Published:Updated:

`அந்த குளுக்கோஸ் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால் நாங்கள்..’ - கிராமசபை கூட்டத்தில் கவனம்பெற்ற மாணவி

கிராமசபைக் கூட்டம்

``சமூக விரோதமாக செயல்படும் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலையின் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது; துர்நாற்றத்தால் காற்று மாசடைந்துள்ளது. தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், 20 ஏக்கர் நிலத்தில் ஏரி போல் தேக்கி வைத்துள்ளனர்.’’

`அந்த குளுக்கோஸ் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால் நாங்கள்..’ - கிராமசபை கூட்டத்தில் கவனம்பெற்ற மாணவி

``சமூக விரோதமாக செயல்படும் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலையின் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது; துர்நாற்றத்தால் காற்று மாசடைந்துள்ளது. தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், 20 ஏக்கர் நிலத்தில் ஏரி போல் தேக்கி வைத்துள்ளனர்.’’

Published:Updated:
கிராமசபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மங்களபுரம் ஊராட்சியில், கிராசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் பல்வேறு பொது பிரச்னைகளை பற்றி விவாதித்தனர். இந்நிலையில், இந்த கிராமசபைக் கூட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையில் வந்து, தங்கள் ஊர்ப் பிரச்னை பற்றி பேசினர். அதில் ஒரு மாணவி, `எங்களுக்கு முதல்வர் சீருடை, காலணி, சைக்கிள், லேப்டாப், இப்போது காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை இலவசமாகக் கொடுத்து வருகிறார். எங்களுக்கு முதல்வர் இவ்வளவு கொடுத்தாலும், எங்களால் நிம்மதியாக படிக்க முடியலை. எங்களுக்கு எந்த இலவசங்களும் வேண்டாம். எங்கள் பகுதியில் ஒரு குளுக்கோஸ் தொழிற்சாலை 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

கிராசபைக் கூட்டத்தில் மாணவிகள்
கிராசபைக் கூட்டத்தில் மாணவிகள்

கடந்த 30 வருடங்களாக இந்த ஆலை நிர்வாகம், சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதியில் சமூக விரோதமாக செயல்படும் அந்த தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலையின் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த ஆலையில் இருந்து வரும் துர்நாற்றத்தால், காற்று மாசடைந்துள்ளது. இதனால், சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதோடு, எங்கள் சுற்றுவட்டார கிராம பகுதியினர் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுத்தமான காற்று எப்படி இருக்கும் என்று, லீவு நாட்களில் என் அம்மா, அப்பா என்னை மாமா வீட்டுக்குக் அழைத்துச் செல்லும்போதுதான் தெரிகிறது. எங்கள் ஊர் பெரியவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி, இந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூட வைத்திருக்கிறார்கள். அதனால், ஓரளவு சுத்தமான காற்று கிடைக்கிறது. இந்த தொழிற்சாலை ரூ. 3 கோடி வரை வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றியிருப்பது, செய்திகள் மூலம் தெரியவது. அதோடு, புறம்போக்கு நிலங்களையும் ஆக்ரமிப்பு செய்துள்ளனர். இந்தத் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், 20 ஏக்கர் நிலத்தில் ஏரிபோல் தேக்கி வைத்துள்ளனர்.

மனு அளிக்கும் மாணவிகள்
மனு அளிக்கும் மாணவிகள்

அதனால், 7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மண்வளம், நீர்வளம் மாசடைந்துள்ளது. நல்ல குடிநீர் எடுக்க நாங்கள் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. சட்டவிரோதமாகச் செயல்படும் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங்கு வந்துள்ள அதிகாரிகள் எங்கள் பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எங்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய உத்தரவாதத்தையும் எனக்கு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, சமூக விரோதமாக செயல்படும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி, எங்கள் கிராமப் பகுதியினர் சுத்தமான காற்றை சுவாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார். அதோடு, தங்கள் கோரிக்கையை மாணவிகள் அனைவரும் அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர்.

இளைய இந்தியா எழுப்பட்டும் கேள்விகளை!