Published:Updated:

``தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பிதானே என் மகளை அனுப்பினேன்!’’- ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் தாய் கதறல்

சென்னை ஐ.ஐ.டி-யில் பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா.
ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா.

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.ஏ படித்து வந்தவர் பாத்திமா. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா, பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 2016- ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 மாணவ - மாணவிகள் சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி பாத்திமா.

சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி தற்கொலை செய்துகொண்டார். எம்.டெக் படித்த கோபால் பாபுவும் தற்கொலை செய்துகொண்டார். இவர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஐ.ஐ.டி தற்கொலைகளை போலீஸார் முறையாக விசாரிப்பதில்லை என்றே கூறப்படுகிறது. பாத்திமா இறப்பு விஷயத்திலும் தமிழ்நாடு போலீஸ், எதையோ மூடி மறைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடத்தில் கொடுத்த புகார் மனுவில் அவரின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மட்டுமல்ல ,பேராசிரியர்களும் ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் துணைப் பேராசிரியர் அதிதி ஷர்மா விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இவர், குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. ஐ.ஐ.டி-யில் படிக்க வரும் மாணவ - மாணவிகளில் பெரும்பாலோனோர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஐ.ஐ.டி-யில் நிலவும் சூழ்நிலை, பேராசிரியர்களின் அணுகுமுறை மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியில் நடக்கும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. மனநல மருத்துவர்களும் அறிவுரைகள் வழங்குகின்றனர். எனினும், பலன் அளிக்காமல் ஐ.ஐ.டி வளாகத்தில் தொடர்ச்சியாகத் தற்கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாத்திமா
பாத்திமா

பாத்திமா MA humanities Development Studies பாடப்பிரிவில் சேர்ந்து படித்து வந்தார். இந்தப் படிப்பு 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். இன்டர்னல் மார்க் குறைவாக எடுத்ததால், கடந்த சனிக்கிழமை தன் ஹாஸ்டல் அறையில் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. பாத்திமாவின் தந்தை லத்தீப், 'இந்தத் துறையைச் சேர்ந்த 3 பேராசிரியர்கள்தாம் என் மகள் தற்கொலைக்குக் காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார். கொல்லத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ''தன் மகள் கடினமான பாடங்கள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஏனென்றால், கடைசியாக நடந்த தேர்வில் என் மகள்தான் வகுப்பில் முதலிடம். பாத்திமாவின் செல்போனை ஆன் செய்தபோது ஸ்கீரின் ஸேவரில் தன் டேப்லட்டை பார்க்குமாறு கூறப்பட்டிருந்தது. அதில், என் மகளுக்கு நெருக்கடி கொடுத்த பேராசிரியர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்து. என் மகள் தற்கொலைக்கு அவர்கள்தாம் காரணம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, கொல்லத்தில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாத்திமாவின் தாயார், ''என் மகளுக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. வட மாநிலங்களில் இனரீதியாக நடைபெறும் சம்பவங்கள் என்னை பயமுறுத்தின. அதனால், என் மகளை அங்கே படிக்க அனுப்பவில்லை. தமிழ்நாடு பாதுகாப்பானது என்றுதான் அனுப்பி வைத்தேன். ஆனாலும் இப்படி நடந்துவிட்டது'' என்று கதறியுள்ளார்.

மாணவி பாத்திமா என்னிடத்தில் பேராசிரியர்கள் குறித்து எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை.
துறைத் தலைவர் உமாகாந்த் தாஸ்

மாணவி பாத்திமாவுக்கு மூன்று பேராசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை, MA Development Studies துறைத் தலைவர் உமாகாந்த் தாஸ் மறுத்துள்ளார், ''பாத்திமா தற்கொலை செய்துகொண்டது எங்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமாவுக்கு பேராசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததாக என்னிடத்தில் எந்தப் புகாரையும் அவர் தெரிவிக்கவில்லை. போலீஸார் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.