Published:Updated:

`ஒரே இடத்தில் குவிந்த தி.மு.க - அ.தி.மு.க நிர்வாகிகள்!' -`திடீர்' பதற்றத்தால் கொதித்த நெல்லை எஸ்.பி

இரு தரப்பையும் வெளியேற்றிய எஸ்.பி
இரு தரப்பையும் வெளியேற்றிய எஸ்.பி

ஒரேநேரத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளை மாவட்டக் காவல்துறை அலுவலகத்தின் உள்ளே அனுமதித்தால் மோதல் ஏற்படக்கூடும் என்பதை போலீஸார் கணிக்கத் தவறிவிட்டனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தி.மு.க-வினருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க-வின் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் அரசு வழக்கறிஞருமான பழனிசங்கர் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய மீம்ஸ் வெளியிட்டார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தி.மு.க-வைச் சேர்ந்த நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் ஒரு பெண்ணை மிரட்டி அவருக்குச் சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயல்வதாக இரு வாரங்களுக்கு முன்பு மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க-வினர் இருந்தனர்.

மனு அளித்த அ.தி.மு.க-வினர்
மனு அளித்த அ.தி.மு.க-வினர்

அதன் பின்னர் அந்தப் பெண்ணை ஞானதிரவியம் எம்.பி., அவரது மகன்கள் அடியாட்கள் வைத்து அடித்து உதைத்ததாகவும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பழவூர் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

`நீதி, நியாயம் ஒருபோதும் தோற்காது...!'- மறுவாக்கு எண்ணிக்கை தீர்ப்பு குறித்து அப்பாவு

ஞானதிரவியம் மற்றும் அவருடைய மகன்கள் மீதான வழக்கு குறித்து விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க-வினர் ராதாபுரம் எம்.எல்.ஏ-வான இன்பதுரை தலைமையில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரான ஓம்பிரகாஷ் மீனாவிடம் மனு அளிக்க வந்தனர். 

மனு அளித்த தி.மு.க நிர்வாகிகள்
மனு அளித்த தி.மு.க நிர்வாகிகள்

அந்தநேரத்தில், கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக இணையத்தில் மீம்ஸ் வெளியிட்ட வழக்கறிஞர் பழனிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் சபாநாயகரும் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் தலைமையில் ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு உள்ளிட்டோர் வந்தார்கள்.

ஒரே சமயத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் எஸ்.பி அலுவலகத்தின் உள்ளே சென்றார்கள். அப்போது இரு கட்சிகளின் தொண்டர்களும் அந்த இடத்தில் திரண்டு நின்றார்கள். இரு தரப்பினரும் எஸ்.பி-யிடம் மனு அளித்துவிட்டுத் திரும்பியபோது தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எஸ்.பி அலுவலகம் முன் தி.மு.க நிர்வாகிகள்
எஸ்.பி அலுவலகம் முன் தி.மு.க நிர்வாகிகள்

இரு தரப்பினரும் வார்த்தைகளால் மோதியதால் அந்தப் பகுதியில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தன. அதனால் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா தன் அறையில் இருந்து வெளியே வந்து தரைத்தளத்தில் கூடியிருந்த இரு கட்சியினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலத்தில் இரு கட்சியினரும் மனு அளிக்க நேரம் கேட்டபோதே அவர்களுக்குத் தனித்தனி நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் இரு கட்சிகளின் நிர்வாகிகளை ஒரே நேரத்தில் வந்தபோது எஸ்.பி-யின் தனிப்படை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்

இரு கட்சிகளின் தொண்டர்களும் எஸ்.பி அலுவலக வளாகத்தில் கூடியிருந்ததை தனிப்படை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். அதன் காரணமாகவே பெரிய மோதல் ஏற்படும் ஆபத்து உருவானதாக இரு கட்சியினரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு