Published:Updated:

`பிள்ளை மாதிரி வளர்த்த வாழையை வெட்டி அழிச்சிட்டீங்களே'- வனத்துறை செயலால் கதறும் பழங்குடிகள்

வெட்டிய வாழை
வெட்டிய வாழை

காப்புக் காடுகளில் விவசாயம் செய்வதாகச் சொல்லி, வாழை விவசாயத்தை, வளர்த்தவர்களையே வெட்டச் சொல்லி அழித்திருக்கிறது வனத்துறை.

``அத்துவான காட்டுல வாழுற எங்களை இப்படி வதைக்கிறீங்களே... பிள்ளைக மாதிரி வளத்த வாழையை வெட்டுறீங்களே... எங்க வீட்டுல இன்னிக்கு அரைக்காபடி அரிசி இல்லை. கூலிக்கும் போகமுடியல. வாழையை வெட்டி எங்க குடும்பத்தையே அழிக்குற மாதிரி அழிச்சீட்டீங்களே... அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம்வரைக்கும் இங்கதானே வாழுறோம். இந்தப் பாரஸ்டுல தத்தெடுக்குறோம்... தத்தெடுக்குறோம்னு சொல்றீங்க. இதுதான் நீங்கத் தத்தெடுக்குற லட்சணமா...'' என உயிர்வலியோடு கதறும் அந்த மலைக்கிராமப் பெண்ணின் குரல் நெஞ்சைப் பிழிகிறது.

வெட்டப்பட்ட வாழை
வெட்டப்பட்ட வாழை

கொடைக்கானல் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்டது கடப்பாரை கிராமம். சாலை வசதியே இல்லாத மலைக் கிராமம். அந்தக் கிராமத்தை அடைய பெரியகுளம் வழியாக 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அந்தக் கிராமத்தில் பன்னெடுங்காலமாக வசிக்கும் தொல்குடிகள் இருக்கிறார்கள். வனம்தான் அவர்களது வாழ்வாதாரம். குடியிருப்பை ஒட்டிய விவசாய நிலங்களில் வாழை விவசாயம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று அங்கு சென்று தேவதானப்பட்டி வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர், `அது வனப்பகுதி, வாழைகளை வளர்க்கக் கூடாது' எனச் சொல்லி, பழங்குடிகளை வைத்தே அவர்கள் வளர்த்த வாழையை வெட்ட வைத்திருக்கிறார்கள். 6 மாத வயதுடைய வாழைகளை, அழுதுகொண்டே வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். அதை வனத்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வேதனை பொறுக்க முடியாமல், அழுத பழங்குடிப் பெண்மணியின் குரல்தான் மேலே படித்தது.

வனத்துறையினர்
வனத்துறையினர்

இதுதொடர்பாக, கருத்துக்கேட்டால், ``அது வனத்துறைக்கான காப்புக் காடு. சட்டப்படி அங்கு விவசாயம் செய்யக் கூடாது. அதனால், அவர்களையே வெட்டச் சொன்னோம்'' என்கிறார்கள் வனத்துறையினர்.

``கொடைக்கானல் வனப்பகுதியில் பல்வேறு இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் பெரும் செல்வந்தர்கள் என்பதால் அங்கு சட்டம் பேசாத வனத்துறையினர், மண்ணின் மைந்தர்களான தொல்குடிகளை வதைக்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகச் சொல்பவர்கள், குத்தகை காலம் முடிந்த நிலங்களுக்கு நேரடியாகப் போய், வனத்துறை கட்டுப்பாட்டில் அந்த இடங்களைக் கொண்டு வரவேண்டியதுதானே. ஆனால், அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் விநியோகித்து, அவர்கள் நீதிமன்றம் செல்ல வழிகாட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அந்த வழக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை. தனியார்கள் அந்த இடத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

வெட்டப்பட்ட வாழை
வெட்டப்பட்ட வாழை

ஆனால், மலைக்கிராம மக்களிடம் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறார்கள். வனத்தை நம்பிப் மக்கள், வாழையைத் தானே பயிரிட்டார்கள். அதில் வனபாதுகாப்புக்கு எந்தச் சிக்கலும் இல்லையே? காப்புக்காட்டில் விவசாயம் செய்ததாகவே இருந்தாலும், முறைப்படி நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். அதன் பிறகுதானே இந்த நடவடிக்கைக்குப் போக வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது `இந்த ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இனி இங்கு விவசாயம் செய்யக் கூடாது' என எச்சரிக்கை செய்திருக்கலாம். அதைவிட்டு, சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறது வனத்துறை'' எனக் கொதிக்கிறார்கள் பழங்குடி அமைப்பின் தலைவர்கள்.

``பழங்குடியின மக்களைத் தத்தெடுத்துள்ளோம் எனச் சொல்லிக்கொள்ளும் வனத்துறை, இந்தக் கொரோனா காலத்தில் பழங்குடி மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. வாழைகளை வெட்டித் தற்சார்பு வாழ்க்கையையும் கெடுக்கிறார்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம்'' எனக் கலங்குகிறார்கள் பழங்குடி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு