Published:Updated:

`அப்பட்டமான விதிமீறல்; சட்டம் சும்மா இருக்காது!' - பிக் பாஸ் செலிபிரட்டியால் கொதித்த கலெக்டர்

ரஜித் குமார்
ரஜித் குமார்

`மத, அரசியல் மற்றும் சமூக குழுக்கள் அனைத்தும் மக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டங்களைத் தவிர்க்கும்போது, இத்தகைய செயல் அப்பட்டமான விதிமீறல். இந்தச் செயலுக்கு எதிராக சட்டம் தன் கண்களை மூடிக்கொண்டிருக்காது'

கேரளாவில் தற்போதுவரை 22 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு கொச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு காரணமாக கைகாட்டப்படுபவர் ரஜித் குமார் என்ற ஒற்றை நபர். தற்போது நடந்துவரும் மலையாள பிக் பாஸ் சீசன் 2-வின் போட்டியாளர்தான் இந்த ரஜித். இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட, நேற்று இரவு 9 மணி அளவில் கொச்சி விமான நிலையம் வந்தார். இவரை வரவேற்க அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொச்சி விமான நிலையத்தில் குவிந்தனர்.

ரஜித் குமார்
ரஜித் குமார்

விமானத்திலிருந்து ரஜித் இறங்கிவந்ததும், திரண்டிருந்த ரசிகர்கள் அவரை வரவேற்கிறோம் என்கிற பெயரில் விமான நிலையத்தை ஒருவழி செய்தனர். மேலும், அவருடன் போட்டோ எடுப்பது, ஊர்வலமாக அழைத்துச் செல்வது என அதகளம் பண்ணினர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாமிடத்தில் உள்ளது கேரளம். முதல் பாதிப்பும் இதே கேரளத்தில் இருந்துதான் வந்தது. இதனால் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதுடன், அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய தனியார் நிகழ்ச்சிகளும் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

`இந்த டீல் முடிஞ்சா, என் பாக்கெட் நிறையும்!' -விவசாயி புகாரால் நள்ளிரவில் சிக்கிய துணை கலெக்டர்

நிலைமை இப்படியிருக்க, பிக் பாஸ் செலிபிரட்டியை வரவேற்பதற்காக செய்யப்பட்ட இந்தச் செயல் அதிகாரிகள், மற்றும் அரசு மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களின் இந்தச் செயலால் கொதித்தெழுந்த எர்ணாகுளம் கலெக்டர் சுஹாஸ், ``COVID-19 (கொரோனா வைரஸ் நோய்) பரவுவதற்கு எதிராக உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்த நேரத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளரும் அவரது ரசிகர் சங்கமும் நேற்று இரவு கொச்சி விமான நிலையத்தில் நடந்துகொண்ட செயல் ஒவ்வொரு மலையாளிக்கும் வெட்கக்கேடானது.

கலெக்டர் சுஹாஸ்
கலெக்டர் சுஹாஸ்

மத, அரசியல் மற்றும் சமூக குழுக்கள் அனைத்தும் மக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டங்களைத் தவிர்க்கும்போது, இத்தகைய செயல் அப்பட்டமான விதிமீறல். இந்தச் செயலுக்கு எதிராக சட்டம் தன் கண்களை மூடிக்கொண்டிருக்காது. மனித வாழ்க்கையைவிட நட்சத்திர வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது மலையாளியின் கேரக்டர் இல்லை. ஒரு சிலரின் இந்த நடவடிக்கை கேரள சமுதாயத்தின்மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்" என்று கோபமாக பதிவிட்டதுடன், ரஜித்தை வரவேற்க திரண்டவர்களில் 79 பேர் மீது அதிரடியாக வழக்கு பதிந்து உத்தரவிட்டார். இது தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

`எனக்கு வரதட்சணை வேண்டும்... ஒரே ஒரு கண்டிஷன்!' -பேராவூரணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சப் கலெக்டர்

யார் இந்த ரஜித் குமார்?!

தாவரவியல் பேராசிரியர் ஆன இந்த ரஜித் பிரபலமானது 2013-ல் தான். அதுவும், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்க அது பிரச்னையாக மாறியது. எனினும் தொடர்ந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்தார். ``பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் குழந்தைகள் திருநங்கைகளாக பிறக்கிறார்கள்" என்பது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து அதற்காக வழக்குகளையும் சந்தித்து வரும் நபர்தான் ரஜித். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் தற்போது மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் சீசன் 2-வின் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் முக்கிய நட்சத்திரமாக வலம்வந்தார். இதற்கிடையே, போன வாரம் பிக் பாஸில் பள்ளிக்குழந்தைகள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் பள்ளிக்குழந்தைகள் வேடமிட்டு அவர்களைப் போலவே நடந்துகொண்டனர்.

ரஜித் குமார்
ரஜித் குமார்

அப்போது ரேஷ்மா என்ற சக போட்டியாளரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ரேஷ்மாவின் கண்களில் மிளகாயை தடவிவிட்டார் இந்த ரஜித். இதில் ரேஷ்மாவின் கண்களில் பாதிப்பு ஏற்பட ரஜித் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் இந்தச் செயலுக்காக சனிக்கிழமை போட்டியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். அவ்வளவுதான் ரஜித் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். மோகன்லால் ஃபேஸ்புக் பக்கத்தை மொத்தமாக ஆக்கிரமித்த அவரது ரசிகர்கள் ரஜித் வெளியேற்றப்பட்டது தவறு என்று மோகன்லால்மீது வசைபாடத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ரஜித் நேற்று கொச்சி திரும்ப, இதுபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கமல் `பிக் பாஸ்’-ல் ஸ்கோர் செய்ததை, ரஜினி `மேன் Vs வைல்டு’-ல் எடுப்பாரா? சின்னத்திரை `அரசியல்'
அடுத்த கட்டுரைக்கு