில் பணியாற்றிவந்த சூரப்பாவின் மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமைத்துறையில் கௌரவப் பதவி வழங்கியிருந்ததும் சர்ச்சையானது. இந்த விவரங்களை சூரப்பா மீதான முறைகேடு புகார்களை விசாரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையிலும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

விசாரணைக்குழு குறித்துப் பேட்டியளித்த சூரப்பாவும், ‘`என்மீதான புகார்களில் உண்மை இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசாகூட முறைகேடு நடக்கவில்லை. என் மகளின் சேவை, பல்கலைக்கழகத்துக்குத் தேவை என்பதால் நியமிக்கப்பட்டார். இந்தப் புகார்களால் என் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருந்தால், ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்கள்’’ என்றார் கொதிப்புடன்.

இந்தநிலையில், சூரப்பாமீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் சிவக்குமார், அ.மார்க்ஸ், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி உட்பட 80 கல்வியாளர்கள் அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக பேராசிரியர் சிவக்குமாரிடம் பேசினோம்.

அண்ணா பல்கலைக்கழக 
சர்ச்சை! - டார்கெட் ஆளுநரா... துணைவேந்தரா?

‘‘தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களைச் செய்துவருகிறார் சூரப்பா. எனவே, அவர்மீது தமிழக அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தொடர்பாக முதல்வருக்கும், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் நாங்கள் அனுப்பியுள்ள அறிக்கையில், `எமினன்ஸ்’ (உயர் சிறப்பு அந்தஸ்து) பெறுவதற்காக, பல்கலைக்கழகமே ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும் என்று சூரப்பா தெரிவித்தார். இதன்பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதா?’ என்று கேட்டிருக்கிறோம்.

மேலும், பகவத் கீதையை விருப்பப் பாடமாகக் கொண்டுவந்திருக்கிறர். இதை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 500 கல்லூரிகளிலும் அமல்படுத்தியுள்ளார். இது குறித்தெல்லாம் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிடாதது ஆச்சர்யமளிக்கிறது. தன் மகளை அறிவுசார் சொத்துரிமைத்துறையில் நியமித்ததைச் சரியென்றும், அது சம்பளமில்லாத கௌரவப் பதவி என்றும் சூரப்பா நியாயப்படுத்துகிறார். இது அறநெறிப்படி முறையற்றது.

2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பல்கலைக்கழகங் களுக்கான சட்டத் திருத்தத்தில் 4ஏ, 4பி என இரண்டு பிரிவுகளைக் கொண்டுவந்துள்ளனர். அதில், பிரிவு 4பி-ன்படி, `துணைவேந்தர்மீது புகார் வந்தால், நீதிபதி தலைமையிலோ, தலைமைச் செயலாளர் அந்தஸ்திலுள்ள ஒருவர் தலைமையிலோ குழு விசாரணை நடத்தலாம். அந்தக் குழு, விசாரணை செய்து ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுநருக்குத்தான் இருக்கிறது. அவர், சூரப்பா மீது நடவடிக்கை எடுப்பாரா என்பது மிக முக்கியமான கேள்வி.

இவர்கள் சொல்லும் ஊழல் புகார்களின்மீது முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பல்கலைக்கழக நிதிக்குழுவையோ, ஆட்சிக் குழுவையோ கலந்தாலோசிக்காமல் ஒரு துணைவேந்தர் தன்னிச்சையாக நிதி குறித்துச் சொல்வதே விதிகளுக்குப் புறம்பானது. மத்திய அரசின் கைப்பாவையாக சூரப்பா செயல்படுகிறார். மாநில அரசையும் அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை” என்றவர்,

‘‘அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் இந்தப் பிரச்னை என்றில்லை. சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் தேர்வுத்தாள் முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி உட்பட பல்வேறு தளங்களில் நடந்திருக்கும் புகார்கள் குறித்துப் பேராசிரியர் முரளி என்பவர், அமைச்சருக்கும் உயர்கல்வித்துறைச் செயலருக்கும் மனு கொடுத்திருக்கிறார். இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இதன்பேரில் அமைச்சரோ, ஆளுநரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்பழகன் - சிவகுமார்
அன்பழகன் - சிவகுமார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மீது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றத் தலைவர் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியும் பலனில்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரே ஒரு விசாரணைக்குழுவை அமைத்தார். அந்தக் குழு என்னவானது என்றே தெரியவில்லை. எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடந்திருக்கும் ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார் கொதிப்புடன்.

இது குறித்து விளக்கம் பெற துணைவேந்தர் சூரப்பாவைத் தொடர்புகொண்டோம். ‘‘இது தொடர்பாக மாநில அரசிடமே விளக்கம் கேளுங்கள். போதுமான அளவுக்கு நான் பதில் சொல்லிவிட்டேன்’’ என்று மட்டும் சொன்னார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பேசினோம். ‘‘நவம்பர் 16 முதல் விசாரணை தொடங்குகிறது. சூரப்பா மீதான புகார் மனுவின் உண்மைத்தன்மை என்ன என்பதைப் பற்றி முழுமையாக விசாரித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கும் ‘எமினன்ஸ்’ அந்தஸ்து பெறும் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை. உயர் சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் துணைவேந்தரே அனைத்து முடிவுகளையும் எடுத்து விட முடியாது. அரசாங்கம்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். உயர் சிறப்பு அந்தஸ்தை நாங்கள் நிராகரித்துவிட்டோம்’’ என்றவரிடம், ‘‘புகார் வந்து இவ்வளவு நாள்கள் கழித்து இப்போது நடவடிக்கை எடுப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறார்களே..?’’ என்றோம்.

‘‘தகவல் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. அதனால், காத்திருக்க வேண்டியிருந்தது. புகார்கள் தொடர்பான விசாரணையை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக ஒரு நீதிபதியை நியமித்திருக்கிறோம். அதேபோல், சூரப்பா ஆளுநருக்கு நெருக்கமானவர் என்று ஊடகங்கள்தான் சொல்கின்றன. அவர் (ஆளுநர்) பல்கலைக்கழக வேந்தர். இவர் (சூரப்பா) துணைவேந்தர். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது’’ என்றார்.

ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசாணை வெளியிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு, தற்போது சூரப்பா விவகாரம் மூலம் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் டார்கெட் துணைவேந்தரா... ஆளுநரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது!