Published:Updated:

`இதுக்கு அ.தி.மு.க-வை பா.ஜ.கவுடன் சேர்த்துவிடலாமே'- கொதிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ!

முன்னாள் எம்.எல்.ஏ-வான நயினாமுகமது
முன்னாள் எம்.எல்.ஏ-வான நயினாமுகமது

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர், நயினாமுகமது. இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்..ஏ-வாகப் பணியாற்றினார். தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-வாக இருந்த அவர், 2004-ம் ஆண்டு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.க-வில் இணைந்தார். 

`சசிகலாவும் அ.தி.மு.க-வில் இணைவார்'- பெங்களூரு புகழேந்தி!

அதன் பின்னர் அ.தி.மு.க-வின் சிறுபான்மை பிரிவுச் செயலாளராகப் பதவி வகித்த அவர் தற்போது மாவட்ட அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகப் பதவி வகித்தார். இந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்ஸை புறக்கணித்த அமைச்சர்கள்? - அ.தி.மு.க-வில் சலசலப்பை உண்டாக்கிய வரவேற்பு

இது குறித்து நயினாமுகமதுவிடம் கேட்டதற்கு, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான நம்பிக்கை காரணமாக அ.தி.மு.க-வில் இணைந்தேன். ஆனால், அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.கவின் செயல்பாடுகள் சரியில்லை. அவர் மத்திய அரசின் எந்தத் திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அதை எல்லாம் தற்போதைய அ.தி.மு.க அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. 

நயினாமுகமது
நயினாமுகமது

கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணியில் இருப்பதற்காகப் பாரதிய ஜனதாவின் கொள்கைகளை அப்படியே எற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், தற்போதைய அரசு மத்திய அரசு சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது. அப்படியானால் அ.தி.மு.க என்ற தனிக்கட்சி எதற்கு? பாரதிய ஜனதாவில் கட்சியைச் சேர்த்துவிடலாமே?

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை அ.தி.மு.க எதிர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைத்திருக்காது. அதனால் சட்டத்தையும் நிறைவேற்றியிருக்க முடியாது. ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டுவந்த அந்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அது நிறைவேற்றப்பட அ.தி.மு.க காரணமாகி விட்டது. 

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்காவிட்டால் மத்திய அரசால் நிறைவேற்றி இருக்க முடியாது.
நயினாமுகமது, முன்னாள் எம்.எல்..ஏ

தற்போது அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களின் சுயநலத்துக்காகவும் சொத்துகளைக் காப்பாற்றுவதற்காகவும் கொள்கைகளை எல்லாம் பாரதிய ஜனதாவிடம் அடகுவைத்து விட்டார்கள். இத்தகைய சூழலில் அ.தி.மு.க-வில் தொடர்ந்து நீடிக்க எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அதனால் கட்சியிலிருந்து விலகிவிட்டேன்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு