Published:Updated:

`சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் கடத்தல்?!' - சேலத்தைத் தொடர்ந்து வெளிவந்த ஈரோடு சர்ச்சை

நவநீதகிருஷ்ணன்
நவநீதகிருஷ்ணன்

`என் கண் முன்னாலேயே என்னோட மனைவியை அடிச்சி இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. இப்ப அவ உயிரோட இருக்காளான்னு கூட தெரியலை'.

திருப்பூர் மாவட்டம், காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது இவருக்கும் மெளனிகா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. பல வருடங்களாகக் காதலித்து வந்தவர்கள் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திருப்பூரில் உள்ள விநாயகர் கோயில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே `மகளைக் காணவில்லை’ என மெளனிகாவின் பெற்றோர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். அதையடுத்து மாலையும் கழுத்துமாக ஸ்டேஷனில் ஆஜரான மெளனிகா, `விருப்பத்தோடு தான் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டேன்’ என்றதோடு பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்றிருக்கிறார். அதன்பிறகு கணவரோடு மகிழ்ச்சியாக குடும்ப நடத்திவந்த மெளனிகாவுக்கு மார்ச் 9-ம் தேதி மாலை, அதிர வைக்கும் வகையில் அந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

`தாமதத்தால் எனக்கோ, என் மனைவிக்கோ எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் தாங்களும் தங்கள் நிர்வாகமுமே முழுப்பொறுப்பு’ என அவர் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்

அன்று மதியம் மெளனிகாவின் போனுக்குப் பேசிய உறவினர் ஒருவர் `அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில அட்மிட் செஞ்சிருக்கோம்’ எனக் கூறியிருக்கிறார். பதறிப்போன மெளனிகா கணவரை துணைக்கு அழைத்துக்கொண்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்பாவைப் பார்த்துவிட்டுக் கிளம்பத் தயாராக இருந்த மெளனிகாவை உறவினர்கள் சிலர் அடித்து இழுத்து காரில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.

தடுக்கப் போன கணவர் நவநீதகிருஷ்ணனையும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மனைவியை மீட்டுத்தர வேண்டுமென அன்றைக்கு நவநீதகிருஷ்ணன் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், ஒருவாரத்துக்கு மேலாகியும் மெளனிகா எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில், `என்னுடைய மனைவி எங்கு இருக்கிறாள் எனக் கண்டுபிடித்து மீட்டுத் தாருங்கள்’ எனக் கலங்கிய கண்களோடு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார் நவநீதகிருஷ்ணன்.

மேலும், அந்த மனுவில் `காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் என் மனைவியின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல்தான். தாமதத்தால் எனக்கோ, என் மனைவிக்கோ எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் தாங்களும் தங்கள் நிர்வாகமுமே முழுப்பொறுப்பு’ என கலெக்டரையே அதிர வைக்கும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.

உறவினர்களுடன் மனு அளிக்க வந்த நவநீதகிருஷ்ணன்
உறவினர்களுடன் மனு அளிக்க வந்த நவநீதகிருஷ்ணன்

என்ன நடந்ததென நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம். ``அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னுதான் ஆஸ்பத்திரிக்குப் பார்க்கப் போனோம். ஆனா, எங்களைப் பிரிக்கத் திட்டமிட்டு இப்படி ஒரு நாடகத்தை அவங்க நடத்துவாங்கன்னு, நாங்க நினைச்சுக் கூட பார்க்கலை. என் கண் முன்னாடியே என் மனைவி மெளனிகாவை அடிச்சி இழுத்துட்டுப் போனாங்க. இப்ப அவ எங்க இருக்கான்னு கூட தெரியலை. நாங்க சாதி மறுப்புத் திருமணம் செஞ்சதால, அவங்க குடும்பத்துல அவளை என்ன வேணும்னாலும் செய்வாங்க. அவளை ஆணவக் கொலை செய்யக் கூட தயங்க மாட்டாங்க. புகார் கொடுத்து ஒருவாரத்துக்கு மேலாகியும் இன்னும் மெளனிகாவை போலீஸார் கண்டுபிடிக்கலை. ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறதுக்கு முன்னாடி என் மனைவியை மீட்டு என்கிட்ட ஒப்படைச்சிடுங்க” எனக் கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு