Published:Updated:

பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில் அதிகாரிகள்

பிறந்தநாள் விழா
பிறந்தநாள் விழா

கும்மிடிபூண்டியில் ஊரடங்கு காலகட்டத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார் தி.மு.க பிரமுகர். இந்த விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகள், கட்சியினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு கடந்த ஜூன் 14-ம் தேதி தி.மு.க பிரமுகர், தன்னுடைய 50-வது பிறந்தநாளை வெகுசிறப்பாகக் கொண்டாடியுள்ளார். மது, பிரியாணி விருந்தில் தி.மு.க பிரமுகரின் ஆதரவாளர்கள், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். கட்சியினர், அதிகாரிகள் முன்னிலையில் பிறந்தநாள் கேக்கை வெட்டி தி.மு.க பிரமுகர் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் விழா
பிறந்தநாள் விழா

இந்த விருந்துக்குப் பிறகு அவருருக்குக் காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குக் கொரோனா பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதியானது. ஊரடங்கு உத்தரவை மீறி பிறந்தநாள் விழாவை தி.மு.க பிரமுகர் கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

இதையடுத்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அரசு அலுவலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க பிரமுகர், அரசு அலுவலருக்குக் கொரோனா தொற்று எப்படி வந்தது என சுகாதாரத்துறையினர் விசாரித்தபோதுதான் தி.மு.க பிரமுகரின் பிறந்தநாள் குறித்த தகவல் வெளியானது.

பிறந்தநாள் விழா
பிறந்தநாள் விழா

ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்குப் பிறந்தநாள் குறித்த தகவல் தெரிந்ததும் தி.மு.க பிரமுகர் உட்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழாவில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தி.மு.க பிரமுகரின் பிறந்தநாள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

யார், யார்?

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தி.மு.க பிரமுகர், சமீபத்தில் நடந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய தேர்தலில் வெற்றி பெற்று முக்கியப் பதவியில் இருக்கிறார். கட்சியிலும் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இந்தச் சமயத்தில் ஊரடங்கு நேரத்தில் பிறந்நாளைக் கொண்டாடி கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்துள்ளார். இதுதொடர்பாக 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது " என்றனர்.

உ.பி அரசு காப்பக சர்ச்சை: 57 சிறுமிகளுக்கு கொரோனா; 7 சிறுமிகள் கர்ப்பம்!
பிறந்தநாள்  விழா
பிறந்தநாள் விழா

சுகாதாரத்துறையினர் கூறுகையில், ``கொரோனா தொற்று தொடர்பாக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உள்ளாட்சிப் பிரதிநிதியான ஒருவரே தன்னுடைய பிறந்தநாள் மூலம் கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்துள்ளார். பிறந்தநாளில் அரசு அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் யார், யார் என விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு