Published:Updated:

`சுகாதாரம் இல்லை; பெருமளவு கூடும் வடமாநிலத் தொழிலாளர்கள்!’ - கூடங்குளம் சர்ச்சை #Corona

கூடங்குளம் அணு உலைகள்
கூடங்குளம் அணு உலைகள்

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஆயிரக்கணக்கான வட மாநில இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியை அணு உலைப் பூங்காவாக மாற்ற இருப்பதால் கூடுதலாக இரு அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடிக்கடி சுவரேறிக் குதிக்கும் நபர்... அச்சத்தில் மக்கள்... இது கூடங்குளம் அணு உலை சர்ச்சை!

அணு உலை கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் ஏராளமானோர் வேலை செய்வது வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடுமோ எனச் சுற்றுப்புற கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள்.

`கொரோனா அச்சம்; தும்மியதால் தாக்கப்பட்ட நபர்!' - வைரலான வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி

கொரோனா அச்சம் நீங்கும் வரையிலும் அணு உலை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இதை வலியுறுத்தி ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். 

அப்பாவு
அப்பாவு

அந்த மனுவில்,``கூடங்குளத்தில் முதல் இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக நான்கு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் 7,000 முதல் 10,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 5,000-க்கும் அதிகமானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அணு உலை கட்டுமானப் பணிகளில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அணு உலை வளாகத்தின் உள்ளேயும் அருகில் உள்ள கிராமங்களிலும் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். அவர்களில் தினமும் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊருக்குச் செல்வதும், வட மாநிலங்களிலிருந்து புதியவர்கள் வருவதுமாக உள்ளனர். 

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் வட மாநிலத் தொழிலாளர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று வருகிறார்கள். அவர்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஒப்பந்ததாரர்கள் செய்துகொடுக்கவில்லை.

சுகாதாரமற்ற சூழலில் வசிக்கும் வட மாநிலத் தொழிலாளர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அத்துடன், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் சுற்றித் திரிவதால், அவர்களால் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து இருக்கிறது. அதனால், கொரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரையிலும் கூடங்குளம் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு