Published:Updated:

``ப்ளீஸ்... கொஞ்சம் இதெல்லாம் யோசிச்சு பாருங்க!’’ –கலங்கும் ஃபாத்திமா சகோதரி ஆயிஷா

ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட ஃபாத்திமா
ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட ஃபாத்திமா

`ஃபாத்திமா மிகவும் அப்பாவி. எப்போதும் புன்னகையுடன் இருப்பவள். எதையும் மனம் திறந்து பேசக்கூடியவள். அவள் சோகமாக இருந்தால், அதை அவளுக்கு மறைக்கத் தெரியாது.’

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், கடந்த நவம்பர் 9-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்டார்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

கேரளத்தைச் சேர்ந்த ஃபாத்திமாவின் செல்போனில், 'என் மரணத்துக்கு இந்தப் பேராசிரியர்கள்தான் காரணம்' என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டறிந்தார், அவரின் இரட்டைச் சகோதரி ஆயிஷா. ஃபாத்திமாவின் மரணம் இந்தியாவையே உலுக்கிய செய்தியாக மாறியது. இவ்வழக்கில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.

பல திருப்பங்களுடன் ஒவ்வொரு நாளும் புதிய கோணங்களையும் கட்டங்களையும் கடந்தவாறு சென்றுகொண்டிருக்கிறது ஃபாத்திமா லத்தீபின் மரணம். ஃபாத்திமா, தன் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பற்றிய குறிப்புகளை தன்னுடைய கைப்பேசியில் பதிந்திருந்ததே, இந்தத் திருப்பங்களுக்குக் காரணம். 20 பக்கங்களைக் கொண்ட அந்தக் குறிப்பைக் கண்டுபிடித்தது, ஃபாத்திமாவின் இரட்டைச் சகோதரியான ஆயிஷா.

ஆயிஷா
ஆயிஷா

''அக்காவின் மொபைலும் ஆதாரங்களும் எங்களிடம்தான் உள்ளன'' என்பவர், சகோதரியின் இழப்பு, அதைத் தொடரும் காட்சிகளால் துவண்டு போயிருந்தாலும், 'ஃபாத்திமாவின் மரணத்துக்கு நீதி கிடைப்பதுவரை விடமாட்டேன்' என்ற உறுதியுடன் இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

கனவைக் கலைத்த கல்வி வளாகம்!

''பொதுவாக, இரட்டையர்களுக்குள் ஆழமான இணக்கம் இருக்கும். நானும் ஃபாத்திமாவும் அப்படித்தான் வளர்ந்தோம், இருந்தோம். ஃபாத்திமா மிகவும் அப்பாவி. எப்போதும் புன்னகையுடன் இருப்பவள். எதையும் மனம் திறந்து பேசக்கூடியவள். அவள் சோகமாக இருந்தால், அதை அவளுக்கு மறைக்கத் தெரியாது. அவள் முகமே அதைக் காட்டிக்கொடுத்துவிடும். அவளுடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்படைத்தன்மை எப்போதும் இருக்கும். அனைத்தையும் பகிர்ந்துகொள்வாள்.

IIT Madras
IIT Madras

மனதால் மிகவும் உறுதியானவள். தான் விருப்பப்பட்டு செய்ய விரும்பும் எந்தச் செயலையும் முழு முயற்சியோடும் ஈடுபாட்டுடனும் முடித்துக்காட்டுவாள். ஐந்தாம் வகுப்பிலேயே கிளாசிக்கல் நாவல்கள், விருது வென்ற நாவல்களை எல்லாம் படிக்கத் தொடங்கினாள். பொதுஅறிவைத் தேடித் தேடி ஆராய்ந்து வளர்த்துக்கொள்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

மிக அறிவானவள். எப்போதோ எட்டாம் வகுப்பில் அவள் எழுதிய ஏதேனும் செய்திக் கட்டுரைகளைப் பற்றி யாராவது கேட்டாலும், அதை எப்படியெல்லாம் எழுதினாள் என்பதை ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வாள். 9 வயதிலேயே, தான் ஓர் ஆட்சி அலுவலர் (civil servant) ஆக வேண்டும் என்று தனக்கான இலக்கை நிர்ணயித்துவிட்டாள். 10-ம் வகுப்புப் படிக்கும்போதே, தன் கனவுகளை நனவாக்கும் வேலைகளில் பயணிக்கத் தொடங்கிவிட்டாள். சின்னச் சின்ன விஷயங்கள் முதல் அனைத்தையும் ஈடுபாட்டுடன் கற்க ஆரம்பித்தாள்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

பத்தாம் வகுப்புவரை நாங்கள் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஹுமானிட்டிஸ் (humanities) பாடம்தான் அவளின் விருப்பப்பாடமாக இருந்தது. அதனால் அவள் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை ஸ்டேட் ஸ்கூலில் (state school) படித்தாள். நான், படித்த பள்ளியிலேயே சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்தேன். அப்போதுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் முதன்முறையாகப் பிரிந்தோம். அதன் பின், கல்லூரிப் படிப்புக்காக அதிக மதிப்பெண்களுடன் அவள் ஐஐடியில் சேர்ந்தாள். இது எங்கள் இரண்டாவது பிரிவு. இப்போது நிரந்தரமாகப் பிரிந்தே போய்விட்டாள்.

ஒரு சலனம்... ஒரு சலனமின்மை... - இரு துயரங்களின் பின்புலம்!

நான் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கிறேன். ஃபாத்திமாவின் இழப்புக்குப் பிறகு, நான் இன்னும் கல்லூரிக்குச் செல்லவில்லை. என் சகோதரிக்கு நீதி கிடைப்பது ஒன்றுதான் எங்களுக்கான ஒரே ஆறுதலாக இருக்கும். அவளுக்கான நீதி கிடைத்தே ஆக வேண்டும். தன் வாழ்க்கையில் ஒருபோதும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவளுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? யார் மீதும் அவள் வெறுப்பை வைத்திருக்கவில்லை.

ஆயிஷா
ஆயிஷா

பிறரை எளிதில் மன்னிக்கக்கூடியவள். எதையும் வெளிப்படையாக எங்களுடன் பேசக்கூடியவள். அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. ப்ளீஸ்... கொஞ்சம் இதை யோசிச்சுப் பாருங்க! ஆயிஷா 19 வயதில், எங்களை விட்டுச் சென்றுவிட்டாள். எனக்கு ஒன்று மட்டும் வேண்டும், ஒன்றே ஒன்று மட்டும் வேண்டும். அவளுக்கான நீதி!''

அடுத்த கட்டுரைக்கு