Published:Updated:

`தங்கக்கட்டி கடத்தல் வழக்கில் நான் நிரபராதி' -தகிக்கும் காங்கிரஸ் டு பா.ஜ.க புள்ளி

பா.ஜ.க-வில் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்.
பா.ஜ.க-வில் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்.

திருவாடானையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் குட்லக் ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க -வில் சேர்ந்தார்.

தங்கக் கட்டிக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட நபர், பா.ஜ.க-வில் சேர்ந்தது ராமநாதபுரத்தில் உள்ள அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் 'குட்லக்' ராஜேந்திரன்.

பா.ஜ.க-வில் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்.
பா.ஜ.க-வில் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர் குட்லக் ராஜேந்திரன். காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர் இவர். இதன் பயனாக மாநில காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருந்த போது, குட்லக் ராஜேந்திரனை ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமித்தார். மேலும் திருவாடானை ஒன்றிய பெருந்தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் புதுக்கோட்டை அருகே சுமார் 12 கிலோ கடத்தல் தங்க கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குட்லக் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து குட்லக் ராஜேந்திரன் நீக்கம் செய்யப்பட்டார்.

குட்லக் ராஜேந்திரன்
குட்லக் ராஜேந்திரன்
உ.பாண்டி

இந்நிலையில் நேற்று திருவாடானையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க -வில் சேர்ந்தார். இந்த நிகழ்வு, பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள 'குட்லக்' ராஜேந்திரன் தரப்பினர், ''கொரோனா தொற்று உலகப் பேரிடராக மாறி உலகத்தையே அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் பிரதமரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பலதரப்பட்ட மக்களுக்கும் பிரதமரின் சிறப்புத் திட்டங்களின் மூலம் பலன் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் கரங்களை வலுப்படுத்த தமிழக காங்கிரஸ் முன்னாள் ராமநாதபுர மாவட்ட தலைவரான குட்லக் ராஜேந்திரன் பா.ஜ.க-வில் இணைந்தார். அவரின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அவர் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். தங்கக் கடத்தல் வழக்கில் அவரை நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அவரைத் தவறாகச் சித்திரிப்பது ஏற்புடையதல்ல'' என்கின்றனர்.

பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன்
பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன்

இதுகுறித்துப் பேசும் பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், ''எங்கள் கட்சியில் சேருவதற்குமுன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்து வந்தன. அவற்றை நீதிமன்றத்தில் சந்தித்து தன்னை நிரபராதி என நிரூபித்து வருகிறார். நீதிமன்ற நடவடிக்கைகளில் பா.ஜ.க எந்த வகையிலும் தலையீடு செய்யாது. குற்றம் சுமத்தப்பட்டவர் என்பதாலேயே ஒருவர் குற்றவாளியாக இருந்து விடமுடியாது. இதனடிப்படையிலேயே அவரை எங்கள் கட்சியில் இணைத்துள்ளோம். மாவட்டத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள், இதுபோன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு